2.2
கலிப்பாவின் பொது இலக்கணம்
கலிப்பாவின் வகைகளாகிய வெண்கலிப்பாவிலும், கொச்சகக் கலிப்பாவிலும் நேரீற்றியற்சீர்
வரலாம். கொச்சகக் கலிப்பாவில் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வரலாம்.
தரவு என்னும் உறுப்பு கலிப்பாவின் தொடக்கத்தில் வரும் உறுப்பு.இதற்கு எருத்தம் எனும் பெயரும் உண்டு.(தரவு = தருதல், முதலாவதாகத் தரப்படுவது.எருத்தம் = பிடரி, யானைப்பிடரி = தலைமையாக அமையும் உறுப்பு.)
கலிப்பாவில் தரவை அடுத்து வரும் உறுப்பு தாழிசை ஆகும். தரவின் ஓசையைவிடச் சற்றுத் தாழ்ந்து வரும் ஓசை என்பதனால் இது தாழிசை எனப்பட்டது. தரவுக்கும் ஏனைய உறுப்புகளுக்கும் இடையில் வருவதால் இது இடைநிலைப்பாட்டு எனவும் பெயர் பெறும்.
இவ்வுறுப்பு இசை இனிமை உடையது. அதனால் வண்ணகம் எனவும் பெயர் பெறும். விரைந்து செல்லும் ஓசையுடையது என்பதனால் முடுகியல் எனவும் பெயர் பெறும். ஓசை அடுக்கி வருவது என்பதனால் அடுக்கியல் எனவும் பெயர் பெறும்.
அம்பு = தண்ணீர் ; தரங்கம் = அலை. நீரலை பெரிதாகத் தொடங்கிக் கரைசேரச் சேரச் சுருங்கி முடிவது போல நாற்சீரடி, முச்சீரடி,இருசீரடி என அடு்த்தடுத்து வரும் உறுப்பு இது. ஆகவே இது அம்போதரங்கம் எனப்பட்டது. அம்போதரங்க உறுப்பில் ஒரு சொல்லே ஒரு சீராக வருவதால் சொற்சீரடி எனவும்,ஓர் அசையே சீராக வரும் அடிகள் கொண்டிருப்பதால் அசையடி எனவும் இதற்கு வேறு பெயர்கள் உண்டு. சீர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதால் எண் எனும் பெயரும் உண்டு.
கலிப்பாவின் இறுதி உறுப்பாகிய சுரிதகத்தை ஏனைய உறுப்புகளின் இணைப்பதற்காகச் சுரிதகத்தின் முன் வரும் ஒரு தனிச்சொல் அல்லது தனிச்சீர், தனிச்சொல் என்னும் உறுப்பாகும்.
இதுவே கலியுறுப்புகளுள் இறுதி உறுப்பு. சுருங்கி முடிவது என்பது இதன் பொருள்.ஈற்றில் வைக்கப்படுவது எனும் பொருளில் வைப்பு எனவும் இறுதி வரம்பாக வருவது என்பதனால் வாரம் என்றும் இது பிற பெயர்கள் பெறும்.சுரிதகம் ஆசிரியப்பாவுக்குரிய அடியாகவோ,வெண்பாவுக்குரிய அடியாகவோ அமையும்.ஆசிரியச் சுரிதகம், வெள்ளைச் சுரிதகம் என முறையே பெயர் பெறும். எல்லாவகைக் கலிப்பாக்களிலும் இவ் ஆறு உறுப்புகளும் வாரா. எவ்வெவ் வகைக் கலிப்பாக்களில் எவ்வெவ் வுறுப்புகள் வரும் என்பதை அவ்வகைகளின் இலக்கணத்தில் அறிந்து கொள்ளலாம்.
கலிப்பா, தனிச் சொல்லும் சுரிதகமும் கொண்டு முடியும். |