|  
        5.3 
        அசைக்குப் புறனடை 
         
            எழுத்து தனித்தும் ஒன்றோடொன்று சேர்ந்தும் அசையாகும் 
        முறைகள் பற்றி உறுப்பியலில் படித்திருக்கிறீர்கள். தனிக்குறில் ஒரு நேரசையாகும் 
        என்பது     அங்குச் சொல்லப்பட்டது. இங்கு ஒழிபியலில் 
        அதற்கு ஒரு புறனடை சொல்லப்படுகிறது. (உறுப்பியல் பாடத்தில் இந்தப் புறனடை 
        சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.) உயிரளபெடை வரும் போது அதனை அலகிடுவது எவ்வாறு 
        என்ற புதிய செய்தியும் இப்பகுதியில் சொல்லப்படுகிறது. 
        5.3.1 
        தனிக்குறில் நேரசையாக வரும் இடம் 
         
            அசை பற்றிய நூற்பாவில் (குறிலே நெடிலே குறிலிணை- 
        5) தனிக்குறில் நேரசையாக வரும் எனக் கூறப்பட்டுள்ளது. சீரின் முதலிலோ இடையிலோ 
        தனிக்குறில் நேரசையாக வராது என நூற்பாவிலோ உரையிலோ வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. 
         
      
         
          (1) தனிக்குறில் நேரசைக்கு 
              நூற்பாவில் எடுத்துக் காட்டுத் தரப்பட்டுள்ளது. ஆழி, ஆ-ழி =ஆ-தனிநெடில் 
              நேரசை ; ழி- தனிக்குறில் நேரசை. இதன் மூலம் தனிக்குறில் சீரின் முதலில் 
              நேரசையாக வராது என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் அமிதசாகரர்.  | 
         
         
          (2) இரு குறில் இணைந்தால் 
              அது நிரையசை என வகுப்பதன் மூலம் சீரின் முதலில் வரும் குறில், அடுத்து 
              வரும் குறில் அல்லது நெடிலுடன் சேர்த்து நிரையசையாக்கப்பட     
              வேண்டும்     என்பது உணர்த்தப்படுகிறது. கசடற 
              என்பதை க-ச-ட-ற எனத் தனித்தனி நேரசைகளாகப் பிரிக்க முடியாது. கச-டற 
              என இரு நிரையசைகளாக்க வேண்டும்.   | 
         
       
 ஆக. உறுப்பியலில் தனிக்குறில் 
 சீரின் முதலிலும் இடையிலும் 
 நேரசையாகாது என்பது நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. 
 
 எனினும் சீரின் முதலில் தனிக்குறில் நேரசையாக 
 வரும் 
 இடமும் உண்டு.
  
     சீரின் முதலில் ஒரு குற்றெழுத்து 
 விட்டிசைத்து 
 வரும்போது அக்குற்றெழுத்துத் தனித்து ஒரு நேரசையாக 
 வரும். விட்டிசைத்தல் என்றால் என்ன? தமிழில் இரண்டு 
 
 உயிரெழுத்துகள் அடுத்தடுத்து நிற்பதில்லை ; அவ்வாறு வர 
 நேர்ந்தால் அவற்றை இணைக்க நடுவே ஓர் உடம்படுமெய் 
 (யகரம் அல்லது வகரம்) வரும் எனும் 
 இலக்கணத்தை 
 நன்னூலில்     படித்திருப்பீர்கள்.     கோ+இல் 
 (ஓ+இ) > 
 கோ+வ்+இல் > கோவில் என்பதில் இரண்டு உயிர்களை 
 
 இணைக்க வகர உடம்படு மெய் வந்திருப்பது காண்க. ஆனால் 
 புலவர்கள் செய்யுள் செய்யும்போது சில 
 குறிப்பிட்ட 
 நோக்கங்களுக்காக அடுத்தடுத்து இரண்டு உயிர்களை நடு 
 இணைப்பு எதுவுமின்றி     நிறுத்துவார்கள். 
 அப்போது 
 அவ்வுயிர்களுக்கிடையே ஓர் ஓசைத்தடை ஏற்படும். இதுவே 
 விட்டிசை. அ, ஆ, இ, ஈ . . . . . என உயிர்களை நீங்கள் 
 உச்சரித்துப் பாருங்கள். உயிர்களுக்கிடையே 
 ஒலித்தடை 
 வருவதை உணர்வீர்கள்.சீரின் முதலில் வரும் குற்றெழுத்துக்குப்
 பின் மற்றோர் உயிர் வந்தால் இங்கு ஏற்படும் 
 விட்டிசை 
 காரணமாக, முதலில் வரும் குற்றெழுத்துத் தனித்து நேரசை 
 யாகிவிடும். முதலில் மட்டுமின்றி இடையிலும் இறுதியிலும் 
 
 விட்டிசைத்து வரும் குறில்கள் நேரசைகளாகவே வரும்.
  
     செய்யுளில் விட்டிசை அமைவதற்கான இடங்கள் அல்லது 
 
 காரணங்கள் யாவை?
  
     (1) ஏவல்  
     (2) தற்சுட்டு 
     (3) குறிப்பு 
     (4) வினா 
     (5) சுட்டு
  
 ஆகிய காரணங்களால் விட்டிசை அமையும்.
  
