|
3.1
பாவகை, பா இனம் - ஒற்றுமை வேற்றுமைகள்
வெண்பாவின் வகைகளாகிய குறள்
வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சிந்தியல்
வெண்பா ஆகியவற்றையும் ஆசிரியப்பாவின் வகைகளாகிய
நேரிசை ஆசிரியப்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா,
அடிமறி மண்டில ஆசிரியப்பா ஆகியவற்றையும் முதல் பாடத்தில்
படித்து அறிந்திருக்கிறீர்கள். இங்கே, நீங்கள் காணவிருக்கும் பா
‘இனங்களு’க்கும் முன்பு கண்ட பா
‘வகைகளு’க்கும் இடையே ஒற்றுமை வேற்றுமைகள் யாவை என முதலில் காணலாம்.
பாக்களின் பொது இலக்கணம்
அவற்றின் வகைகளில் முற்றிலுமாக அமைந்திருக்கும்.எடுத்துக் காட்டாக ஆசிரியப்பாவின்
பொது இலக்கணம் அதன் வகைகளில் ஒன்றாகிய
நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஆனால் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை
ஆசிரியப்பாவின் இனங்களாகிய ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்
துறை, ஆசிரிய விருத்தம் ஆகியவற்றில் காண முடியாது.மிக மேலோட்டமான சில ஒற்றுமைகளைக்
கொண்டே பா இனங்கள் அந்தந்தப் பாக்களின் பெயரால் வகைப்படுத்தப் படுகின்றன.
எடுத்துக்காட்டாக வெண்டாழிசையைப் பார்க்கலாம்.
நண்பி
தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவ செய்யார்
அன்பு வேண்டு பவர்
(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
|
இதில் வெண்பாவுக்கு உயிரான
செப்பல் ஓசையோ, வெண்டளைகளோ இல்லை. இதனை
வெண்பாவில் எக் காரணத்தாலும் சேர்க்க முடியாது. ஆனால் முதலிரண்டடிகளும் நாற்சீரடியாகவும்
ஈற்றடி சிந்தடியாகவும் அமைந்திருக்கும் ஒரே காரணத்தால் இது சிந்தியல் வெண்பாவை
ஒத்துத் தோன்றுகிறது. இது, மேலோட்டமான ஒற்றுமையே ஆகும். இந்த ஒற்றுமை கருதி,
இதனை வெண்பாவின் இனத்துள் அடக்கி ‘வெண்டாழிசை’ என வகுக்கின்றனர். ஏனைய இனங்களும்
இவ்வாறே தோற்ற ஒற்றுமையால் அந்தந்தப் பாக்களின் இனங்களாக
வகுக்கப்பட்டுள்ளன. இதனை அவ்வவ்வினங்களின் இலக்கணத்தைப்
படிக்கும்போது மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்.
ஒன்றை இப்போது தெளிவாக மனத்துள் இருத்திக் கொள்ள வேண்டும். பாக்களின் ‘வகை’
என்பது வேறு; ‘இனம்’ என்பது வேறு. |