| 6.4 இருபால் பெருந்திணை - II  
     தலைவி தலைவனது அருளைப் பெற வெறிக்கூத்தாடுதல், 
 தலைவனது பாணன் வரவைத் தோழி தலைவியிடம் கூறுதல், 
 தலைவன் பற்றிப் பரத்தை கூறுதல், விறலி கேட்கத் தலைவன் 
 பற்றித் தோழி கூறுதல், விறலி தோழிக்குக் கூறுதல், 
 விறலி 
 கேட்கத் தலைவன் பற்றித் தோழி கூறுதல், விறலி தோழிக்குக் 
 கூறுதல், பரத்தையின் தூதாக வந்தவரிடம் கூறுதல், தலைவன் 
 பரத்தையர் இல்லத்தில் தூங்கியதை விறலி தோழியிடம் கூறுதல், 
 தலைவன் தலைவியைக் கைவிடுதல், கைவிட்டு விட்டு வேறொரு 
 பெண்ணை நாடுதல் என்பன இப்பகுதியில் விளக்கப்படுகின்றன. 
 வெறியாட்டு, பாண் வரவு உரைத்தல், 
 பரத்தை கூறல்,  
 விறலி கேட்பத் தோழி கூறல், விறலி தோழிக்கு விளம்பல், 
 பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல், பிறர் மனைத் 
 துயின்றமை விறலி கூறல், குற்றிசை, குறுங்கலி  ஆகிய 
 துறைகளில் இவை கூறப்படுகின்றன. 6.4.1 வெறியாட்டு  
 (முருகனை வேண்டி ஆடும்) வெறிக்கூத்து என்பது 
 இதன் 
 பொருள். தலைவியிடம் காதலால் ஏற்படும் மாற்றங்கள் கண்ட 
 தாய் முருகன் குற்றமெனக் கருதி வெறியாட்டு 
 என்ற சடங்கை 
 நிகழ்த்துவது பழைய மரபு. கொளு, தேன்கமழ் கோதை செம்மல் அளிநினைந்து ஆங்குஅந் நிலைமை யாய்அறி யாமை
 வேங்கைஅம் சிலம்பற்கு வெறிஆடின்று
  
 என்பது. ‘தலைவி, தலைவனது அருளைப் பெறக் 
 கருதி,  
 அதனைத் தாய் அறியாதபடி வேங்கை மரங்கள் பூத்திருக்கும்  
 தன் வீட்டில் முருகன் அருள் வேண்டும் வெறிக்கூத்தை ஆடுதல்’ 
 என்பது இதன் பொருள். இதற்கு வெண்பா தரும் விளக்கம் : 
 காதல் ஏக்கத்தால் வெப்பமான பெருமூச்சினை விட்டுத் தலைவன் 
 வருவானோ, வரமாட்டானோ என்ற ஐயம் நீங்கத் 
 தலைவி 
 அவனது அருளைப் பெற விரும்பினாள் ; பக்கத்து வீட்டுப் 
 பெண்களும் தாயும் அறியாதபடி 
 தன் வீட்டிடத்தில்  
 வெறிக்கூத்தை ஆடினாள்.   6.4.2 பாண் வரவு உரைத்தல்  (தலைவனது) பாணனின் வரவைக் கூறுதல் என்பது பொருள். 
 இதன் கொளு, மாண்இழைக்கு வயல்ஊரன் பாண்வரவு பாங்கிமொழிந்தன்று
  என்பது. ‘சிறந்த அணிகலன்களை அணிந்த 
        தலைவியிடம் தோழி, வயல்கள் நிறைந்த ஊரின் தலைவனுடைய பாணன் காண வந்திருப்பதைக் 
        கூறுதல்’ என்பது பொருள். வெண்பா தரும் விளக்கம் : ‘இனிய சொற்களையும் மூங்கில் 
        தோள்களையும் அணிகளையும் கொண்ட தலைவியே! மயக்கத்தைத் தரும் இம் மாலைவேளையில் 
        நமது இருப்பிடத்திற்கு, தான் சொல்லும் பொய்யைப் பற்றிக் கவலைப்படாத பாணன் 
        யாழுடன் வந்திருக்கிறான். எதற்கோ?’ 6.4.3 பரத்தை கூறல்  (தலைவன் பற்றிப்) பரத்தை கூறுதல் 
 என்பது பொருள். 
 கொளு, தேன்கமழ் சிலம்பன் தார்எமக்கு எளிதுஎனப் பாங்கவர் கேட்பப் பரத்தை மொழிந்தன்று
  
