4.3 வைதருப்பம் - செறிவு
வைதருப்பநெறியின் பத்துக்
குணங்களுள் முதலாவதாக
இடம்பெறுவது செறிவு என்பதாகும். செறிவு என்பது இறுகுதல்,
நெருங்குதல் என்னும் பொருளுடையது.
செறிவுஎனப் படுவது நெகிழிசை யின்மை |
என்பது தண்டியலங்கார நூற்பா.
செறிவு என்பது, நெகிழ்ந்த இசை
இன்றி வரத் தொடுப்பது
ஆகும். வல்லினம் விரவாமல் மெல்லினமோ, இடையினமோ
தொடர்ந்து வருமாறு அமைவது நெகிழிசை எனப்படும். எனவே,
அதற்கு மாறாய் (முரணாக) வல்லினமோ நெடிலோ செறிவாக
அமையுமாறு செய்யுள் தொடுக்கப்படுவது செறிவு என்பதாகும்.
செறிவு என்பது,
1) வல்லின ஒற்றுகள் சார்ந்து வருதல்.
2) வல்லின ஒற்றுகள் சாராது வருதல்.
3) நெட்டெழுத்துகள் மிகுதியாக வருதல்.
என மூவகைகளில் அமையும்.
4.3.1 வல்லொற்றுச் சார்ந்து வருதல்
க், ச், ட்,
த், ப், ற் என்பனவாகிய வல்லின ஒற்றுகள்
தொடர்ந்து செறிவாக இடம் பெறுமாறு செய்யுள் அமைதல்
செறிவு வகையாகும்.
சான்று :
துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடல்
தொடுத்த தொடைகடுக்கை பொன்போற் - பொடித்துத்
தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டித்து காடு |
(காளமேகப்புலவர் : பாடல் : 73)
|
(கோடல் = காந்தள்மலர்
கடுக்கை = கொன்றை
தோகை = மயில்
கடி = வாசனை
தோடுடித்த = தோள் துடித்த எனப் பிரிக்க)
என்பது கார்காலம் குறித்த காளமேகப்புலவரின் பாடல்.
காந்தள் மலர்கள் முகிழ்த்து
ஒளிகொண்டு அரும்புகளை
எடுத்தன; கொன்றைகள் பொன்போல் ஒளிரும் மாலைகளைத்
தொங்கவிட்டன; வளையல் அணிந்த
மகளிர் தோள்கள்
துடித்தன ; மயில்கள் கூத்தாடின. இவ்வாறு காடு
புதுமணம்
படைத்துக் காட்சி தந்தது என்பது இச்செய்யுளின் பொருள்.
4.3.2 வல்லொற்றுச் சாராது வருதல்
வல்லின ஒற்றுகளைச்
சாராமல், வல்லின உயிர்மெய்கள்
வருமாறு அமையும் செய்யுளும் செறிவு வகையில் அடங்கும்.
சான்று :
சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி
முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு
தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ
கார்மலை கண்கூடும் போது |
[சிலை = வில்
ஒசிய = வளைய
முனிதல் = ஊடுதல்
கார் மாலை = கார் கால மாலைப் பொழுது]
தோழி தலைவனிடம்
தலைவியின் நிலையைக் கூறும்
தன்மையது இப்பாடல், ‘மாலையணிந்த, மலை
போன்ற
தோளுடைய தலைவனே ! நீ இறுக அணைக்கும் பொழுது,
தனது மார்பகம் சற்றுப் பிசகினாலும், வில்போன்ற
புருவத்தை
வளைத்து ஊடும் இயல்புடையவள்
தலைவி. அப்படிப்பட்டவள்
நீ பிரிவு மேற்கொண்டால்
அதனைத் தாங்கிக் கார்கால
மாலைப் பொழுதில் தனித்து
இருப்பாளோ? எண்ணிப்பார்’ -
என்பது பாடலின் பொருளாகும்.
4.3.3 நெடில் மிக வருதல்
உயிர் நெட்டெழுத்துகளும், உயிர்மெய்
நெட்டெழுத்துகளும்
பயின்று (தொடர்ந்து) வருமாறு அமையும் செய்யுளும் செறிவு
வகையில் அடங்கும்.
சான்று :
நூலாம்நா லாயிரநா னூற்றுநாற் பத்தொன்பான்,
பாலாம்நா னூற்றுநாற் பத்தொன்பான், - மலோம்நாற்
பத்தொன்பான் சங்கம்அறு பத்துநா லாடலுக்கும்
கர்த்தன் மதுரையிற்சொக் கன் |
(கர்த்தன் = தலைவன்)
நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பது
நூல்களையும், அவற்றை இயற்றிய நானூற்று நாற்பத்தொன்பது புலவர்களையும், அவர்களின்
தலைவர்களாகிய நாற்பத்தொன்பது புலவர்களையும் உடைய முச்சங்கங்களுக்கும் அறுபத்து
நான்கு திருவிளையாடல்களுக்கும் தலைவர் மதுரைச் சொக்கநாதப்
பெருமானே ஆவார்.
இச்செய்யுளில் நெடில் எழுத்துகள்
பயின்று வந்துள்ளன.
வைதருப்ப நெறியின்
செறிவுச் செய்யுள் இவ்வாறு
அமைய, கௌட நெறியோ இடையின எழுத்துச்
செறிந்து
வருவதைச் செறிவு எனச் சுட்டி நிற்கும்.
|