4.2 வீரத்தைப் போற்றுதல் அரசன், தன் தளராத வீரத்தால் வெற்றியைப் பெற வேண்டுமென மற்றவர் வாழ்த்துதல் மரபு. அரசனுடைய வீரத்தைப் போற்றுதல் என்பது உன்ன நிலை, ஏழக நிலை, கழல் நிலை என்னும் துறைகளில் கூறப்படுகின்றது. போர்க்களத்தே வெற்றி ஒன்றே பேசப்படும். போரில் வெல்ல வேண்டுமெனப் பிறர் விரும்பும் நிலையும் உண்டு என்பதால் இவை மற்ற திணைகளில் கூறப்படாமல் பொதுவியலில் கூறப்பட்டிருக்கின்றன. உன்னம் என்பது சிறிய இலைகளையும் பொன்னிறப் பூவையும் உடைய ஒரு மரம். அக்காலத்தில் இது நிமித்தம் பார்க்கவும் பயன்பட்டது. அரசன் போருக்குச் செல்கையில் இது தழைத்துக் காணப்பட்டால் வெற்றி கிட்டும் என்றும், வாடிக் காணப்பட்டால் தோல்வி கிட்டும் என்றும் கருதினர். ஏழகம் என்பது ஆட்டுக்கிடாய். அரசர் யானை, குதிரை மேல் அன்றி ஆட்டின்மீதும் ஏறிப் போருக்குச் செல்லல் உண்டு என்பதை இது காட்டுகிறது. கழல் என்பது போர்க்களத்து அணிந்து செல்லும் அணி. உன்ன மரத்தைக் கொண்டு நிமித்தம் பார்க்கும் நிலை என்பதை இது குறிக்கிறது. நிமித்தம் பார்க்கும் உன்ன மரத்தோடு இணைத்து அரசனது வீரத்தை உரைப்பது என்பது இதன் பொருள். உன்னம் சேர்த்தி உறுபுகழ் மலிந்தன்று என்பது கொளு. ‘சிறப்பையுடையவனும் கழல் அணிந்தவனுமாகிய மன்னனை உன்ன மரத்தோடு சேர்த்து அவன் புகழைக் கூறுதல்’ என்பது பொருள். ‘இவ்வரசனுக்கு அடங்காத மன்னரெல்லாம் இப்பொழுது தோற்று அடங்கும்வண்ணம் உன்ன மரமே! நம் அரசனின் நல் ஊழை விளக்குவது போன்று தளிர்ப்பாயாக’ என்பது வெண்பா. அரசனின் வெற்றிக்காக உன்னமரத்தினை வேண்டுதல் என்பது இதில் புலப்படுகிறது. உன்ன மரத்தைக் கொண்டு நிமித்தம் பார்க்கும் வழக்கம் இருந்திருப்பது இதனால் புலப்படுகிறது. ஏழகம் என்பது ஆட்டுக்கிடாயில் ஏறிச் செல்வதைக் குறிக்கும். இத்துறைக்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன. யானை, குதிரை இவற்றின் மேலன்றி ஆட்டுக்கிடாயின் மீது ஏறிப் போருக்குச் செல்லினும் வெல்வான் என்பது ஒரு விளக்கம். ஆட்டுக்கிடாயில் ஊர்ந்து செல்லும் இளையவன் எனினும் வெல்வான் என்பது மற்றொரு விளக்கம். தாழ்வில் ஊக்கமொடு தகைபுகழ்ந் தன்று வேந்து நிற்றலும் ஏழக நிலையே என்பன கொளுக்கள். ‘ஆட்டுக்கிடாயில் ஊர்ந்து போருக்குச் செல்லும் நிலையினன் எனினும் அவன் வீரமும் ஊக்கமும் குறைவுடையன அல்ல என்று பாராட்டுதல்’ என்பது முதல் கொளுவின் விளக்கம். ‘ஆட்டுக்கிடாயின் ஊரும் இளையவன் ஆயினும் அரசனாக ஆளும் தகுதிமிக்கவன் என்றும் போற்றுதல்’ என்பது இரண்டாம் கொளுவின் விளக்கம். யானை, குதிரை மேல் அன்றி ஓர் ஆட்டுக்கிடாய் மீது ஏறிச் சென்றாலும் அரசன் ஆற்றல் குறைந்ததன்று; அவனுடைய பகைவர்கள் அவனுக்கு அஞ்சித் தாழிட்டு இருப்பர்’ என்பது முதல் கொளுவிற்கான வெண்பா தரும் விளக்கம். ‘ஆட்டுக்கிடாய் மேல் ஏறி விளையாடும் இளமைப் பருவத்திலேயே அரசாட்சியை ஏற்றுத் திறம்பட ஆளும் இவனை இளையவன் என்று விலக்க வேண்டாம்; சிங்கம் குட்டி எனினும் பெரிய யானையை அழிக்கும் ஆற்றலுடையது’ என்பது இரண்டாம் கொளுவிற்கான வெண்பாவின் கருத்தாகும். கழல் சூடும் நிலை என்பதைக் குறிக்கும். போருக்காகக் கழல் சூடும் நிலையுடையவனின் வீரத்தைக் கூறுதல் என்பது பொருள். கடுமுரண் வயவன் கழல்புனைந் தன்று என்பது கொளு. வீரர்கள் இறந்துபடும் கடிய போரில் கலந்து கொள்வதற்காக அரசன் ஒருவன் கழல் அணிந்த நிலையைப் புகழ்வது என்பது பொருள். ‘சில ஆண்டுகளுக்கு முன்னர்க் கிண்கிணி அணிந்த கால்களில் இவ்வரசன் வீரக்கழலைக் கட்டிக் கொண்ட செய்தி, பகைவர்க்கு அழிவைத் தருவது; இவனை எதிர்ப்பவர் வீர சுவர்க்கம் புகுதல் உறுதி’ என்பது வெண்பா தரும் விளக்கம். |