2.1 அடியும் ஓசையும்
பா இலக்கணத்தில் தவறாமல் கண்டுணர வேண்டியது பாவின்
ஓசையாகும். ஓசை பாவுக்குப் பா வேறுபடும். ஓசை அமைப்பையும் அடியமைப்பையும்
கொண்டே பாக்களை இன்ன பா என்று நாம் கண்டறிய வேண்டும். இன்று, அச்சு வடிவில்
நூல்களில் நீங்கள் பாக்களைப் பார்க்கிறீர்கள்.அடிகள், சீர்கள் நன்கு இடைவெளியிட்டுப்
பிரிக்கப்பட்டு அச்சிட்டிருப்பதால் அடிகள்,அவற்றில் உள்ள சீர்கள்ஆகியவற்றின்
எண்ணிக்கையைப் பார்த்த பார்வையில் சொல்லி விடுகிறீர்கள். பழந்தமிழகத்தில்
செய்யுள்கள் ஏடுகளில் எழுதப்பட்டிருந்தன. சீர் அடி ஆகியவை பிரித்துக் காட்டப்படாமல்
பாக்கள் தொடர்ச்சியாக எழுதப் பட்டிருக்கும். எங்கும் முற்றுப்புள்ளி அரைப்புள்ளி
போன்ற நிறுத்தற் குறிகளும் இரா. ஏட்டைப் படிக்கும் போது சீர் , அடி ஆகியவற்றைப்
பிரித்துப் படிப்பது எப்படி? யாப்பிலக்கணம் அறிந்தவர்களுக்குப் பாவின் ஓசை
நன்கு தெரிந்திருக்கும்.படிக்கும் போதே ஓசையை உணர்ந்து இன்ன பா இது, இதில்
இத்தனை அடிகள் உள்ளன என்று சரியாகச் சொல்லிவிடுவர். அதனால்தான் யாப்பிலக்கண
ஆசிரியர் பாக்களின் இலக்கணத்துக்குள் நுழைவதற்கு
முன்னரே பாக்களின் அடியும் ஓசையும் பற்றிய விளக்கங்களைத் தருகிறார். வெண்பா
ஆசிரியப்பா ஆகியவற்றிற்குரிய அடி , ஓசை இலக்கணங்களை முன்னைய பாடத்தில் அறிந்தீர்கள்
அல்லவா ! ஏனைய பாக்களின் அடி, ஓசை இலக்கணங்களை இப்பாடத்தில் காணலாம்.
2.1.1
கலிப்பா
கலிப்பாவுக்குரிய அடியும் ஓசையும் பற்றி இனிப்பார்ப்போம்.
வெண்பாவையும்
ஆசிரியப்பாவையும் போலக் கலிப்பாவும் அளவடியால் ( நாற்சீரடியால் ) அமைந்துவரும்
. இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு.
I. பொதுவாகக் கலிப்பா பெரும்பாலும் நாற்சீரடிகளால்அமையும் எனினும் கலிப்பாவின்
ஓர் உறுப்பாகிய ‘அம்போதரங்கம்’ குறளடியாலும்(இருசீரடி), சிந்தடியாலும் (முச்சீரடி)
வரும்.
II. கலிப்பாவின் மற்றோர் உறுப்பாகிய ‘அராகம்’ அளவடிகளால் மட்டுமன்றி நெடிலடி
(ஐஞ்சீரடி ), கழிநெடிலடி ( ஆறும் அதற்கு மேற்பட்டும் சீர்கள் கொண்ட அடி )
ஆகியவற்றாலும் வரும்.
இவ்வுறுப்புகள் தொடர்பான பிற விளக்கங்களைப் பின்னர்க் கற்பீர்கள்.
