1.3 பிற யாப்பு நூல்கள்

தொல்காப்பியத்துக்குப் பின் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பெற்ற யாப்பு நூல்களே கிடைத்துள்ளன. இடைப்பட்ட காலத்தில் பல யாப்பு நூல்கள் இயற்றப் பெற்றன. எனினும், பல நூல்கள் முழுமையாகக் கிடைக்காமல் சிற்சில பகுதிகளாகவே கிடைத்துள்ளன. உரையாசிரியர்கள் தம் உரையில் மேற்கோள்களாக எடுத்தாண்டமை கொண்டு பிறர் நூல்களிலிருந்து சில பகுதிகள் கிடைக்கின்றன. அவற்றை வைத்து மறைந்துபோன நூற்பெயர்களை அறிகிறோம்.

யாப்பிலக்கண நூல்களைக் கீழ்வருமாறு பகுக்கலாம்.

1.3.1 முழுமையாகக் கிடைக்காத யாப்பு நூல்கள்

கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கு முன் இயற்றப்பெற்ற யாப்பு இலக்கண நூல்கள் பலவற்றைப் பற்றிய குறிப்புகளை யாப்பருங்கல விருத்தி உரை, தொல்காப்பிய உரைகள், இலக்கிய உரைகள் போன்றவற்றிலிருந்து அறிகிறோம். யாப்பிலக்கண நூல்களிலிருந்து மேற்கோள்களாக உரைகளில் எடுத்தாளப் பெற்ற செய்யுட் பகுதிகளைக் கொண்டு அவற்றிற்குரிய யாப்பியல் நூல்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கு நோக்குவோம்.

 • காக்கைப்பாடினியம்

  இந்நூற் பகுதிகளை யாப்பருங்கல விருத்தி உரைகாரர் மிகுதியாக எடுத்தாண்டுள்ளார். இந்நூல் ஆசிரியரை மாப்பெரும் புலவர் என்று யாப்பருங்கல விருத்தியுரைகாரர் பாராட்டியுள்ளார். தொல்காப்பியருக்குப் பின்வந்த யாப்பு நூலாருள் இவர் காலத்தால் முற்பட்டவராகக் கூடும் என்பது அறிஞர் கருத்து.

  யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகியவற்றுக்கு காலத்தால் முற்பட்டது இந்நூல்.

 • அவிநயம்

  யாப்பருங்கல உரையாசிரியர் அவிநய நூற்பாக்களைப் பல இடங்களில் தம் உரையில் எடுத்தாண்டுள்ளார். இந்நூல், அதனை இயற்றிய அவிநயனார் பெயரில் அவிநயம் என்றே வழங்கப்பட்டுள்ளது. யாப்பிலக்கண நூலாகிய இதனை மற்றவர்கள் அவிநயனார் யாப்பு எனக் குறித்துள்ளனர். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்கு ஒரு பழைய உரை உள்ளது. இந்நூலில் உள்ள யாப்பியல் குறித்த கருத்துகள் பல, காக்கைப்பாடினிய நூற் கருத்துகளுடன் ஒத்துள்ளன.

 • மயேச்சுரர் யாப்பு

  மயேச்சுரர் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூலை மயேச்சுரர் யாப்பு எனப் பிற்காலத்தோர் குறிப்பர். இவருடைய இலக்கண நூல் எடுத்துக்காட்டுகளுடன் இருந்ததுபோலும். இந்நூலாசிரியரை வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர் மயேச்சுரனார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  மேற்கண்ட நூல்கள் தவிர, சிறுகாக்கைப் பாடினியார், நக்கீரர், பல்காயனார், நற்றத்தனார், கையனார், வாய்ப்பியனார் என்னும் பெயர்களுடன் புலவர்கள் பலர் யாப்புத் துறை நூல்களை இயற்றியுள்ளனர். எனினும், இவர்கள் பற்றிய விரிவான தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை.

  1.3.2 இலக்கண நூல்கள் பிறவற்றில் யாப்பு

  கிடைக்கும் இலக்கண நூல்களில் சில ஐந்து இலக்கணங்களையும் பேசுகின்றன. எழுத்து, சொல் முதலிய சில பிரிவுகளை மட்டும் பேசும் இலக்கணங்களும் உள்ளன. யாப்பு என்பது இலக்கண நூல்களில் இடம் பெற்றுள்ளது. அல்லது இது குறித்து மட்டுமே தனி இலக்கண நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

 • ஐந்திலக்கண நூல்களில் யாப்பு
 • கிடைக்கும் ஐந்திலக்கண நூல்களில் வீரசோழியம், இலக்கண விளக்கம், சுவாமிநாதம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவற்றுள் யாப்பு ஒரு பிரிவாகப் பேசப்பட்டிருப்பதால் இவற்றைப் பற்றிய அறிமுகம் பயில்வோர்க்குப் பயன்படும்.

