|   தொல்காப்பியர் காலத்தில் அகத்திணையாகக் 
 கொள்ளப்பட்ட 
 கைக்கிளைத் திணை,  புறப்பொருள் வெண்பா மாலையில் 
 புறத்திணையாக ஆக்கப்பட்டது. இது  புறப்பொருள் வெண்பா 
 மாலையில் 11ஆவது திணை. இதில் 19 துறைகள் உள்ளன. இது 
 ஆண்பால் கைக்கிளை, பெண்பால் கைக்கிளை என இரு 
 பகுதிகளாக விளக்கப்பட்டுள்ளது.   கைக்கிளை என்ற தொடருக்குச் சிறிய 
 உறவு என்பது பொருள் 
 ;சிறிது காலமே நிற்கும் உறவு இது எனலாம். கை என்பதற்குத் 
 தனிமை என்றும் பொருள் உண்டு. கைம்பெண் என்பதில் 
 இப்பொருளைக் காணலாம். எனவே கை்கிளை என்பது தனித்த 
 உறவு என்றும் பொருள்படும். ஆணோ, பெண்ணோ தாமே 
 கொள்ளும் காதலைக் கைக்கிளை என்பர். கைக்கிளை 
 ஒருதலைக்காமம் என்று நம்பி அகப்பொருள் விளக்குகிறது.   தொல்காப்பியர் காலத்தில் காமப் பருவம் அடையாத 
 பெண்ணைப் பருவம் அடைந்தவளாகக் கருதிக் காதல் கொள்வது 
 கைக்கிளை எனப்பட்டது. கைக்கிளை என்பது ஆண்மகனுக்குரியது 
 என்றும் கூறப்பட்டது. காமப்பருவம் எய்தாத ஆணிடம் பெண் 
 காதல் கொள்வது கூறப்படவில்லை. ஆனாலும் பருவம் அடைந்த 
 ஆணைப் பெண் ஒருதலையாக விரும்புதல் புறமாகக் 
 கொள்ளப்பட்டது. நக்கண்ணையார், ஆமூர்மல்லனைப் பற்றிப் 
 பாடிய கைக்கிளைப் பாடல்  
 புறநானூற்றில் (83, 84, 85) 
 தொகுக்கப்பட்டுள்ளது என்பது இதற்குச் சான்று எனலாம். 
 ஆண்பால் கைக்கிளைப் பாடல்கள்  கலித்தொகையில் (56, 57, 58, 
 109) இடம்பெறுகின்றன.  முத்தொள்ளாயிரத்தில் அகப்பாடல்கள் 
 எல்லாமே ஒருதலைக் காதலைக் கூறும் கைக்கிளைப் பாடல்கள் 
 என்பது குறிப்பிடத்தக்கது. கலம்பகத்தின் உறுப்பாகவும் கைக்கிளை 
 உள்ளது.   நம்பியகப்பொருள்          அகத்திணையாகவும் 
 அகப்புறத்திணையாகவும் கைக்கிளையைக் கொள்கிறது. காதலின் 
 தொடக்க நிலையை அது  
 அகக் கைக்கிளை  என்கிறது. 
 காமப்பருவம் அடையாத பெண்ணிடம் காதலைப் புலப்படுத்துதலை 
 அகப்புறக்கைக்கிளை  என்கிறது.   புறப்பொருள் வெண்பா 
 மாலை பருவமடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் 
 ஒருதலைக் காதலைக் கைக்கிளைத் திணையாகக் கொள்கிறது.   பெரும்பாலும் போர்த்திணைகள் பற்றிப் பேசும்
 
 புறப்பொருள் 
 வெண்பா மாலை ஒருதலைக் காதலையும் அகச்சிறப்பற்றதாகக் 
 கருதிப்     புறத்தில் சேர்த்திருக்கிறது. இதில் காணும் 
 துறைக்கொளுக்களும் வெண்பாக்களும் காதலைச் சுவைபடக் 
 கூறுகின்றன. பாடப்பகுதியில் ஆண் ஒருதலைக் காதல் கொள்ளும் 
 நிலையை  ஆண்பால் கூற்று I என்றும், அக்காதலால் தவிக்கும் 
 நிலையை  ஆண்பால் கூற்று II என்றும் கொண்டு பகுத்து 
 விளக்கப்படுகிறது. அதுபோலவே பெண் ஒருதலைக் காதல் 
 கொள்ளும் நிலையும் இரண்டு பிரிவாக விளக்கப்படுகிறது. |