 என்கிறது. ‘மணம் கமழும் மலையில் தலைவன் அணிந்திருக்கும் மாலையைப் 
 பெறுவது எளிது எனத் தன்னைச் சார்ந்தவர்  
 கேட்கப் பரத்தை சொல்லுதல்’ என்பது இதன் 
 பொருள். 
 தலைவனை அடைதல் தனக்கு எளிது என்பது இதன் குறிப்பு. 
 வெண்பா தரும் விளக்கம் : ‘விறலியே ! பல பொய்களையும் 
 சொல்லித் தலைவன் வருவான் என்று தலைவியிடம் கூறிக் 
 (அவளிடம் பொருள்பெற்று) கொண்டாடுகிறாய் ; 
 ஆனால் 
 தலைவன் எம்மிடம் வருதல் உறுதி’ எனப் பரத்தை கூறுவதாக 
 வெண்பா அமைந்துள்ளது. 6.4.4 விறலி கேட்பத் தோழி கூறல் (பரத்தை கூறியதற்குப் பதில் போல) விறலி கேட்கத் தோழி 
 கூறுதல் என்பது இதன் பொருள். கொளு இதற்கு, பேணிய பிறர்முயக்கு ஆரமுது அவற்கெனப் பாணன் விறலிக்குப் பாங்கி மொழிந்தன்று
 
 என விளக்கமளிக்கிறது. ‘விரும்பிய பரத்தையர்களது தழுவுதலைப் 
 பெறுதல் தலைவனுக்கு அரிய அமுதத்தோடு ஒக்கும் 
 என 
 விறலியிடம் தோழி கூறுதல்’. வெண்பா தரும் 
 விளக்கம் : 
 ‘அரும்பிற்கு, மலர்ந்த பூவினது வாசம் உண்டா? விறலியே! 
 நீர்வளம் மிக்க ஊரின் தலைவனுக்கு முதிர்ந்த 
 மார்புகளைக் 
 கொண்ட பெண்களைத் தழுவுதல் என்பது அமுதம் சுவைப்பது 
 போன்றதல்லவா!’ தலைவியின் சிறப்பு பரத்தையிடம் இல்லை 
 என்பதை ‘அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம்’ 
 என்ற 
 அடியால் புலப்படுத்துகிறாள் தோழி. 6.4.5 விறலி தோழிக்கு விளம்பல்  தோழி கேட்க விறலி கூறுதல் என்பது 
 இதன் பொருள். 
 கொளு, ஆங்கவன் மூப்பவர்க்கு அருங்களி தரும்எனப் பாங்கி கேட்ப விறலி பகர்ந்தன்று
 
 என்கிறது. தலைவனின் மூப்புப் பரத்தையருக்குப் 
 பெரும் 
 மகிழ்ச்சியைத் தரும் எனச் சொல்லித் தோழி கேட்க விறலி 
 கூறுதல் என்பது இதன் பொருள். வெண்பா தரும் விளக்கம் : 
 தலைவன் மீது வெறுப்புடையவர்கள் சொல்வது 
 ஒருபக்கம் 
 இருக்கட்டும். முறுவல் முளைத்த வாயினராகிய பரத்தையர்க்குத் 
 தலைவனது முதுமை, முற்றிய பழைய கள்ளைப் போல மிகுந்த 
 களிப்பைத் தரும். உளைத்தவர் கூறும் 
      உரையெல்லாம் நிற்க முளைத்த முறுவலார்க்கு எல்லாம் - விளைத்த
 பழங்கள் அனைத்தாய்ப் படுகளி செய்யும்
 முழங்கும் புனல்ஊரன் மூப்பு 6.4.6 
      பரத்தை வாயில் பாங்கி கண்டு உரைத்தல்
 
 பரத்தையின் தூதாக வந்தவளிடம் தோழி கூறுதல் என்பது 
 பொருள். கொளு, உம்மில் அரிவை உரைமொழி ஒழிய எம்மில் வலவனும் தேரும் வருமெனப்
 பரத்தை வாயிற்குப் பாங்கி பகர்ந்தன்று
 
