4.2 செய்யுள்நெறி - வகைகள்

    செய்யுள்நெறி இருவகைப்படும். அவை : (1) வைதருப்ப நெறி, (2) கௌட நெறி

    இதனைத் தண்டியலங்காரம் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறது.

மெய்பெறு மரபின் விரித்த செய்யுட்கு
வைதருப் பம்மே கௌடம் என்றுஆங்கு
எய்திய நெறிதாம் இருவகைப் படுமே
(தண்டியலங்காரம் : 13)

(மெய் = உண்மை
வைதருப்பம்மே = வைதருப்பம் ( - அசைநிலை)
எய்திய
= பொருந்திய)

4.2.1 வைதருப்ப நெறி

    விதர்ப்ப நாட்டார் ஆதரித்த நெறி ஆதலால் வைதருப்பநெறி எனப்பட்டது. இது எளிமையாகவும் இயல்பாகவும் அமையக் கூடியது. பத்துக் குணங்களைத் தன்னிடத்துக் கொண்டது. அவை,

01) செறிவு
02) தெளிவு
03) சமநிலை
04) இன்பம்
05) ஒழுகிசை
06) உதாரம்
07) உய்த்தல்இல் பொருண்மை
08) காந்தம்
09) வலி
10) சமாதி

ஆகியனவாகும்.

செறிவே தெளிவே சமநிலை இன்பம்
ஒழுகிசை உதாரம் உய்த்தல்இல் பொருண்மை
காந்தம் வலியே சமாதி என்றுஆங்கு
ஆய்ந்த ஈரைங் குணனும் உயிரா
வாய்ந்த என்ப வைதருப் பம்மே
(தண்டியலங்காரம் : 14)

(உதாரம் = அதிசயம்
உய்த்தல் = வருவித்தல்
உயிரா = உயிராக
வாய்ந்த = வாய்த்த)

4.2.2 கௌட நெறி

    கௌடரால் மேற்கொள்ளப்பட்ட நெறி, கௌட நெறியாகும். கௌடர் என்னும் பெயர், கௌட நாட்டினர் என ஒரு நாட்டினரைக் குறிப்பதும் ஆகலாம் ; தனி ஒருவருக்கு அமைந்த இடுகுறிப் பெயரும் ஆகலாம். இது குறித்து உரைநூல்களில் தெளிவான விளக்கம் காணப்படவில்லை.

    வைதருப்ப நெறியை மறுத்து எழுந்தது கௌட நெறியாகும். இதுவும் கீழ்க்காணும் பத்துக் குணங்களை உடையது :

01) செறிவு
02) தெளிவு
03) சமநிலை
04) இன்பம்
05) ஒழுகிசை
06) உதாரம்
07) உய்த்தல்இல் பொருண்மை
08) காந்தம்
09) வலி
10) சமாதி

    வைதருப்பர் தம் செறிவு முதலான இப்பத்து குணங்களுள் சிலவற்றைத் தழுவியும், சிலவற்றை மறுத்தும் அமைவது கௌட நெறியாகும்.

கௌடம் என்பது கருதிய பத்தொடும்
கூடாது இயலும் கொள்கைத்து என்ப
(தண்டியலங்காரம் : 15)

(கூடாது = பொருந்தாது
இயலும்
= அமையும்)

பத்தொடும் கூடாது என்பதில் இடம் பெறும் உம்மை முற்றும்மையாக அமையாமல் 'சிலவற்றொடு மட்டும் கூடி வரும்' என்னும் எச்சப் பொருள் தருவதும் உண்டு.

    கௌட நெறி குறித்துத் தனியே நூற்பாக்கள் இடம் பெறவில்லை; உரைகளின் வழி இடம்பெறும் சான்றுகளைக் கொண்டே அவற்றை அறிய முடிகின்றது. (கௌடநெறி குறித்துப் பாடம்- 6 இல் விரிவாகக் காண்போம்.)