1.6 தனித்த அணி இலக்கண நூல்கள்

    ஒரு துறைப் புலமையில் ஆழ்ந்த அறிவும், திட்பநுட்பமும் செறிந்திருக்க வேண்டும் என்று விரும்பிய இலக்கண ஆசிரியர்கள், இலக்கண வகைகளுள் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்     கொண்டு அதற்கு இலக்கணம் எழுதத் தொடங்கினர். அவ்வகையில்     அணி இலக்கணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அணிகளின் வகைகளைக் குறிப்பிட்டு, சான்றுப்பாடல்கள் இயற்றி நூல்கள் இயற்றத் தொடங்கினர்.

    தண்டியலங்காரம், மாறனலங்காரம் எனத் தமிழின் நீர்மை (இயல்பு)க்கேற்ப அமைந்தனவும்,     சந்திராலோகம், குவலயானந்தம், தொனி விளக்கு, சித்திரக்கவிகள் என வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பாக அமைந்தனவும் இவ்வகையில் அடங்கும். இவற்றைப் பற்றியும், கிடைக்கப் பெறாத அணி நூல்கள் சிலவற்றைப் பற்றியும் இங்குக் காண்போம்.

தண்டியலங்காரம்

    வீரசோழியத்தை அடுத்துத் தோன்றியது இந்நூல். தண்டி என்பவரால் இயற்றப்பட்டது இது. தொல்காப்பியத்தையும், வடமொழி நூலாகிய காவியாதரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இதில் 35 பொருள் அணிகளும், 2 சொல்லணி களும் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும்.

மாறனலங்காரம்

    திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் இயற்றப்பட்டது இந்நூல். ‘மாறன்’ என்பது நம்மாழ்வாரின் பெயர்களுள் ஒன்று. இந்நூலாசிரியர் நம்மாழ்வார் மீது கொண்ட பக்தியின் காரணமாக, நூலுக்கு, மாறனலங்காரம் எனப் பெயரிட்டுள்ளார். இந்நூல், தண்டியலங்காரத்தைப் பெரிதும் அடியொற்றியது. இதில் 64 பொருள் அணிகளும், 2 சொல்லணிகளும் இடம் பெற்றுள்ளன. காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு ஆகும்.

சந்திராலோகம

    திருத்தணிகை விசாகப் பெருமாள் ஐயர், சந்திராலோகம் என்னும் வடமொழி நூலை, அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது, 100 பொருள் அணிகளையும், 2 சொல்லணிகளையும் கொண்டுள்ளது. காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு ஆகும்.

குவலயானந்தம்

    அப்பைய தீட்சிதரால் இயற்றப்பட்டது இந்நூல். இது, சந்திராலோகத்தின் வடமொழி உரையாகும். இது தமிழில் அதே பெயருடன் வந்துள்ளது. இதனைச் சண்முக சிகாமணிக் கவிராயர் இயற்றினார். இது 120 பொருள் அணிகளைக் கொண்டுள்ளது. இதன் காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு ஆகும்.

தொனிவிளக்கு

    ஆனந்தவர்த்தனர் வடமொழியில் தொன்யாலோகம் என்னும் அணிஇலக்கண நூலை இயற்றியுள்ளார். அதனைத் தொனிவிளக்கு எனத் தமிழில் பின்னங்குடி சா.சுப்பிரமணிய சாத்திரியார் மொழி பெயர்த்துள்ளார். இவர் காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

சித்திரக்கவிகள்

    இவை, சொல்லணி வகையைச் சார்ந்தனவாகும். கி.பி. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தனவாகும்.

சித்திரக்கவி
-
நா.க.உ. கல்விக் களஞ்சியப்புலவர்
சோடச பங்கி, இரட்டை நாகபந்தம்
-
திரு.கா.மு. செட்டியார்
மாலைமாற்று ஏகபாதம்
-
வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்
சித்திரக்கவிப் புஞ்சம்
-
மதுரகவிப்புலவர்
மாலை மாற்று மூலம்
-
சோழவந்தான் அ. சண்முகம்பிள்ளை

கிடைக்கப் பெறாத அணி நூல்கள்

    மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள், மறைந்துபோன தமிழ் நூல்கள் என்னும் நூலில் மறைந்துபோன இலக்கண நூல் பெயர்கள் பலவற்றைச் சுட்டுகிறார். அவற்றுள் அணி இலக்கண நூல்களாகக் கருதப்படுபவை     1. அணியியல், 2.கவிமயக்கறை, 3. புணர்ப்பாவை,     4. போக்கியம், 5. இரணியம்,    6. வதுவிச்சை,     7. பெரிய முப்பழம் ஆகியனவாகும். இவை வருங்காலத்தில் கிடைக்கப் பெறும் என நம்புவோம்.