3.2 வெண்பாவின் இனங்கள்

    தாழிசை, துறை, விருத்தம் என்பன ஒவ்வொரு பாவுக்கும் உரிய இனங்கள் என முன்பு பார்த்தோம். இச்சொற்களின் பொருள் கொண்டு இவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. தாழ்ந்துவரும் இசையுடையது ‘தாழிசை’ எனப் பாக்கள் பற்றிய பாடத்தில் அறிந்தீர்கள்.‘துறை’ என்பது ஒரு பிரிவு எனும் பொருள் தருவது. ‘விருத்தம்’ எனும் சொல் வடமொழிப் பாவினத்தின் பெயரைக் குறிக்கும் வடசொல். ஆயினும் பெயர்தான் வடமொழிச் சொல்.அது குறிக்கும் இனம் முற்றிலும் தமிழ் யாப்பே ஆகும்.இனி, வெண்பாவின் இனங்கள் யாவை எனப் பார்ப்போம்.

    இரண்டடிகளில் அமையும் வெண்பா இனங்களைக் குறள் வெண்பாவின் இனங்கள் எனவும், மூன்றடி முதல் பல அடிகள் வரை கொண்டு அமையும் இனங்களைப் பிற வெண்பாக்களின் இனங்கள் என்றும் பகுத்துள்ளனர். இத்தகைய பகுப்புக்கு அடிப்படை என்ன என்பது உங்களுக்குப் புரியும். குறள் வெண்பா இரண்டடியாலாகியது. ஆகவே     வெண்பா இனங்களுள் இரண்டடியாலானது குறள்வெண்பாவின் இனம் ஆயிற்று. சிந்தியல் வெண்பா முதல் பஃறொடை வெண்பா வரையிலான வெண்பாக்கள்    முறையே     மூன்றடி முதல் பலவடிகள் வரை பெறுவன என்பதால் மூன்று முதல் பலவடிகள் வரை பெறும் இனங்களைப் பிறவெண்பாக்களின் இனம் என்றனர்.

     குறள் வெண்பாவின் இனங்கள் இரண்டு. அவை குறள்வெண் செந்துறை, குறட்டாழிசை என்பன. குறள்வெண்பாவுக்கு விருத்தம் எனும் இனம் இல்லை. பிற வெண்பாக்களின் இனங்கள் வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என மூன்று.

3.2.1 குறள்வெண் செந்துறை

     இது, செந்துறை வெள்ளை எனவும் பெயர் பெறும்.

(i) இரண்டடியாய் வரும்.

(ii) இரண்டடியும் தம்முள் அளவு ஒத்து வரும். அளவு ஒத்து வருதல் என்பது இரண்டடியிலும் சீர் எண்ணிக்கை சமமாக வருவது.

(iii) ஒழுகிய ஓசையும் (தடையில்லாத இனிய ஓசையும்) விழுமிய பொருளும் (மேன்மையான பொருளும்) பெற்று வரும்.

(எ.டு)

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை

          (முதுமொழிக்காஞ்சி - 1)

(ஆர்கலி = ஒலிக்கும் கடல் ; சிறந்தன்று = சிறந்தது)

மேற்காட்டிய பாடல் இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து ஓசையினிமை யுடையதாக வருவது காண்க.‘ஓதுவதினும் மலோனது ஒழுக்கம்’ என மலோன     பொருளையும் இப்பாடல் கொண்டிருக்கிறது. ஆகவே இது குறள் வெண்செந்துறை ஆகும்.

3.2.2 குறட்டாழிசை

     குறட்டாழிசை என்பது,

(i) இரண்டடியாய் வரும்.

(ii) அவ்வடிகள் நான்கு சீர்களுக்கும் அதிகமான சீர்களைப் பெற்று, முதலடியைவிட ஈற்றடி சில சீர்கள் குறைவாகக் கொண்டிருக்கும். (குறள் + தாழிசை = குறட்டாழிசை)

(எ.டு)

நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர
             சாய ஞானநல்
கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே
    
(யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்)

(நண்ணுவார் = நெருங்கி வணங்குவோர் ; நைய = அழிய ; நாடொறும் = நாள்தோறும்)

மேற்காட்டிய பாடல் நாற்சீரினும் மிகுந்த சீர்கள் கொண்ட இரண்டடியால் ஆகி, முதலடியை விட ஈற்றடி சில சீர்கள் குறைந்து வருவதனால் குறட்டாழிசை ஆகும். (முதலடி = 8 சீர் ; ஈற்றடி = 5 சீர்)

     இனி, வேறு இருவகைப் பாடல்களையும் குறட்டாழிசையில் அடக்குவது உண்டு ;அவை செந்துறை சிதைந்த குறட்டாழிசையும், குறள்வெண்பா ஓசை கெட்டுவரும் பாடலும் ஆகும்.