 என்பது. ‘உங்கள் இல்லத்திலிருந்து எம் இல்லத்திற்குத் தேரில் 
 ஏறித் தலைவன் வருதல் உறுதி எனப் பரத்தையின் தூதுவரிடம் 
 தலைவியின் தோழி கூறுதல்’ என்பது பொருள். வெண்பா
  
 இதற்கு, மேலும் விளக்கம் தருகிறது : ‘உன் 
 தலைவியாகிய 
 பரத்தை (தலைவன் தலைவியிடம் செல்லான் எனக்) கூறிய சொல் 
 வீணாகும்படி, தலைவன் தேரில் ஏறி எம்முடைய இல்லத்திற்கு 
 வருவது உறுதி’. தோழி கூறுவதாக அமைந்துள்ள வெண்பா, 
 துறையை விளக்குகிறது. 6.4.7 பிறர்மனைத் துயின்றமை விறலி கூறல்      (தலைவன்) பிறர் (பரத்தை) இல்லத்தில் தங்கியதை 
 விறலி 
 கூறுதல் என்பது இதன்பொருள். கொளு, மற்றவர் சேரியின் மைந்தன் உறைந்தமை இற்றென விறலி எடுத்துரைத் தன்று
 
 என விளக்குகிறது. ‘பரத்தையர் சேரியில் தலைவன் தங்கியது 
 உண்டு என விறலி (தலைவிக்கு) எடுத்துரைத்தல்’ என்பது இதன் 
 பொருள். வெண்பா விறலி கூற்றாக     
 அமைந்துள்ளது : 
 ‘தலைவியாலே நான் நன்மைகள் பெற்றேன். கழனிகள் நிறைந்த 
 ஊரினனான தலைவன், மாலையை அணிந்து ஒப்பனை செய்து 
 கொண்டு இருக்கும் பரத்தையர் சேரியுள் 
 தங்கிய செய்தி  
 எனக்குத் தெரியும் என்பதைச் சொல்வேன். ஆனாலும் 
 அது 
 எனக்குத் தெரியாது’. தலைவியிடம் பொருள் 
 பெற்றதால் 
 தலைவனின் பரத்தமைத் தொடர்பைக் கூறவிரும்பும் விறலி, 
 தலைவன் மீதுள்ள அச்சத்தால் அதை மறுத்தும் பேசுகிறாள். 6.4.8 குற்றிசை  ‘இடையில் கைவிடுதல்’ என்பது இதன் பொருள். கொளு, பொற்றார் அகலம் புல்லிய மகளிர்க்கு அற்றாங்கு ஒழுகாது அறம்கண்மா றின்று
  என்பது. ‘தலைவனுடைய மார்பைத் தழுவிய தலைவியுடன் 
 இறுதிவரை வாழாது இடையே கைவிடுதல்’ என்பது 
 இதன் 
 பொருள். வெண்பா தரும் விளக்கம் : 
 ‘கரிய     பெரிய  
 கண்களையும் வளையல் அணிந்த அழகிய கைகளையும் கொண்ட 
 தலைவியை, மெய்யுணர்ந்தவன் போலத் தலைவன் கைவிடுதல் 
 அறம் அன்று.’    6.4.9 குறுங்கலி  (காமமாகிய) கேடு சிறுமை பெறுதல் 
 என்று பொருள்.  
 கொளு, நாறிருங் கூந்தல் மகளிரை நயப்ப வேறுபடு வேட்கை வீயக் கூறின்று
 என்பது. ‘தலைவியைக் கைவிட்டுத் தலைவன் நறுமணம் மிக்க 
 கூந்தலையுடைய பிற மகளிரை நயக்கும் வேட்கை கெடும்படி 
 கூறுதல்’ என்பது பொருள். வெண்பா தரும் 
 விளக்கம் :  
 ‘பண்ணே விரும்பும் இனிய குரலையும் பவளவாயினையும்,
  
 பெரிய அல்குலையும் உடைய தலைவியினது கண்கள் பீர்க்கம்பூப் 
 போலப் பசக்கும்படி பிரிந்து இவள் தொடர்பை விட்டுவிடுதல் 
 அறமாகுமோ?’  |