5.1 அடி

அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. ‘எழுத்து அசை சீர் பந்தம், அடி தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது.

மனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம்’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம்’ என்கின்றார்.

... ... ... ; அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு
தொடுத்துமன் சேறலின் தொடையே’

என்னும் நூற்பா, ‘அடி’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைந்துள்ளது.

சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி ஒழுக்கை அல்லது ஒலிநடையைத் (Rhythm) தளை என்றால், சீர்கள் தொடர்ந்து இயங்கும் வடிவியக்கம் (concatenated on chain movement) அடி என்று சொல்லலாம் எனவும் அடிக்கு விளக்கம் தருகின்றனர்.

சுருக்கமாகச் சீர்கள் தம்முள் தொடர்ந்து இயங்கும் செய்யுளியக்க அலகு அடி என்று சொல்லி வைக்கலாம்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

என்பது குறள் வெண்பா. இது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி,

கற்றதனா லாய

என்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு. சான்று:

(1)        (2)

‘திரைத்த சாலிகை
நிரைத்த போல்நிறைந்(து)
இரைப்ப தேன்களே
விரைக்கொள் மாலையாய்’

இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர் அடி’ என்பர். எனவே, இங்கு நாம் சீர்களால் நிரம்பும் ‘சீரடி’களையும் பார்க்க இருக்கின்றோம். சீர்களால் நிரம்பி அடியாகிப் பாட்டிற்கு அடியாகும் (வரியாகும்) பாடலடியையும் பார்க்க இருக்கின்றோம்.

5.1.1 சீர்அடி வகைகள்

முன்னே சீர்களால் நிரம்புவது ‘அடி’ என்று பார்த்தோம். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார்.

இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.

மேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, ‘குறளடி’; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி’; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு.

குறள்ஒரு பந்தம்; இருதளை சிந்தாம்;
முத்தளை அளவடி; நால்தளை நெடிலடி;
ஐந்தளை முதலா எழுதளை காறும்
வந்தவும் பிறவும் கழிநெடில்; என்ப

யார் யார் எந்த எந்த முறையில் சொன்னாலும் செய்தி ஒன்றே. இவ்வகையில் ‘சீரடி’ ஐந்து வகைப்படுவது வெளிப்படை. அவை:

குறளடி
சிந்தடி
அளவடி
நெடிலடி
கழிநெடிலடி

5.1.2 சீர்அடி வகைகள் - பெயர்க்காரணம்

பேச்சு வழக்கில் கூட ‘அளந்து பேசு’ என்றவர்கள் தமிழர்கள். அய்யன் வள்ளுவர் ‘அற்றால் அளவறிந்துண்க’, ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்றவர். இவர், அளவறிந்து பேசவேண்டும் என்பதையும் உள்ளடக்கித்தான் ‘பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல்’ எனும் குறளை யாத்திருப்பார் எனக் கொள்வதில் தவறில்லை.

பேசும் பேச்சுக்கே அளவு வேண்டும் என்றவர்கள் செய்யும் செய்யுட்கும் அளவு வேண்டியிருப்பர். எதனையும் பெரியது சிறியது என்பது, மனத்தில் ஏதோ ஓர் அளவை வைத்துக்கொண்டுதான்! எண்ணிப்பாருங்கள். மாணாக்கர்களே! உண்மை விளங்கும்.

செய்யுள் நூலார் யாவரும் ஒத்து நேர்ந்துகொண்ட அடி, நேரடி. நேர்தல் - ஒத்துக்கொள்ளுதல், நேர்தல் என்பதற்கு இப்பொருள் இருப்பதை ‘நேர்ச்சிக்கடன்’, ‘தோழி தலைவனின் குறை நேர்ந்தாள்’ என்னும் தொடர்களில் காணலாம். தொடை விகற்பங்களைப் பற்றி பின்னர்ப் படிக்க இருக்கின்றோம். அவ்விகற்பங்களை யெல்லாம் அறிந்து ‘இணை மோனை’, ’பொழிப்பு மோனை’ ’கூழை மோனை’, ’ஒரூஉ மோனை’, ‘மேற்கதுவாய் மோனை’, ‘கீழ்க்கதுவாய் மோனை’, ‘முற்று மோனை’ என்றவாறு கணக்கிட உதவுவது நான்கு சீரால் இயன்ற அளவடி தானே? கணக்கிடுவதற்குப் புலவர் எல்லாரும் அளவடியையே நேர்ந்தனர். ஆகையால் அளவடியின் பெயர் ‘நேரடி’ எனக் கொள்ளப்பெற்றது என்று காரணம் கற்பிக்கலாம் அல்லவா?