(i) குறள்வெண் செந்துறை போலவே இரண்டடியாய், அளவு ஒத்து வரினும், இனிய ஓசையும் விழுமிய பொருளும் இல்லாமல் வருவதைக் குறட்டாழிசையுள் அடக்கிக் கூறுவர்.     இது, ‘செந்துறைச் சிதைவுக் குறட்டாழிசை’ எனப்படும்.

(எ.டு)

பிண்டியின் நீழல் பெருமான் பிடர்த்தலை
மண்டலம் தோன்றுமால் வாழி அன்னாய்

    
(யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்)
         

(பிண்டி = அசோகமரம் ; பெருமான் = அருகன் ; மண்டிலம் = உலகம்)

     இரண்டடிகள் அளவொத்து வந்துள்ளன.ஆயினும் பாடலின் பொருள் மலோனதாக இல்லை.அருக தேவனின் தலைமீது உலகம் இருக்கிறது என்பது பொருள். கடவுளின் பாதங்களில் உலகம் இருக்கிறது எனக் கூறுவதுதான் கடவுளுக்குப் பெருமை. இவ்வாறு பொருட் சிறப்பில்லாமல் அமைந்திருப்பதால் இது செந்துறைச் சிதைவுக் குறட்டாழிசை ஆயிற்று.

(ii) குறள்வெண்பா எழுதும் போது வெண்டளை அல்லாத வேற்றுத்தளை கலந்து, செப்பலோசை சிதைந்துவிடுமாயின் அது குறள்வெண்பா ஆகாது. அதனைக் குறட்டாழிசையுள் அடக்குவர்.

(எ.டு)

வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
பண்டையள் அல்லள் படி

    
(யாப்பருங்கலக்காரிகை, உரைமேற்கோள்)

         

(கோதை = மாலை ; பண்டையள் = பழைய நாளில் இருந்தது போன்றவள்)

மேற்காட்டிய பாடல் குறள்வெண்பாப் போலவே தோன்றினும் வரிவளைக்கைத் - திருநுதலாள் என்னும் சீர் இணைப்பில் கலித்தளை அமைந்திருப்பதைக் (காய் முன் நிரை) காணுங்கள். இவ்வாறு, வேற்றுத்தளை கலந்திருப்பதால் இது குறட்டாழிசை ஆயிற்று.

     குறள்வெண் செந்துறை, குறட்டாழிசை ஆகிய இரண்டுக்கும் உரிய இலக்கணம் கூறும் நூற்பாவைக் காண்போம்.

அந்தமில் பாதம் அளவிரண் டொத்து  முடியின்வெள்ளைச்
செந்துறை யாகும் திருவே அதன்பெயர் சீர்பலவாய்
அந்தம் குறைநவும் செந்துறைப் பாட்டின் இழிபுமங்கேழ்ச்
சந்தம் சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே

         
(யாப்பருங்கலக் காரிகை. 27)

         

நூற்பாவின் பொருள் : ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் உடைய இரண்டு அடிகள் தம்முள் அளவொத்து வருவது குறள்வெண் செந்துறை ஆகும். பல சீர்கள் கொண்ட இரண்டடிகளாய் முதலடியை விட ஈற்றடியில் சில சீர்கள் குறைந்து வருவது குறட்டாழிசை ஆகும். அதுமட்டுமன்றிக் குறள்வெண் செந்துறை இனிய ஓசையும் விழுமிய பொருளும் இல்லாதிருந்தால் அதுவும் குறட்டாழிசை எனப்படும். மேலும் குறள்வெண்பாவில் வேற்றுத் தளை கலந்து செப்பலோசை சிதைந்து வருவதும் குறட்டாழிசை என்றே வகைப்படுத்தப்படும்.

3.2.3 வெண்டாழிசை

(i) மூன்றடியாய், ஈற்றடி வெண்பாப் போலச் சிந்தடியாய் வருவது வெண்டாழிசை ஆகும். இதற்கு வெள்ளொத்தாழிசை என்பதும் பெயர்.

