2.8 உண்மை வெற்றி அரசனுடைய போர் வெற்றி மட்டுமன்றிப் பார்ப்பனர் முதலாக உள்ள அனைத்துப் பிரிவனரும் உறழ்ந்தும் இயல்பாகவும் பெறும் வெற்றிகள் குறித்துப் பார்த்தோம். வாகைப்படலத்தில் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் பொருளொடு புகறல், அருளொடு நீங்கல் என்ற இரு துறைகளை இறுதியாகக் கூறுகிறார். இவற்றில் வாழ்க்கை உண்மைகளாகப் பின்பற்றப்பட வேண்டிய இரண்டு கொள்கைகளைக் கூறிப் பொருள் பற்று இல்லாமை, உலகப் பற்றை நீக்கல் என்பனதான் உண்மையான வெற்றி என உணர்த்துகிறார். மெய்ப்பொருளை விரும்புதல் என்று பொருள். இதனைத் தொல்காப்பியம் ‘பொருளொடு புணர்ந்த பக்கம்’ என்கிறது. இது புறநானூறு 186வது பாடலிலும் பதிற்றுப்பத்து 74வது பாடலிலும் இடம் பெற்றுள்ளது. இதனை, மெய்யாய பொருள் நயந்தன்று - (கொளு-83) எனக் கொளு உணர்த்துகிறது. உலகப் பொருள்களின் மீதுள்ள பற்றினை நீக்கி, மெய்ப்பொருளை விரும்புதல் என்று பொருள். அதாவது உண்மையான தத்துவப் பொருளை ஆய்ந்து வாழ்வதே வெற்றி என உணர்த்துதல். இதனை வெண்பா, தாம்மேனி நோயும் தலைவரும் - யாம்இனி மெய்ஐந்து மீதூர வைகாது மேல்வந்த ஐஐந்தும் ஆய்வ(து) அறிவு. என விளக்குகிறது. ‘நமது இளமைப் பருவம் சென்றது ; இனி முதுமை வருதல் தவிர்க்க முடியாதது ; இனி நோய்களும் வரும் ; ஆதலால் உடல் முதலான ஐந்து பொறிகளும் நம்மை வெற்றி கொள்ள விடாமல், இருபத்தைந்து தத்துவங்களையும் ஆய்ந்து உணர்வதே நல்லறிவாகும். ஐந்து ஐந்தாக உள்ள புலன்கள், பூதங்கள், உணர்வுகள், கன்மங்கள், அந்த கரணமும், சீவனும் என்பன ஐயைந்து எனப்படுகின்றன. அருளைக் கடைப்பிடித்து உலகை நீங்கல் என்பது பொருள். இதனை அருளொடு புணர்ந்த அகற்சி எனத் தொல்காப்பியம் உணர்த்துகிறது. இத்துறையை, நலிவுகண்டு நயப்புஅவிந்தன்று - (கொளு-34) எனக் கொளு எடுத்துக் காட்டுகிறது. முழங்கும் கடலையுடைய உலகத்தின் துன்பத்தை உணர்ந்து அதன் மீதுள்ள பற்றைத் தவிர்த்தல் என்று கொளு விளக்குகிறது. இயக்கிய யாக்கை இறாமுன் - மயக்கிய பட்படா வைகும் பயன்ஞால நீள்வலை உட்படாம் போதல் உறும். ‘நிலையற்றதும் நோய்க்கு இடமானதுமான இந்த ஊன் உடம்பு அழிவதற்கு முன்பாகவே, இந்த உலகின் வஞ்சனையான இயல்பை அறிந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பும் அருளும் காட்டும் பெருநோக்கத்துடன் வாழ்ந்து உலகம் என்னும் வலையில் சிக்காமல் தப்பிப் போதலே உறுதியானது.’ இவ்வாறு உறுதிப்பொருள் எது என வெண்பா விளக்குகிறது. |