2.7 மருட்பாவின் வகைகள்

     வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு பாக்களும் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன என்பதை முந்தைய பாடத்திலும் இந்தப் பாடத்திலும்     அறிந்து கொண்டிருக்கிறீர்கள். பாவிலுள்ள அடி எண்ணிக்கை, அடிவகை (குறளடி, சிந்தடி, அளவடி), உறுப்புகள் (தரவு, தாழிசை போல) ஆகியவற்றின் அமைப்பைக் கொண்டு அவை வகைபிரிக்கப்பட்டன. பாடலில் சொல்லப்படும் பொருள் அடிப்படையில் அவை பகுக்கப்படுவதில்லை. ஆனால் மருட்பா மட்டும் பாவின் உள்ளடக்கமாக உள்ள பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப் படுகிறது. மருட்பா, புறநிலை வாழ்த்து மருட்பா, கைக்கிளை மருட்பா,வாயுறை வாழ்த்து மருட்பா,செவியறிவுறூஉ மருட்பா என நான்கு வகைப்படும்.

2.7.1 புறநிலை வாழ்த்து மருட்பா

     தெய்வத்தை வாழ்த்துவது வாழ்த்து.     தெய்வத்தை முன்னிலையாக்கி வாழ்த்துவதும் உண்டு ; படர்க்கையில், புறத்தே நிறுத்தி வாழ்த்துவதும் உண்டு. இவ்வாறு புறத்தே நிறுத்தி வாழ்த்துவது புறநிலை வாழ்த்து ஆகும். அதாவது தெய்வத்தை வணங்கி நிற்கும் ஒருவனை ‘நீ வழிபடும்தெய்வம் உன்னைக் காக்க, பழியில்லாத செல்வத்துடன் உன் குலத்தார் அனைவரும் வழிவழியாகச் சிறப்பாக வாழுங்கள்’ என்று வாழ்த்துவது புறநிலை வாழ்த்து. இத்தகைய புறநிலை வாழ்த்தைப் பொருளாகக் கொண்டு அமையும் மருட்பா புறநிலை வாழ்த்து மருட்பா ஆகும்.

2.7.2 கைக்கிளை மருட்பா

     கைக்கிளை என்பது ஒருதலைக் காமத்தைக் குறிக்கும் என்பதை அறிந்திருப்பீர்கள். ஒத்த தலைவனும் தலைவியும் முதன் முதலில் சந்திக்கும் போது தொடக்கத்தில் ஒருவரிடம் மட்டும் தோன்றும் காதல் கைக்கிளைக் காதல் (பின்னர் அது இருபுறக் காதலாக மலரும்) இவ்வாறு வரும் ஒரு தற்காலிக ஒருதலைக் காதலே கைக்கிளைக் காதல். இத்தகைய கைக்கிளைக் காதலைப் பொருளாகக் கொண்டு அமையும் மருட்பா கைக்கிளை மருட்பா ஆகும்.

2.7.3 வாயுறை வாழ்த்து மருட்பா

     வாய் = வாய்மை, மெய்ம்மை ; வாயுறை = மருந்து எனவும் பொருள்படும். வாயுறை     வாழ்த்து = மெய்ப்பொருளை உள்ளடக்கியுள்ள வாழ்த்து. வேப்பங்காயும் கடுக்காயும் போன்ற ஒவ்வாத சுவைகளையுடைய ஆன்றோர் சொற்கள் முதலில் கசப்பாயிருந்தாலும் பின்னர் நன்மை பயக்கும். இத்தகைய சொற்களைத் தடையின்றி, நல்ல நோக்கத்துக்குப் பயன்படுத்தி அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்து ஆகும். இத்தகைய வாயுறை வாழ்த்தைப் பொருளாகக் கொண்டு அமையும் மருட்பா வாயுறை வாழ்த்து மருட்பா ஆகும்.

2.7.4 செவியறிவுறூஉ மருட்பா

     புறநானூற்றில் பாடாண்திணையில் செவியறிவுறூஉத்துறையில் அமைந்த பாடல்களைப் படித்திருப்பீர்கள்.செவியில் நன்கு படுமாறு அறிவுறுத்திச் சொல்வது என்பது இதன் பொருள். பெரியோர்களின் முன்னிலையில் அடங்கி அறங்களைப் பின்பற்றி வாழ்க என வாழ்த்துவது செவியறிவுறூஉ. இத்தகைய செவியறிவுறூஉவைப் பொருளாகக் கொள்வது செவியறிவுறூஉ மருட்பா ஆகும்.