5.3 பெண்பால் கூற்று - I

நாம் ஏற்கெனவே கண்டதுபோலப் பெண், கைக்கிளை கொண்டு பேசுதல் தொல்காப்பிய மரபில் கூறப்படவில்லை. சங்கப் பாடல்களிலும் அக மரபில் இல்லை. இதனைப் புறமாகக் கொண்டனர். நக்கண்ணையார் பாடல் புறத்தில் சேர்க்கப்பட்டது என்பதைப் பார்த்தோம். புறப்பொருள் வெண்பா மாலை பெண்பால் கைக்கிளையையும் சேர்த்துப் புறத்திணைகளை வகுத்துள்ளது. இப்பகுதியில் ஓர் ஆணைப் பெண் ஒருத்தி கண்டு விரும்பி மனத்தில் இருத்திக்கொள்கின்ற காதல் உருவாக்க நிலை சொல்லப்படுகிறது. காண்டல், நயத்தல், உட்கோள் ஆகிய மூன்று துறைகளில் காதல் அரும்பும் நிகழ்வு சொல்லப்படுகிறது.

5.3.1 காண்டல்

காணுதல் என்பது பொருள். கொளு இதற்கு,

தேம்பாய் தெரியல் விடலையைத் திருநுதல்
காம்புஏர் தோளி கண்டுசோர்ந்(து) அன்று

என விளக்கமளிக்கிறது. ‘தேன் நிறைந்த பூமாலை அணிந்த காளையை, அழகிய நெற்றியையும் மூங்கில் தோள்களையும் உடைய பெண் கண்டு காதல் ஏக்கம் கொள்ளல்’ என்பது பொருள். வெண்பா, பெண்ணின் கூற்றாக இத்திணையை விளக்குகிறது: ‘என் ஆசை என்னை நெருக்க அவனிடம் மயங்கியது கண்டு ஊர் அலர்தூற்றவும் அவன் என்னைக் காணவில்லை. அவனையே பார்த்தபடி இருக்கிறேன் நான்’.

5.3.2 நயத்தல்

ஆசை கொள்ளுதல் என்பது இதன் பொருள். கொளு இதற்கு,

கல்நவில் திணிதோள் காளையைக் கண்ட
நல்நுதல் அரிவை நயப்புஉரைத்(து) அன்று

என விளக்கமளிக்கிறது. ‘திண்ணிய தோள்களையுடைய தலைவனைக் கண்ட நல்ல நெற்றியினைக் கொண்ட பெண்ணின் ஆசையைச் சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா, பெண்கூற்றாக இதனை மேலும் விளக்குகிறது. ‘மலையைஒத்த தோள்களை உடையவளைக் கண்டேன்; என் கண்ணுக்கு அவன் அழகு அமுதமாக இனிக்கிறது. அவன் தோள்கள் என் மார்புகளைத் தழுவினால் எப்படி இருக்கும்’.

5.3.3 உட்கோள்

நெஞ்சத்தில் நினைத்தது என்பது இதன்பொருள். கொளு இதனை,

வண்டுஅமர் குஞ்சி மைந்தனை நயந்த
ஒள்தொடி அரிவை உட்கொண்(டு) அன்று

என விளக்குகிறது. ‘தலைவனை விரும்பிய தலைவி காதலை நெஞ்சில் கொண்டது’ என்பது பொருள். வெண்பா இதனை,

உள்ளம் உருக ஒளிவளையும் கைநில்லா
கள்அவிழ் தாரானும் கைக்(கு) அணையான் - எள்ளிச்
சிறுபுன் மாலை தலைவரின்
உறுதுயர் அவலத்(து) உயலோ அரிதே

எனப் புலப்படுத்துகிறது. ‘காதல் துன்பத்தால் மெலிய, வளையல்களும் கழல்கின்றன; தேன் சிந்தும் மாலையை உடைய தலைவன் என் கைகளுக்குக் கிட்டவில்லை; மாலைக்காலம் செய்கின்ற துன்பத்திலிருந்து பிழைத்தல் அரிது!’