(ii) மூன்று சிந்தியல்     வெண்பாக்கள் ஒருபொருள் மேல் அடுக்கி வருவதையும் வெள்ளொத்தாழிசை என்று குறிப்பிடுவர். (வெண்பா + தாழிசை = வெண்டாழிசை)

(எ.டு)

நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவு செய்யார்
அன்பு வேண்டு பவர்

    (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)

(நண்பிது = நட்புக்குரியது ; முனிவு = தீமை)

மேற்காட்டிய பாடலில் மூன்றடிகள் வந்துள்ளன. சிந்தியல் வெண்பாப் போலத் தோன்றினாலும் வெண்டளைகள் வரவில்லை ; செப்பலோசை இல்லை. ஈற்றடி சிந்தடியாக உள்ளது. ஆகவே இது வெண்டாழிசை ஆகும்.

     கலிப்பாவின் இலக்கணம் படிக்கும்போது தாழிசைகள் மூன்று ஒருபொருள் மேல் அடுக்கிவருவது ஒத்தாழிசை என அறிந்தீர்கள். பா     இனத்திலும் தாழிசை ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருவதுண்டு. வெண்பாவின் இலக்கணம் பிழையாத சிந்தியல் வெண்பாக்கள் ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவது வெளளொத்தாழிசை எனப்படும்.

(எ.டு)

அன்னாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்

ஏடி அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
நீடான் துறந்து விடல்

பாவாய் அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல நலம்கவர்ந்து
காவான் துறந்து விடல்

    (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
    


மேற்கண்டவை மூன்றும் சிந்தியல் வெண்பாக்கள். மூன்றிலும் பொருள் ஒன்றே ;சொல்லமைப்புகளும் ஒரே மாதிரியாக உள்ளன. ‘தலைவன் தலைவியின் அழகை நுகர்ந்தபின் அவளைப் பிரிந்து செல்வது அறம்தானா’ என்னும் கேள்வியே மூன்று பாடல்களிலும் உள்ள பொருள். அறங்கொல், நலங்கிளர் சேட்சென்னி, உடைபுறம்போல, நலங்கவர்ந்து, துறந்துவிடல் ஆகிய சொற்களும் தொடர்களும் மூன்று பாடல்களிலும் வருகின்றன. இவ்வாறு, சிந்தியல் வெண்பா மூன்று, ஒருபொருள்மேல் அடுக்கி வந்தமையால் இது வெள்ளொத்தாழிசை ஆகும்.

3.2.4 வெண்டுறை

     வெண்டுறை என்பது,

(i) குறைந்த அளவு மூன்றடிகளும் அதிக அளவு ஏழடிகளும் பெற்று வரும்.

(ii) முதலில் வரும் அடிகளை விடப் பின்னர் வரும் அடிகள சில சீர்கள் குறைவாகக் கொண்டிருக்கும்.

(iii) முதலில் வரும் சில அடிகள் ஓர் ஓசை அமைப்பிலும் பின்னர் வரும் அடிகள் வேறு ஓர் ஓசை அமைப்பிலும் வந்தால் அது வேற்றொலி வெண்டுறை எனப்படும்.எல்லா     அடியும் ஒரே மாதிரியான ஓசை அமைப்பில் வந்தால் அது ஓரொலி வெண்டுறை எனப்படும். (வெண்[பா] + துறை = வெண்டுறை)

(எ.டு)

தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம்
            என்னாம்
ஆளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோல் சாய்த்துவிழும் பிளிற்றி யாங்கே

    (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)


(தாளாளர் = முயற்சியுடையோர் ; ஆளி = சிங்கம் ; கோடு
= கொம்பு ; பீலி = மயில்தோகை)

மூன்றடியாய், முதலடியை விடப் பின்னிரண்டடிகளும் இருசீர் குறைந்து வருவதால் இது வெண்டுறையாகும். பாடல் முழுதும் ஒரே ஓசையமைப்பில் (ஒரே மாதிரிச் சீர்கள்) உள்ளமையால் இது ஓரொலி வெண்டுறை.

3.2.5 வெளிவிருத்தம்

(i)
மூன்று அல்லது நான்கடிகளாய் வரும்.

(ii) ஒவ்வோர் அடியின் இறுதியிலும் (நான்கு சீர்களைத் தாண்டி) ஒரு தனிச்சொல் வரும்.

