3.1 பாடாண் படலமும் துறைகளும் |
|
அரசனுடைய புகழ், கொடை, அளி முதலானவற்றைக் கூறும் புறத்திணை இது. வெட்சி முதல் வாகைத்திணை வரை பூக்களால் திணைப்பெயர் அமைந்தது. வெட்சி முதலான போர்களை மேற்கொள்ளும்போது அவ்வப் பூக்களைச் சூடுவர். வாகை வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு எனினும் வாகை மாலை சூடுதல் மரபில் உண்டு. ஆனால் பாடாண் என்பது ஒருவனைப் பற்றிப் பாடிச் சிறப்பிப்பதாதலின் இதற்குப் பூமாலை சூடும் மரபு இல்லை. ஆகவே பூவால் அன்றிச் செய்தியால் இப்படலத்திற்குப் பெயர் ஏற்பட்டுள்ளது எனலாம். புறநானூற்றில் பாடாண் திணைப் பாடல்கள் நிறைய உள. பாடாண் படலம் 47 துறைகளைக் கொண்டது. அவை 2. கடவுள் வாழ்த்து 3. பூவை நிலை 4. பரிசில் துறை 5. இயன்மொழி வாழ்த்து 6. கண்படை நிலை 7. துயிலெடை நிலை 8. மங்கல நிலை 9. விளக்குநிலை 10. கபிலை கண்ணிய புண்ணிய நிலை 11. வேள்வி நிலை 12. வெள்ளி நிலை 13. நாடு வாழ்த்து 14. கிணைநிலை 15. களவழி வாழ்த்து 16. வீற்றினிதிருந்த பெருமங்கலம் 17. குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை 18. மணமங்கலம் 19. பொலிவு மங்கலம், 20. நாள் மங்கலம் 21. பரிசில் நிலை 22. பரிசில் விடை 23. ஆள்வினை வேள்வி, 24. பாணாற்றுப்படை 25. கூத்தராற்றுப்படை 26. பொருநராற்றுப் படை 27. விறலியாற்றுப்படை 28. வாயுறை வாழ்த்து 29. செவியறிவுறூஉ 30, குடைமங்கலம் 31. வாள் மங்கலம் 32. மண்ணு மங்கலம் 33. ஓம்படை 34. புறநிலை வாழ்த்து 35. கொடி நிலை 36. கந்தழி 37. வள்ளி 38. புலவராற்றுப்படை 39. புகழ்ந்தனர் பரவல் 40. பழிச்சினர் பணிதல் 41. கைக்கிளை 42. பெருந்திணை 43. புலவிபொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு 44. கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயந்த பக்கம் 45. கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் 46. குழவிக்கண் தோன்றிய காமப்பகுதி 47. ஊரின்கண் தோன்றிய காமப்பகுதி ஆகியன. தொல்காப்பியர் பாடாண் திணையில் 21 துறைகள் கூறியுள்ளார். பூவை நிலை, வெள்ளி நிலை, நாடு வாழ்த்து, கிணைநிலை, களவழி வாழ்த்து, வீற்றினிதிருந்த பெருமங்கலம், குடுமி களைந்த புகழ்சாற்று நிலை, மண மங்கலம், பொலிவு மங்கலம், ஆள்வினை வேள்வி, புலவராற்றுப்படை, கைக்கிளை, பெருந்திணை ஆகியன வெண்பாமாலையில் மிகுதியாகக் கூறப்பட்டுள்ள துறைகள். இது பாடாண் திணை வளர்ச்சியைக் காட்டுகிறது. |