ஒன்றை அளவாகக் கொண்டுதான், அவ்வளவைவிடச் சற்றுச் சிறியது; சிறியது; பெரியது; மிகப்பெரியது என்று பிறவற்றைச் சொல்லமுடியும்.

அளவடி என்பது நான்கு சீர்களைக் கொண்டுள்ளது. அளவடியினின்றும் ஒரு சீர் சிந்துவது - குறைவது - சிந்தடி. ‘உனைச்சிந்தென்று சொல்லிய நாச் சிந்துமே’ என்னும் தமிழ்விடு தூதுவில் சிந்தும் என்பது, குறையும் என்ற பொருளில் வருகின்றது. குறளடி, மிகவும் குட்டையான அடி. குறள், ’குறளன்’, ’திருக்குறளப்பன்’ என்னும் இலக்கியத் தொடர்களில் மிகவும் குட்டையானவற்றைச் சொல்லக் ’குறள்’ என்பது ஆளப்பட்டுள்ளது. அளவடியின் நீண்டது என்பது பற்றி நெடிலடி எனப்பெற்றது. நெடிலடியின் நீண்டது என்பது பற்றி ஒரு பொருட்பன்மொழி வாய்பாட்டால் கழிநெடிலடி எனப்பெறுகின்றது. எனவே,

நான்கு சீர் கொண்டது அளவடி
மூன்று சீர் கொண்டது சிந்தடி.
இருசீர் கொண்டது குறளடி
ஐந்துசீர் கொண்டது நெடிலடி
ஐந்துக்கும் மேலான சீர் கொண்டது கழிநெடிலடி ஆம்.
 • குறளடி
 • திரைத்த சாலிகை
  நிரைத்த போல்நிறைந்
  திரைப்ப தேன்களே
  விரைக்கொள் மாலையாய்’

  என்னும் இப்பாடல் வஞ்சித்துறைப் பாடலாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ‘திரைத்த சாலிகை’ முதலடி; ‘நிரைத்தபோல் நிறைந்’-இரண்டாம் அடி; ‘இரைப்ப தேன்களே’- மூன்றாம் அடி; ‘விரைக்கொள் மாலையாய்’- நான்காம் அடி. ஒவ்வொரு அடியும் இரு சீர்களைக் கொண்டு இயங்குகின்றது.

  இரு சீர்களைக் கொண்டு இயங்கும் அடி, குறளடி. ‘குறளடி’ என்னும் பெயர் வந்தமைக்கான காரணத்தை மேலே பார்த்தோம்.

  ‘திரைத்த சாலிகை’ என்பது இரண்டு சீர்களால் இயன்ற குறளடி. இதன் முதல் சீர் ‘திரைத்த’ என்பது. இரண்டாம்சீர் ‘சாலிகை’ என்பது. எனவே. ‘திரைத்த’ என்பது நின்றசீர் சாலிகை என்பது வரும்சீர்.

  நின்ற சீர்

  வந்த சீர்
  திரைத் சா லிகை
  கு குஒ கு நெ கு கு

  இணைக்குறில் ஒற்று

  தனிக்குறில் தனிநெடில் இணைக்குறில்
  நிரை நேர் நேர் நிரை

  புளிமா
  (வாய்பாடு)

  கூவிளம்
  (வாய்பாடு)

  மா(நேர்) முன் நேர்
  நேரொன்று ஆசிரியத்தளை

  நேரொன்று ஆசிரியத்தளை என்ற ஒரு தளை தோன்ற இருசீர்கள் தேவைப்பட்டன. இருசீர்களும் இணைந்து ஓரடியாய் நின்றன. செய்யுள் இலக்கணத்தில் மிகக்குறைந்த அடி இதுவே. ஆகையால் குறளடி எனப்பெற்றது. எனவேதான், ஒருதளையான் வந்த அடியினைக் குறளடி என்றனர். ‘குறள் ஒருபந்தம்’ என்பது இலக்கண விளக்கம்.