III. கலிப்பாவின் ஒரு வகையாகிய வெண்கலிப்பாவின் ஈற்றடி சிந்தடியாகவரும்.
கலிப்பாவின்
ஓசை, துள்ளல் ஓசை ஆகும். துள்ளித்துள்ளிச் செல்லும் ஓசை என்பதனால் கலிப்பாவின்
ஓசை, துள்ளல் ஓசை எனும் பெயர் பெற்றது. கலிப்பாவின் உறுப்புகளாகிய தரவு,
தாழிசை, அராகம்,அம்போதரங்கம் ஆகியவை
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஓசை அமைப்பை உடையவை.இவ்வுறுப்புகள் அடுத்தடுத்து
வரும்போது ஓசை அமைப்பும் மாறிமாறி வரும். குதிரை துள்ளிச் செல்லும் அமைப்பை
இது நினைவுபடுத்தும். ஆகவே துள்ளல் ஓசை எனும் பெயர் இப்பாவின் ஓசைக்கு மிகப்
பொருத்தமானது என உணரலாம். கலிப்பாவின் வகைகளைப் பற்றிப் படிக்கும் போது ஓசைகள்
மாறித் துள்ளி வருவதை நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
மற்றொரு கருத்தை இங்கே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
‘கலி’ என்னும் சொல் துள்ளும் விலங்கைக் குறிக்க வருவதுண்டு. குதிரையின் ஒரு
பெயர் கலிமா என்பது. இனித் துள்ளல் ஓசையின் அமைப்பு, அதன் வகைகள் பற்றிக்
காணலாம். பாவில் அமையும் தளை அமைப்பைக் கொண்டு துள்ளல் ஓசையை மூவகையாகப்
பகுப்பர்.
(i) ஏந்திசைத் துள்ளல் ஓசை
பா முழுவதிலும் கலித்தளை மட்டுமே அமைந்து வருவது
ஏந்திசைத் துள்ளல் ஆகும்.
(எ.டு)
முருகவிழ்தா
மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்
இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியையரியா
நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
(முருகு
= அழகு ; புடைவர = சூழ்ந்திருக்க ;
சினனார் = அருகன் ; முனியா எதிரிய
= சினந்து எதிர்க்கும்; காதி
= கர்மங்கள் ; அரியா = அறுத்து ;
நிருமலராய் = தூய்மையானவராய்)
உறுப்பியலில் தளை
காணும் முறை பற்றி அறிந்துள்ளீர்கள் அல்லவா! மேற்காட்டிய பாவில் அனைத்துச்
சீர்களுக்கும் இடையில் காய் முன் நிரை
எனும் அமைப்புடைய கலித்தளையே வந்திருப்பதைக் காணுங்கள். ஆகவே இக்கலிப்பாவின்
ஓசை, ஏந்திசைத் துள்ளல் ஓசை ஆகும்.
(ii) அகவல் துள்ளல் ஓசை
பாவில் கலித்தளையுடன் வெண்சீர் வெண்டளையும் கலந்து
வருவது அகவல் துள்ளல் ஆகும்.
(எ.டு)
செல்வப்போர்க்
கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஓங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) |
இப்பாடல், உறுப்பியலில் தளை
இலக்கணத்தில் முன்னரே நீங்கள் படித்த பாடல்தான்.
இப்பாடலில் சினவாழி - முல்லைத்தார்; முருக்கிப்போய்
- எல்லைநீர் ; மதியம்போல் - மல்லல்ஓங் எனவரும் சீர்ச்சந்திப்புகளில் வெண்சீர்
வெண்டளையும்,ஏனைய இடங்களில் கலித்தளையும் வந்துள்ளன. ஆகவே இது அகவல்துள்ளல்
ஓசை ஆகும்.
(iii) பிரிந்திசைத்துள்ளல் ஓசை
கலித்தளையுடன் பலதளைகளும் கலந்து வருவது பிரிந்திசைத்துள்ளல்
ஆகும்.