இவ்வாறு வருவது வெளிவிருத்தம் ஆகும். (வெண்பா + விருத்தம் = வெளிவிருத்தம்)

(எ.டு)

கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால் -
            என்செய்கோயான்
வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் -
             என்செய்கோயான்
எண்டிசையும் தோகை இருந்தகவி ஏங்கினவால் -
            என்செய்கோயான

    (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
    

(கொண்டல் = மேகம் ; கோபம் = இந்திரகோபப்பூச்சி ; வரி = வரிப்பாட்டு ; தளவம் = முல்லை ; அகவி = கூவி; என்செய்கோ = என்ன செய்வேன்)

     இது, மூன்றடியாய், ஒவ்வோரடியின் இறுதியிலும் ஒரு தனிச்சொல் பெற்று வந்திருப்பதால் வெளிவிருத்தம் ஆகும்.

     இனி, இவற்றின் இலக்கணம் கூறும் நூற்பாவைக் காணலாம்.

மூன்றடி யானும் முடிந்தடி தோறும் முடிவிடத்துத்
தான்தனிச் சொல்பெறும் தண்டா விருத்தம்வெண்
             தாழிசையே
மூன்றடி யாய்வெள்ளை போன்றிறும் மூன்றிழி
            பேழுயர்வாய்
ஆன்றடி தாம்சில அந்தம் குறைந்திறும்
             வெண்டுறையே

        (யாப்பருங்கலக் காரிகை, 27)

    
  • நூற்பாவின் பொருள்

     மூன்று அல்லது நான்கடியாய் வந்து ஒவ்வோரடியின் இறுதியிலும் ஒரு தனிச்சொல் பெற்று வருவது வெளிவிருத்தம்; மூன்றடியாய், வெண்பாவைப் போல ஈற்றடி சிந்தடியாய் வருவது வெண்டாழிசை மூன்றடிச் சிறுமையும் ஏழடிப் பெருமையும் கொண்டு முதலில் வரும் அடிகளைவிடப் பின்னர்வரும் அடிகளில் சில சீர்கள் குறைந்து வருவது வெண்டுறை.

     வெண்பாவின் இனங்களை அறிந்து கொண்டீர்கள். இவை வெண்பாவின் இனங்களாக வகுக்கப்பட்டமைக்கான காரணங்களை (மேலோட்டமான ஒற்றுமைகளை ) நீங்களே சுட்டிக் காட்டிவிட முடியும்.

(i) இரண்டடியாய் வருபவையும், இரண்டாமடி முதலடியை விடக் குறுகி வருபவையும், இரண்டடியாய் வரும் குறள்வெண்பாவின் இனமாக வகுக்கப் பெற்றன.

(ii) மூன்றடியாயும் அதற்கு மேற்பட்டும் வரும் பாடல்கள் பிறவெண்பாக்களின் இனங்களாக வகுக்கப்பெற்றன. அவற்றுள் வெண்டாழிசையில்     ஈற்றட சிந்தடியாக வருதல், வெண்டுறையில் பின்னர் வரும் அடிகள் சீர் எண்ணிக்கை குறைந்து வருதல், வெளிவிருத்தத்தில் அடிகளின் இறுதியில்
தனிச்சீர் வருதல் ஆகியவை வெண்பாவில் உள்ள தன்மைகளை உங்களுக்கு நினைவூட்டியிருக்கும்.

(iii) மூன்றடியாய் வரும் வெண்டாழிசையைச்     சிந்தியல் வெண்பாவின் இனமாகவும், வெளிவிருத்தம் நான்கடியாய் வரும்போது அதனை நேரிசை வெண்பாவின் இனமாகவும், அதிக அளவாக ஏழடிகள் வரை பெறும் வெண்டுறையைப் பஃறொடை வெண்பாவின் இனமாகவும் கொள்ள வேண்டும்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
ஒவ்வொரு பாவுக்கும் உரிய இனங்கள் யாவை?
2.
பா ‘வகை’ பா ‘இனம்’ இரண்டும் ஒன்றா?
3.
குறள் வெண்பாவின் இனங்கள் யாவை?
4.
குறள்வெண் செந்துறையின் பொருள் எவ்வாறு
இருக்க வேண்டும்?

5.
  வேற்றுத்தளை, குறள்வெண்பாவில் நுழைந்தால்
அதனை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
6.
வெண்டாழிசையின் இலக்கணம் தருக.
7.
  வெண்டுறையின் அடி எண்ணிக்கையைக்
குறிப்பிடுக.
8.
ஓரொலி வெண்டுறை, வேற்றொலி வெண்டுறை
- வேறுபாடு காட்டுக.
9.
அடியிறுதியில் தனிச்சொல் பெறும் வெண்பா
இனம் எது?
10.
வெளிவிருத்தத்தின் அடி எண்ணிக்கையைக்
குறிப்பிடுக.