2.7 பிற

போர்க்களத்து வென்ற மன்னன் உறக்கங்கொள்ளும் ‘கண்படை நிலை’, செஞ்சோற்றுக் கடன்கழிக்கத் தன் உயிரை வீரர் ஈயும் ‘அவிப்பலி’, சான்றோரின் மேம்பாட்டைக் கூறும் சால்பு முல்லை, வேளாளன் புகழைக் கிணை வாசிப்பவன் சொல்லும் கிணை நிலை முதலான துறைகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.

2.7.1 கண்படை நிலை

உறக்கம் கொள்ளும் நிலை என்பது பொருள். கண்படை நிலை என்பது தனிச் சிற்றிலக்கியமாகவும் வளர்ச்சி பெற்றது. கொளு,

மண்கொண்ட மறவேந்தன்
கண்படைநிலை மலிந்தன்று              - (கொளு-29)

என விளக்குகிறது.

பகைவரின் மண்ணைக் கைப்பற்றிய வீரவேந்தனின் உறக்கத்தைப் பாராட்டுதல்’ என்பது பொருள். வெண்பா இதனை மிகுத்துக் காட்டுகிறது. ‘திறை கொடாத மன்னர் எல்லாம் திறை கொடுத்தனர். கூற்றுவனையும் வருத்தும் ஆற்றலுடைய வேந்தனுடைய குடைக்கீழ் நிலமகளும் தங்குகிறாள். அதனால் அவன் விழிகள் அழல் வீசாமல் உறக்கம் கொண்டன.’ இவ்வாறு கடமையை முடித்த சிறப்பு இத்துறையில் பேசப்படுகிறது.

2.7.2 அவிப்பலி

உயிரைப் பலியாகக் கொடுத்தல் என்பது பொருள். ஆவிப்பலி என்பது முதல் குறுகி அவிப்பலி ஆனது என்பர். ஒழுக்கங்களில் சிறந்தது செஞ்சோற்றுக் கடன் கழித்தல் என்பதைக் காட்டும் துறை இது. இதனைக் கொளு,

வெள்வாள் அமருள் செஞ்சோறு அல்லது
உள்ளா மைந்தர் உயிர்பலி கொடுத்தன்று         - (கொளு-30)

என விளக்குகிறது.

கடுமையான வாட்போரில் அரசனுக்காகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தலை அன்றிப் பிறவற்றை நினைக்காத வீரர்கள் தம் உயிரைப் பலியாகக் கொடுத்தல் என்பது பொருள். பலிகொடுத்தல் என்பது யாகம் செய்தலின் ஒரு பகுதி. வெண்பா, யாகத்தையும் போரையும் ஒப்பிட்டு இத்துறையை விளக்குகிறது.

சிறந்த(து) இதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப
மறந்தரு வாளமர் என்னும் - பிறங்(கு)அழலுள்
ஆருயிர் என்னும் அவிவேட்டார் ஆங்கஃதால்
வீரியர்எய் தல்பால வீடு.

செஞ்சோற்றுக் கடன் கழிப்பதே ஒழுக்கங்களில் சிறந்தது என்று உணர்ந்து போர்க்களம் என்னும் தீயிலே தம் உயிர் என்னும் அவியை இட்டுத் தம் வீரப்பண்பிற்கேற்ப வீரசுவர்க்கம் புகுதல் என்று வெண்பா விளக்குகிறது.

2.7.3 சால்பு முல்லை

சான்றோரது மேம்பாடு என்பது பொருள்.

வான்தோயும் மலைஅன்ன
சான்றோர்தம் சால்பு உரைத்தன்று            - (கொளு-31)

என்பது கொளு.

விண்ணைத் தொடும் மலை போல் உயர்ந்த சான்றோர்களது அமைதியைச் சொல்லல் என்பது கொளு தரும் விளக்கம்.

உறையார் விசும்பின் உவாமதி போல
நிறையா நிலவுதல் அன்றிக் - குறையாத
வங்கம்போழ் முந்நீர் வளம்பெறினும் வேறாமோ
சங்கம்போல் வான்மையார் சால்பு.

‘சங்கினைப் போன்று தூய தன்மையைக் கொண்ட சான்றோரது வாழ்க்கை முழுநிலாப் போல என்றும் நிறைந்து நிலைபெறுமே அல்லாமல், கடல் போன்று மிகுந்த பொருள் கிட்டுமாயினும் மாறாது.’ இவ்வாறு வெண்பா, பெரியோரது இயல்பைக் கூறுகிறது.

2.7.4 கிணை நிலை

கிணைப்பறை கொட்டுபவன் செயல் என்று பொருள். கிணைப்பறை வாசிப்பவனைப் பொருநன் என்பார்கள். இதனை,

தண்பணை வயல் உழவனைத்
தெள்கிணைவன் திருந்துபுகழ்கிளந்தன்று             - (கொளு-32)

எனக் கொளு விளக்குகிறது.

‘நல்ல கிணைப் பறையைக் கொட்டுபவன், மருத நிலத்தில் உழுது தொழில் செய்யும் வேளாளனுடைய நல்ல புகழினைச் சொல்லுதல்’ என்பது கொளுவின் பொருள். வேளாளனுடைய கடமை பிறர் பசி தீர்ப்பது. அப்புகழைப் பொருநன் பாடுவதாக வெண்பா காட்டுகிறது.

பகடுவாழ்(க) என்று பனிவயலுள் ஆமை
அகடுபோல் அங்கண்தடாரி - துகள்துடைத்துக்
குன்றுபோல் போர்வில் குருசில் வளம்பாட
இன்றுபோம் எங்கட்கு இடர்

‘குளிர்ந்த கழனியுள் ஆமையினது வயிறு போன்ற நடுப்புறத்தைக் கொண்ட (கண்ணையுடைய) கிணைப் பறையினைத் துடைத்து, ‘ஏர் வாழ்க’ என்று வாழ்த்தி, குன்று போன்ற வைக்கோற் போரினை உடமையாகக் கொண்ட வேளாளனின் செல்வ வளத்தைப் பாடிய உடனே எம் வறுமை அகன்றுவிடும்.’ இவ்வாறு கிணை வாசிப்பவன் போற்றுவதை வெண்பா காட்டுகிறது.