(எ.டு)
குடநிலைத்
தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவில் தகையேறு மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
எனவாங்கு
ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
|
(குடம்
= தயிர்க்குடம் ; புறவு = முல்லை நிலம்
; தகையேறு = காளை ; கயிறு
ஒரீஇ = கயிற்றை அறுத்துக் கொண்டு ; கலை
= மான் ; ஆன் = பசு ; புதல்
= புதர்)
இப்பாடலில் எடுத்தார்ப்ப - தடநிலை, பெருந்தொழுவில்
-தகையேறு,தகையேறு- மரம்பாய்ந்து என்பன போன்ற இடங்களில் கலித்தளையும்,தண்புறவில்
- கோவலர், மரம் பாய்ந்து -வீங்குமணி போன்ற இடங்களில் வெண்சீர் வெண்டளையும்,
குடநிலைத் - தண்புறவில் என்பதில் இயற்சீர் வெண்டளையும், கோவல - ரெடுத்தார்ப்ப
என்பதில் நிரையொன்றாசிரியத் தளையும் எனப் பலதளைகளும் கலந்து வந்துள்ளமையால்
இப்பாடலின் ஓசை, பிரிந்திசைத்துள்ளல்
ஆகும்.
2.1.2 வஞ்சிப்பா
வஞ்சிப்பாவுக்குரிய அடியும் ஓசையும் பற்றிப் படிப்போம்.
வஞ்சிப்பா அடி அமைப்பில் ஏனைய பாக்களிலிருந்து வேறுபட்டது. குறளடிகளால் அல்லது
சிந்தடிகளால் அமைந்து வருவது வஞ்சிப்பா.வேறு எவ்வகை அடியும் வஞ்சிப்பாவில்
வராது.
வஞ்சிப்பாவின் ஓசை, தூங்கல் ஓசை எனப்படும். தூங்கல் எனும் சொல்லுக்கு யானை
எனும் பொருள் உண்டு. யானை நின்று கொண்டிருக்கும் போதே இருபுறமும் மாறி மாறி
அசைந்துகொண்டு நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். நீண்ட சீர்கள் (கனிச்சீர்கள்)
இரண்டு கொண்டமைந்த அடிகள் அடுத்தடுத்து வரும்போது அந்த ஓசை, யானையின் நீண்ட
அசைவை நினைவுபடுத்தக் கூடும். ஆகவே வஞ்சிப்பாவின் ஓசையைத் தூங்கல் ஓசை என்றனர்.
இவ்வோசை மூவகைப்படும்.
(i) ஏந்திசைத் தூங்கல் ஓசை
பா முழுவதும் ஒன்றிய வஞ்சித்தளையால் அமைந்திருந்தால்
அது ஏந்திசைத் துள்ளல் ஆகும்.
(ii) அகவல் தூங்கல் ஓசை
பாடல் முழுவதும் ஒன்றாத வஞ்சித் தளையால் வருவது
அகவல் தூங்கல் ஓசை ஆகும்.
(iii) பிரிந்திசைத் தூங்கல் ஓசை
வஞ்சித் தளைகளுடன் பிற தளைகளும் விரவி வருவது பிரிந்திசைத்
தூங்கல் ஓசை ஆகும்.
2.1.3 மருட்பா
மருட்பாவின் இலக்கணத்தை விரிவாகப் பின்னர்க் காண்போம்.
இப்போதைய நோக்கிற்கேற்ப அதனைச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளலாம். மருட்பா
என்பது நால்வகைப் பாக்களிலிருந்து வேறுபட்ட ஒரு தனிப்பா அன்று. வெண்பாவாகத்
தொடங்கி, ஆசி்யப்பாவாக முடியும் ஒரு கலப்புப் பாவே மருட்பா. ஆகவே மருட்பாவுக்கு
அடி, ஓசை ஆகிய இலக்கணங்களை, இலக்கண ஆசிரியர்கள் தனியாக எடுத்துச் சொல்வதில்லை.
மருட்பாவில் உள்ள வெண்பா அடிகளில் வெண்பாவுக்குரிய செப்பல் ஓசையும் ஆசிரிய
அடிகளில் ஆசிரியப்பாவுக்குரிய அகவல் ஓசையும் அமைந்திருக்கும். மருட்பா இலக்கணம்
காணும்போது இதனை நீங்கள் விரிவாகப் படித்தறியலாம்.
இனிக் கலிப்பாவின் பொது இலக்கணம்,அதன் வகைகள் ஆகியன
பற்றிக் காணலாம். |