3.0 பாட முன்னுரை

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை முதலானவற்றில் சிறப்புற்ற ஆண்மகனது ஒழுகலாறுகளை உணர்த்துவது பாடாண் திணை. பாடாண் எனில் பாடப்படும் ஆண்மகனுடைய ஒழுகலாறு என்று பொருள்படும். பாடாண் படலத்தின் மூலம் அரசர்களிடம் பரிசிலர் பரிசில்வேண்டும் முறை பற்றியும், அரசர்களை வாழ்த்தும் முறை பற்றியும், அவர்களது கொடைச் சிறப்புப் பற்றியும், அவர்களுக்கு அறிவுறுத்துதல் பற்றியும், போற்றுதல் பற்றியும், கடவுள் வாழ்த்து முறை பற்றியும், கைக்கிளை முதலான காமக்கூறுகள் பற்றியும் இப்பாடத்தில் காணலாம்.