 எடுத்துக்காட்டு : 
  
 
 
 அஉ அறியா 
 அறிவில் இடைமகனே  
 நொஅலையல் நின்ஆட்டை நீ 
      - (யாப்பருங்கலக் காரிகை, 
 உரைமேற்கோள்) | 
  
  
 
 (அஉ= அகரம் உகரம் ஆகிய 
 எழுத்து ; நொ அலையல் 
 = துன்புறுத்தாதே)
  
     அஉ எனும் சீரில் உயிர்கள் விட்டிசைப்பதால் 
 அ-உ > 
 நேர் நேர் > தேமா என அலகிட வேண்டும். இங்கு அ, உ 
 என்பன அந்த எழுத்துகளையே குறிப்பதால் இது தற்சுட்டில் 
 வந்த விட்டிசை. நொஅ (ஒஅ) எனும் விட்டிசையில் ‘நொ’ 
 
 முன்னிலை ஏவல். ஆகவே இது ஏவல் விட்டிசை.
  
 எடுத்துக்காட்டு : 
  
 
 
 அஅவனும் 
 இஇவனும் உஉவனும் கூடியக்கால்  
 எஎவனை வெல்லார் இகல்
      (யாப்பருங்கலக் 
 காரிகை, உரைமேற்கோள்) | 
  
  
          இந்தச் 
        செய்யுளில் அ இ உ என்பன சுட்டு ; என என்பது வினா. இந்நான்கும் மொழி முதலில் 
        தனி நேரசைகள் ஆகும். 
         
            பிற பொருள்களில் வரும் விட்டிசைக்கான எடுத்துக் 
        காட்டுகளை இணைய நூலகத்தில், காரிகை நூலில் காண்க. 
        5.3.2 
        உயிரளபெடையை அலகிடும் முறை 
         
            சீரும் தளையும் சிதையும் போது அளபெடையை நெடில்போலக் 
        கொண்டு அலகிட வேண்டும் எனச் சென்ற நூற்பாவில் பார்த்தோம். சீரும் தளையும் 
        சிதையாத போது இயல்பான நிலையில் உயிரளபெடையை எவ்வாறு அலகிட வேண்டும் என இங்குப் 
        பார்ப்போம்.  
      
         
          (1) தனிநெட்டெழுத்து 
              அளபெடுத்தால் நெடிலையும் அளபெடை அறிகுறியான குறிலையும் பிரித்து நேர் 
              நேர் என அலகிட வேண்டும். ஆஅதல் என்பதை ஆ-அ-தல் > நேர் நேர் நேர் என 
              அலகிட வேண்டும். அறிகுறி எழுத்தைப் பின்னால் வரும் குறில் அல்லது நெடிலோடு 
              சேர்த்து நிரையசை யாக்கவும் கூடாது.   | 
         
         
          (2) ஒரு குறிலை அடுத்து 
              வரும் நெட்டெழுத்து அளபெடுத்தால் குறில் நெடில் நிரையசை, அளபெடை அறிகுறி 
              எழுத்து நேரசை என, அதாவது நிரை நேர் என அலகிட வேண்டும். படாஅம் என்பதைப் 
              படா-அம் > நிரை நேர் என அலகிட வேண்டும்.   | 
         
         
          (3) உயிரளபெடை சில 
              சமயம் மூன்று மாத்திரைக்கு மேலும் நீண்டு வரும். அவ்வாறு வந்தாலும் 
              மேற்குறித்தவாறு நேர் நேர், நிரை நேர் எனவே அலகிடப்படும்.     செறாஅஅய் 
                  என்பதை செறா-அஅய் > நிரை நேர் என்றே கொள்ள 
              வேண்டும்.  | 
         
       
 எடுத்துக்காட்டு : 
  
 
 
 |  
  ஏஎர் 
 சிதைய அழாஅல் எலாஅநின்  
 சேயரி சிந்தின கண் 
      - 
 (யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்) 
  | 
  
  
 
 (ஏஏர் = அழகு ;     அழாஅல் 
 = அழாதே ; எலாஅ 
 = தோழீ)
  
     மேற்கண்ட பாடலில் வரும் 
 உயிரளபெடைகளைக் 
 கீழ்க்காணுமாறு அலகிட வேண்டும்.
  
     ஏஎர் > ஏ-எர் >     
 நேர் நேர் > தேமா
 அழாஅல் > அழா-அல் > நிரை நேர் > புளிமா
 எலாஅநின் > எலா-அ-நின் > நிரை நேர் நேர் 
 > புளிமாங்காய்
  
 இனி, இவ்விலக்கணங்களைக் கூறும் நூற்பாவின் பொருள் : 
  
     சீரின் முதலில் விட்டிசைத்து 
 வந்தால் அன்றித் 
 தனிக்குறில் நேரசையாக வராது. தனிநெடில் அளபெடுத்தால் 
 நேர் நேர் எனவும், குறிலோடிணைந்த நெடில் அளபெடுத்தால் 
 நிரைநேர் எனவும் அலகிட வேண்டும்.
  
 மாணவர்களே ! 
  
     இந்த நூற்பாவில் நீங்கள் அறிந்து கொண்டவற்றுள்,
  
     (1) விட்டிசைத்தால் தனிக்குறில் 
 சீரின் முதலில் 
     நேரசையாகும் என்பது புறனடைக் கருத்து.
  
     (2) உயிரளபெடையை     அலகிடும் 
 முறை முன்பு 
     சொல்லப்படாத புதுக்கருத்து.
  
 அடுத்து, சீருக்கும் தளைக்கும் உரிய புறனடைகளைக் 
 
 காண்போம்.  
  |