2.0 பாட முன்னுரை யாப்பருங்கலக் காரிகை நால்வகைப் பாக்களாகிய வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா ஆகியவற்றுடன் மருட்பா எனும் பாவகையையும் விளக்கியுரைக்கின்றது என்பதை அறிவீர்கள். அவற்றுள் வெண்பா, ஆசிரியப்பா எனும் முதல் இருவகைப் பாக்களின் இலக்கணங்களை அவற்றின் வகைகளுடன் பாக்கள் - 1 எனும் பாடத்தில் தெளிவாகப் படித்தறிந்தீர்கள். இப்பாடத்தில் கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனும் பாக்களின் இலக்கணங்களை விரிவாகக் காணலாம். தமிழ் இலக்கியத்தில் வெண்பாவும் ஆசிரியப்பாவும் பெற்றிருக்கும் அளவுக்குப் பெரும் இடம் பெற்றவை அல்ல இப்பாவகைகள். ஆயினும் ஓசை இனிமையில் முந்தையவற்றை விடக் கலிப்பா சிறப்பிடம் பெறுவது என்பதை இப்பாடம் முடிவுறும் போது நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். சங்க நூலாகிய கலித்தொகை முற்றிலும் கலிப்பாக்களால் ஆகியது. முதலில் இப்பாக்களின் அடியும் ஓசையும் பற்றி யாப்பருங்கலக் காரிகை வழியில் நின்று காணலாம். |