 • வீரசோழியம்
 • கி.பி.11ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரனார் என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டது. இது, ஐந்து அதிகாரங்களைக் கொண்டது. இதுவே தமிழில் கிடைக்கும் ஐந்து இலக்கணம் பேசும் நூல்களில் காலத்தால் முந்தியது எனலாம். இந்நூலின் நான்காவது அதிகாரம் யாப்பதிகாரம் ஆகும். நூலில் 105 முதல் 140 வரையிலான பகுதியில் யாப்பியல் செய்திகள் பேசப் பெற்றுள்ளன.

 • இலக்கண விளக்கம்

  இந்நூல் திருவாரூர் வைத்தியநாத தேசிகரால் கி.பி.17ஆம் நூற்றாண்டில் செய்யப்பெற்றது. இஃது ஓர் ஐந்திலக்கண நூல். இதற்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இந்நூலில், மூன்றாவது அதிகாரமாகப் பொருளதிகாரம் உள்ளது. இதன்கண் நான்காம் இயலாக யாப்பியல் அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாட்டியல் என்னும் ஐந்தாவது இயலும் அமைந்துள்ளது.

 • சுவாமி நாதம்
 • இந்நூலின் ஆசிரியர் சுவாமிநாத கவிராயர் என்பவராவார். இவர் காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டு. இவர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இந்நூல் ஆறு அதிகாரங்களை உடையது. கிடைத்துள்ளவை 202 செய்யுள்கள். அந்தாதித்தொடையில் இவற்றை ஆசிரியர் இயற்றியுள்ளார்.

 • முத்துவீரியம்
 • முத்துவீர உபாத்தியாயர் என்பவரால் இந்நூல் இயற்றப்பட்டது. திருச்சி உறையூரைச் சார்ந்த இவர் கி.பி.19ஆம் நூற்றாண்டினர். நூலாசிரியர் பெயராலேயே இந்நூல் வழங்கப் பெறுகிறது. இது ஐந்து இலக்கணங்களையும் பேசுகிறது. பொருளதிகாரத்தில் இவர் புறப்பொருள் பற்றிப் பேசவில்லை. அகப்பொருளை மட்டுமே பேசியுள்ளார். யாப்பு அதிகாரம் என்பது மூன்று இயல்களுடன் 267 நூற்பாக்களைக் கொண்டுள்ளது.

 • தொன்னூல் விளக்கம்
 • வீரமா முனிவர் இந்நூலின் ஆசிரியராவார். இத்தாலி நாட்டைச் சார்ந்த இவர் சமயம் பரப்பத் தமிழகத்திற்கு வந்தார். தமிழைக் கற்று, இம்மொழியில் பல நூல்களைச் செய்துள்ளார். இவர் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டு. தொன்னூல் விளக்கம் செய்த இவர், தாமே இந்நூலுக்கு ஓர் உரையும் செய்துள்ளார். இந்நூல் நூற்பா யாப்பினால் ஆனது. இதன்கண் 201 முதல் 250 வரை உள்ள நூற்பாக்களில் யாப்புப் பற்றிப் பேசியுள்ளார்.

  1.3.3 முழுமையாகக் கிடைத்த தனி யாப்பு நூல்கள்

  ஐந்திலக்கண மரபில் யாப்பு என்னும் ஒரு பிரிவு பற்றியே தனி நூல்கள் சில தோன்றியுள்ளன. கி.பி.10ஆம் நூற்றாண்டில் தோன்றிய அமிதசாகரர் என்பார் இரண்டு நூல்களை இவ்வகையில் இயற்றியுள்ளார். அவை,

  1) யாப்பருங்கலம்
  2) யாப்பருங்கலக் காரிகை

  என்பனவாகும்.

  இவ்விரண்டில் முந்தியது நூற்பா யாப்பால் 95 செய்யுள்களைக் கொண்டதாகும். பிந்தியது கட்டளைக் கலித்துறை யாப்பால் 44 செய்யுள்களைக் கொண்டது. இவை இரண்டிற்கும் குணசாகரர் என்பார் உரையாசிரியராவார்.

  இவற்றுக்குப் பின், 19ஆம் நூற்றாண்டில் தனி யாப்பு நூல்கள் சில தோன்றின. இடைப்பட்ட காலத்தில் சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகின. அவற்றுக்காகப் பாட்டியல் இலக்கண நூல்கள் அவ்வப்போது தோன்றின.

  19ஆம் நூற்றாண்டில் யாப்பிலக்கணத்திற்கென விருத்தப்பாவியல் எனும் நூல் தி.வீரபத்திர முதலியார் என்பவரால் இயற்றப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் யாப்பதிகாரம், தொடையதிகாரம் என இரு நூல்கள் தோன்றின. புலவர் குழந்தை என்பார் இந்நூல்களின் ஆசிரியராவார். யாப்பு நூல் என்னும் நூலை, த.சரவணத்தமிழன் என்பார் செய்து அளித்தார். யாப்பொளி என்று ஒரு நூல் சீனிவாசராகவாசாரி என்பவரால் இயற்றப்பட்டது.