 • சிந்தடி
 • இருது வேற்றுமை இன்மையால்
  சுருதி மேல்துறக் கத்தினோடு
  அரிது வேற்றுமை ஆகவே
  கருது வேல்தடக் கையினாய்

  என்னும் இப்பாடல் வஞ்சிவிருத்தமாகும். இதன்கண் நான்கு அடிகள் உள்ளன. ஒவ்வொரு அடியும் மூன்று சீர்களைக் கொண்டுள்ளது. மூன்று சீர்களைக் கொண்டு இயங்கும் அடி, சிந்தடி. அளவடி நான்கு சீரில் ஒன்று சிந்தி, மூன்று சீரில் இயங்குதலின் இதன்பெயர் சிந்தடி எனப்பெற்றது என்பதை நாம் மேலே கண்டோம்.

  இருது - நின்ற சீர்
  வேற்றுமை - வந்த சீர்
  இன்மையால் - வந்த சீர்

  ‘இன்மையால்’ என்னும் வந்த சீரை நோக்க ‘வேற்றுமை’ என்பது நின்றசீர் என்பதை மறத்தலாகாது.

  நின்றசீர் வந்தசீர்/நின்றசீர் வந்தசீர்
  இருது வேற்றுமை இன்மையால்

  இரு |

  து

  வேற் |

  றுமை

  இன் |

  மையால்
  கு கு கு நெ ஒ கு கு கு ஒ கு நெ ஒ
  இணைக்
  குறில்
  தனிக்
  குறில்
  தனி
  நெடில்
  ஒற்று
  இணைக்
  குறில்
  தனிக்
  குறில்
  ஒற்று
  குறில்
  நெடில்
  ஒற்று
  நிரை நேர் நேர் நிரை நேர் நிரை
  புளிமா
  (வாய்பாடு)
  கூவிளம்
  (வாய்பாடு)
  கூவிளம்
  (வாய்பாடு)
  மா(நேர்)முன் நேர்
  நேர்ஒன்று
  ஆசிரியத்தளை
  விளம் முன்
  நேர்இயற்சீர்
  வெண்தளை

  நேரொன்று ஆசிரியத்தளை, இயற்சீர்வெண்தளை ஆகிய இரண்டு தளைகள் தோன்ற மூன்று சீர்கள் தேவைப்படுகின்றன. எனவே, சிந்தடி அமைய இருதளைகள் தேவையாவதை உணர்கின்றோம். இதையே இலக்கணம் ‘இருதளை சிந்தாம்’ என்கின்றது.

 • அளவடி அல்லது நேரடி
 • தேம்பழுத் தினியநீர் மூன்றும் தீம்பலா
  மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
  மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும்
  தாம்பழுத் துளசில தவள மாடமே

  என்னும் இப்பாடல் கலிவிருத்தமாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களால் அமைந்துள்ளது. நான்கு சீர்களில் இயங்கும் அடி, அளவடி. இது நேரடியென்றும் வழங்கப்பெறும். அளவடி, நேரடி எனப் பெற்றதன் காரணத்தை மேலே பார்த்தோம். மாணாக்கர்களே! அதனை நினைவு கூருங்கள்.

  தேம்பழுத் - முதல்சீர்; நின்றசீர்

  தினியநீர் - இரண்டாம் சீர்; வந்தசீர் | நின்றசீர் (மூன்றும் என்பதை நோக்க)

  மூன்றும் - மூன்றாம் சீர்; வந்தசீர் | நின்றசீர் (தீம்பலா என்பதை நோக்க)

  தீம்பலா - நான்காம் சீர்; வந்தசீர் | நின்றசீர் (மேம்பழுத் என்பதை
  நோக்க)

  இவ்வாறே ‘மாடமே’ என்னும் இறுதிச்சீர் வரை எண்ணப்பட்டுந் தளை காணல் வேண்டும். ஒருசோற்றுப்பதமாக ஓரடி மட்டும் கொள்ளப்படுகின்றது.

  நான்கு சீர்களைக் கொண்ட இந்த அளவடியில்/ நேரடியில், முறையே நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை. நேர்ஒன்றாசிரியத்தளை என்று மூன்று தளைகள் தோன்றுகின்றன. இதனை மூன்று தளையால் வந்த அடி எனலாம் அல்லவா? குறிக்கலாம் எனின், முத்தளையால் வந்த அடியினை, அளவடி/நேரடி எனலாமே. எண்ணுங்கள். ‘முத்தளை அளவடி’ என்கின்றது இலக்கணம்.

