3.3 பரிசில்
வேண்டுதல்
சிறப்பு மிக்க அரசனிடத்துப் பரிசில் பெறுவோர் அவனது
வாயிலை அணுகி வரவை அறிவிப்பர்; அவன் வணங்கும்
கடவுளரை வணங்குவர்; இன்ன பரிசை விரும்புகிறோம் என
வெளிப்படுத்துவர்; இன்னின்னார் இன்னின்னது கொடுத்தது போல்
கொடுக்க வேண்டுமென்பர். இச்செயல்களை
வாயில் நிலை,
கடவுள் வாழ்த்து, பூவை நிலை, பரிசில் துறை, இயன்மொழி
வாழ்த்து
ஆகிய துறைகள் விளக்குகின்றன. இப்பகுதியில் இவை
குறித்துக் காண்போம்.
3.3.1 வாயில் நிலை
வாயிலை அடைதல் என்பது இதன்பொருள். அரசனது
அரண்மனை வாயிலை அடைந்த பரிசிலன் தன் வரவை
அரசனுக்குக் கூறுமாறு வாயிற் காப்பவனிடம் கூறுதல் என்பது
கொளு தரும் விளக்கம்.
புரவலன் நெடுங்கடை குறுகிய என்னிலை
கரவின்(று) உரையெனக் காவலற்(கு) உரைத்தன்று (கொளு.2)
தன்னுடைய திறனையும் வருகையையும் நோக்கத்தையும் மறைக்காது
காவலன் சொல்லவேண்டும் எனப் புலவன் கேட்டுக்கொள்வான்.
இதற்கு வெண்பா தகுந்த விளக்கமளிக்கிறது.
நாட்டிய வாய்மொழி நாப்புலவர்
நல்லிசை
ஈட்டிய சொல்லான் இவனென்று - காட்டிய
......................................................................................
வாயிலோய் வாயில் இசை
‘வாயில் காவலனே, வந்துள்ள புலவன், என்றும் நிலைக்கும்
வகையில் பாடும் ஆற்றல்
பெற்ற அறிவினையுடையோர் புகழும்
வண்ணம், நின்னைப் புகழ்ந்து பாடும் சொல்லாற்றல் பெற்றவன்;
வந்துள்ளான் என்று அரசனிடம் கூறுவாயாக’ என்பது
வெண்பாவின் பொருள். தன் ஆற்றலைப்
புலவன் வெளிப்படுத்தி
அரசனைக் காண அனுமதி வேண்டுகிறான்.
3.3.2 கடவுள் வாழ்த்து, பூவை நிலை
முத்தெய்வங்களில் அரசனால் தொழப்படும் தெய்வத்தைப்
புலவர்கள் முறைப்படி வாழ்த்துவர். அத்தெய்வத்தின் நிறத்தை
எடுத்துரைப்பர். இது கடவுள் வாழ்த்து, பூவை நிலை ஆகிய
துறைகளில் காட்டப்படுகிறது.
கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல் என்பது இதன் பொருள். இதனைக்
கொளு,
காவல் கண்ணிய கழலோன்
கைதொழும்
மூவரில் ஒருவனை எடுத்து உரைத்தன்று (கொளு.3)
எனக் காட்டுகிறது. ‘உலகைக்
காக்கும் அரசன் கைகூப்பி வணங்கும் முப்பெருந் தெய்வங்களுள் ஒன்றை வாழ்த்துதல்’
என்பது பொருள்.
வெண்பா, திருமாலின் சிறப்பை வாழ்த்துவதைக் காட்டுகிறது.
‘வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய உருவம் வெளிப்படுத்தாய் - வெய்ய
அடுந்திறல் ஆழி அரவணையாய் என்றும்
நெடுந்தகை நின்னையே யாம்’
‘திருமாலே! நீ நிலமடந்தையைத் திருவடியில் அடக்கினாய்; உலகில்
உள்ளோர்
பலரும் உய்ய அவதாரம் எடுத்தாய்; சக்கரப்படையையும்
பாம்புப் படுக்கையையும் கொண்டுள்ளாய்’
என்று வாழ்த்துதல் பற்றி
வெண்பா கூறுகிறது.
பூவை நிலை
பூவை எனில் காயாமரம் என்று பொருள். காயாம்பூவைப்
புகழ்தல் என்பது பூவை நிலை.
கறவை காவலன் நிறனொடு
பொரீஇப்
புறவுஅலர் பூவைப் பூப்புகழ்ந் தன்று (கொளு.
4)
‘ஆனிரையைக்
காக்கும் காவலன் (திருமால்) நிறத்தொடு ஒப்புக்காட்டிக் காட்டில் மலர்ந்த
காயாம் பூவைப் புகழ்தல்’ என்பது பொருள். காயாம்பூ நிறம் திருமாலின் நிறத்தை
ஒத்திருக்கும் தன்மைக்காக அதைப் பாராட்டுதல் என்பதும் இறைவனின் மேனி நிறத்தைப்
பாராட்டுதலேயாம்.
