4.4 வைதருப்பம் - தெளிவு

    பாடலின் பொருள் நன்கு புலப்படுமாறு அமைவது தெளிவு எனப்படும். செய்யுளில் திரிபுச் சொற்கள், கடினமான புணர்ச்சி விதிகள், குறிப்புப்பொருள்கள் ஆகியன அமையாமல், இயற்சொற்களாலும் எளிமையான     சொற்புணர்ச்சிகளாலும் அமைவது ‘தெளிவு’ என்னும் குணத்தில் அடங்கும்.

    தெளிவு என்பது வெளிப்படை என்னும் பொருள் உடையது.

தெளிவுஎனப் படுவது பொருள்புலப் பாடே
(தண்டியலங்காரம் : 17)

சான்று : 1

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
(திருக்குறள் : 319)

(இன்னா = துன்பம்
முற்பகல்
= முற்பொழுது, இளமை, முற்பிறவி
பிற்பகல் = பிற்பொழுது, முதுமை, மறுபிறவி)

    ஒருவன் பிறருக்குத் துன்பம் செய்யின் அத்துன்பம் அடுத்துவரும் காலத்தில் அவன் அனுபவிக்க வேண்டியதாகத் தானே அவனைச் சென்று அடையும்.

சான்று : 2

கொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி
(நீதிவெண்பா)

(வெம்புகரி = மதயானை
வம்புநெறி = தொல்லைமிக்க)

    கொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள்.

    இவ்வாறு வருவனவே தெளிவு என்னும் குணத்தனவாகும்.

    கௌடநெறி சொல்லாற்றல் மிக்கதாகத் தெளிவினைச் சுட்டி நிற்கும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
செய்யுள் நெறி என்றால் என்ன? விடை
2.
செய்யுள் நெறியின் இருவகைகள் யாவை? விடை
3.
செறிவு என்பதன் வரையறை யாது? விடை
4. தெளிவு என்னும் குணப்பாங்கு எவ்வாறு அமையும்? விடை