 • நெடிலடி
 • ஐந்து சீர்களால் அமைந்த அடி நெடிலடி. சீர் எண்ணிக்கையைக் கருதி ஐந்து சீரடி. நெடிலடி எனப்படுகின்றது. இப்பெயரை உற்றுக் கவனியுங்கள். இது ஓர் உண்மையைக் குறிப்பில் உணர்த்துவது தெரியும். அது. இயல்பான அடி நான்குசீர் அடியாகிய அளவடியே என்பதாம்.

  (1) (2) (3) (4) (5)

  வென்றான் வினையின் தொகைநீங்க விரிந்து தன்கண்
  ஒன்றாய்ப் பரந்த உணர்வின் னொழியாது முற்றும்
  சென்றான் திகழும் சுடர்சூழ் ஒளிமூர்த் தியாகி
  நின்றான் அடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்

  இது, கலித்துறைப்பாடல். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் ஐந்து சீர்களால் நிரம்பியுள்ளது. எனவே, நெடிலடி நான்கிளைக் கொண்டு வந்துள்ள பாடல் இந்தக் கலித்துறை. இதன் முதலடியை மட்டும் கொண்டு தளைகள் எத்தனை உள என்று காண்போம்.


  ஐந்து சீர்களைக் கொண்ட இந்த நெடிலடியில் இயற்சீர் வெண்தளை, இயற்சீர் வெண்தளை, கலித்தளை, நேரொன்றாசிரியத்தளை என்று நான்கு தளைகள் அமைகின்றன. ஆதலால், நான்கு தளைகளால் அமைவது நெடிலடி என்று சொல்லலாம். யாப்பிலக்கணமும் ‘நால்தளை நெடிலடி’ எனக் குறிக்கின்றது.

 • கழி நெடிலடி
 • ஆறு, ஏழு, எட்டு என ஐஞ்சீரின் மிக்குவரும் அடிகள் எல்லாம் கழிநெடிலடி என்று கூறப்பெறும். கழி-மிகுதி. ‘கழிபெருங்காதல்’, ’கழிபேர்இரக்கம்’ என்பவற்றை நோக்கியும் கழி என்பதன் பொருளை உணரலாம். இயல்பான நான்குசீர்களை உடைய அடி, அளவடி; அளவடியின் ஒருசீ்ர் மிக்கது நெடிலடி; நெடிலடியின் ஒன்றோ பலவோ ஆகிய சீர்கள் மிக்கது கழிநெடிலடி. கழிநெடிலடி ஒன்று, எத்தனை சீர்களால் நிரம்பியது என்பது தோன்ற அதன் எண்ணிக்கையை உள்ளடக்கி அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி, எண்சீர்க் கழிநெடிலடி என்று வழங்கப்பெறுவது உண்டு. எண்சீர்க்கு மேலாக வரும் கழிநெடிலடிகள் அத்துணை சிறப்பில்லன என்பர்.

  இரைக்கு வஞ்சிறைப் பறவைக
  ளெனப்பெயர் இனவண்டு புடைசூழ
  நுரைக்க ளென்னுமக் குழம்புகள்
  திகழ்ந்தெழ நுடங்கிய விலையத்தால்
  திரைக்க ரங்களிற் செழுமலைச்
  சந்தனத் திரள்களைக் கரைமேல்வைத்
  தரைக்கு மற்றிது குணகடல்
  திரையொடு பொருதல தவியாதே

  இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நான்கு அடிகளைக் கொண்டு நடக்கின்றது. இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களால் நிரம்புகின்றது. ஆகவே, ஒவ்வோர் அடியும் கழிநெடிலடி. இப்பாடலின் ஓர் அடிக்கு மட்டும் தளை காண்போம்.


  ஆறுசீர்களைக் கொண்ட இந்தக் கழிநெடிலடியில் நேர் ஒன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத் தளை, நிரை ஒன்றாசிரியத் தளை, கலித்தளை என்றாக ஐந்து தளைகள் இடம் பெறுகின்றன. ஆதலால் ஐந்து தளைகளால் அமைவது கழிநெடிலடி என்கின்றனர்.

  ஐந்தளை முதலா எழுதளை காறும்
  வந்தவும் பிறவும் கழிநெடில் என்ப