வெண்பா இதனை
‘பூவை விரியும் புது மலரில் பூங்கழலோய்
யாவை விழுமிய யாமுணரேம் - மேவார்
மறத்தொடு மல்லர் மறம்கடந்த காளை
நிறத்தொடு நேர்தருத லான்’
‘மாயவனது நிறத்தோடு உவமை கொள்ளுதலால் காயா மலரைப்
போலச் சீரியவை எவை
என நாங்கள் அறிந்திலேம்.’
3.3.3 பரிசில் துறை, இயன்மொழி வாழ்த்து
பரிசிலர் இன்ன பொருள் பரிசிலாக வேண்டுமென
அரசனிடம் கேட்பர்; அதுபோலப்
பிற வள்ளல்கள் கொடுத்ததைக்
கூறி அதுபோலக் கொடுக்க வேண்டுவர். இதனைப்
பரிசில்துறை,
இயன்மொழி வாழ்த்து முதலான துறைகள் காட்டுகின்றன. பரிசிலர்
இவ்வாறு
வெளிப்படையாக வேண்டுவதை இத்துறைகள்
காட்டுகின்றன.
பரிசில் துறை.
பரிசில் வேண்டுதலைக் காட்டும் துறை என்பது இதன்
பொருள்.
மண்ணகம் காவல் மன்னர்
முன்னர்
எண்ணிய பரிசில் எதுஎன உரைத்தன்று (கொளு.5)
என விளக்குகிறது. ‘நாட்டைக் காக்கும் மன்னனிடம் இரவலன்
எண்ணிய பரிசில்
இது எனக் கூறுதல்’ என்பது பொருள்.
இரவலன் வேண்டும் பரிசு இன்னதென எடுத்துக்காட்டி,
வெண்பா விளக்குகிறது.
வரிசை கருதாது. வான் போல் தடக்கைக்
குரிசில் நீ நல்கயாம் கொள்ளும் - பரிசில்
அடுகளம் ஆர்ப்ப அமரோட்டித் தந்த
படுகளி நால்வாய்ப் பகடு.
‘கார்மேகம் போலக் கொடுக்கும் கைகளைக் கொண்ட மன்னனே!
என் தகுதியைப்
பாராதே. போர்க்களத்தில் பகைவரை வென்று நீ
கைப்பற்றிக் கொண்டுவந்த களிறுகளில் ஒன்றை யான் பரிசிலாகப்
பெறத் தருவாயாக’ என்பது வெண்பா தரும் எடுத்துக்காட்டு.
இயன்மொழி வாழ்த்து
இயல்பைக் கூறி வாழ்த்துதல் என்பது பொருள். பரிசில்
பெறுவதற்காக இத்தகைய
வாழ்த்து மொழியப்படும். இத்துறைக்கு
இரண்டு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
‘இன்னோர் இன்னவை கொடுத்தார்
நீயும்
அன்னார் போல அவை எமக்(கு) ஈக என
என்னோரும் அறிய எடுத்துரைத் தன்று (கொளு.6)
எனக் கொளு விளக்குகிறது.
‘இத்தன்மையையுடையவர்கள் இத்தன்மையுடைய பொருளை
வழங்கினார்கள்; நீயும் அத்தன்மையுடைய
பொருள்களை
வழங்குவாயாக என எல்லோரும் அறியச் சொல்லுதல்’ என்பது
பொருள்.
பாரியும் பேகனும் கொடுத்த கொடைகளைக் காட்டி
அதுபோலத் தர வேண்டுமெனக் காட்டுகிறது,
வெண்பா.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத்(து) இசைவிளங்கத் - தொல்லை
இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன்
பாரி
முல்லைக்குத் தேரும், பேகன் மயிலுக்குப் போர்வையும் அவை கேளாமலே கொடுத்தனர்.
அதனால் உலகில் புகழ்பெற்றனர். அவர்கள் போல நீயும் எனக்குக் கொடுக்கவேண்டும்’
என வெண்பா விளக்குகிறது.
2. மன்னனின் சிறப்பு இயல்புகளைக் கூறுவதும் இயன்மொழி
வாழ்த்து என இரண்டாவது
விளக்கம் அமைந்துள்ளது.
மயல்அறு சீர்த்தி மான்தேர்
மன்னவன்
இயல்பே மொழியினும் அத்துறை ஆகும்’ (கொளு.7)
‘மிக்க புகழையும் தேரினையும் உடைய அரசனின் தனிமையைச்
சொல்லுதலும் அத்துறை
சார்ந்தது’ என்பது பொருள்.
புறநானூற்றில் இத்தகைய இயன்மொழி வாழ்த்துப் பாடல்களைக்
காண முடியும். வெண்பா, ‘போரில் அரசன் தன் உயிரைப்
பாதுகாத்தலை நினையான்; இரவலர்க்குக் கொடுக்கும்போது
இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என வரையறை கொள்ளான்;
உயிர்களைப் பேணுதலில்
இன்னாரையே காக்க வேண்டும் என்று
வரையறை செய்யான்’ எனச் சிறப்பு இயல்புகளை
எடுத்துக்காட்டுகிறது.
|