2.1 பின்வருநிலை அணி
 
    தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் அடிப்படையில்அமையும் அணிகள் சிலவும் இடம் பெற்றுள்ளன என்பதைச்சென்ற பாடத்தில் பார்த்தோம். அத்தகைய அணிகளில்இதுவும் ஒன்று.
 
2.1.1 பின்வருநிலை அணியின் இலக்கணம்
 
    ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல்லோ பொருளோ பின்னர்ப் பல இடங்களிலும் வருமாயின் அது பின்வருநிலை அணி எனப்படும்.

முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்
பின்வரும் என்னில் பின்வரு நிலையே (தண்டி. 41)
 
2.1.2 பின்வருநிலை அணியின் வகைகள்
 
பின்வருநிலை அணி மூவகைப்படும். அவை வருமாறு:

    1) சொல் பின்வருநிலை அணி
    2) பொருள் பின்வருநிலை அணி
    3) சொல் பொருள் பின்வருநிலை அணி
  • சொல் பின்வருநிலை அணி

    ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொல் பின்வருநிலை அணி எனப்படும். முதலில் வந்த சொல் மட்டுமே மீண்டும் வரும்; அதன்பொருள் மீண்டும் வராது. அதாவது, முதலில் வந்த சொல், பின்னர்ப் பல இடங்களிலும் வரும்போது வேறுவேறு பொருள்களில் வரும்.

எடுத்துக்காட்டு:

மால்கரி காத்துஅளித்த மால் உடைய மாலைசூழ்
மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார் -
மால்இருள்சூழ்
மாலையின் மால்கடல் ஆர்ப்ப மதன்தொடுக்கும்
மாலையின் வாளி மலர்


(கரி = யானை; வரை = மலை; மதன் = மன்மதன்;
வாளி
= அம்பு)


இப்பாடலின் பொருள்:

    மதத்தால் மயங்கிய யானையின் இடர் தீர்த்துக் காத்தருளிய திருமாலுடைய மலர்மாலை சூழ்ந்த பெரிய மலை போன்ற தோள்களை விரும்பிய இயல்பினை உடைய பெண்களின் மீது, மயங்கிய இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில், கரிய கடல் ஆரவாரம் செய்ய, மன்மதன் இடைவிடாமல் மலர்களாகிய அம்புகளைத் தொடுப்பான்.

  • அணிப் பொருத்தம்:

    இப்பாடலில் முதலில் வந்த 'மால்' அதை ஒத்த 'மாலை' ஆகிய இரு சொற்கள் பின்னர்ப் பல இடத்தும் பல பொருளில் வந்துள்ளன. 'மால்' என்னும் சொல் ,

மால் கரி
மால் உடைய
மால் வரைத்தோள்
மால் இருள்சூழ்
மால் கடல்
- மயக்கம் (மதமயக்கம்)
- திருமால்
- பெருமை (பெரிய)
- மயக்கம்
- கருமை (கரிய)

என்னும் நான்கு பொருள்களில் வந்துள்ளது. அதேபோல் 'மாலை' என்னும் சொல்,

மாலை சூழ்
மாலையார்
மாலை யின்
மாலை யின் வாளி
- மலர்மாலை
- இயல்பு
- மாலைப் பொழுது
- மாலை - வரிசை = இடைவிடாமை
என்னும் நான்கு பொருள்களில் வந்துள்ளது. ஆகவே இப்பாடல் சொல் பின்வருநிலை அணி ஆயிற்று.

  • பொருள் பின்வருநிலை அணி

    ஒரு பாடலில் முதலில் வந்த சொல் (பொருள்) பின்னர்ப் பல இடங்களிலும் வேறுவேறு சொற்களில் (அதே பொருளில்) வருவது பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.

எடுத்துக்காட்டு
அவிழ்ந்தன தோன்றி; அலர்ந்தன காயா;
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை; மகிழ்ந்து இதழ்
விண்டன கொன்றை; விரிந்த கருவிளை;
கொண்டன காந்தள் குலை

(
தோன்றி, காயா, முல்லை, கொன்றை, கருவிளை,
        காந்தள் - மலர்கள்)


இப்பாடலின் பொருள்


    தோன்றி மரங்கள் மலர்ந்தன; காயாஞ் செடிகள் மலர்ந்தன; அழகிய அரும்புகளை உடைய முல்லைக் கொடிகள் மலர்ந்தன; கொன்றை மரங்கள் மகிழ்வுற்று இதழ்கள் மலர்ந்தன; கருவிளைகள் மலர்ந்தன; காந்தள் குலைகளாக மலர்ந்தன.

  • அணிப் பொருத்தம்

    இப்பாடலில் முதலில் வந்த 'அவிழ்ந்தன' என்ற சொல்லின் பொருள் மலர்ந்தன என்பதாகும். பின்னர் அதே பொருள் அலர்ந்தன,     நெகிழ்ந்தன, இதழ்விண்டன,     விரிந்த, குலைகொண்டன எனும் வெவ்வேறு சொற்களில் மீண்டும் வந்தது. ஆகவே இது பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

  • சொல் பொருள் பின்வருநிலை அணி

    ஒரு செய்யுளில் முதலில் வந்த சொல்லும் அதன் பொருளும் பின்னர்ப் பல இடங்களில் மீண்டும் வருவது சொல் பொருள் பின்வருநிலை அணி எனப்படும். அதாவது முதலில் வந்த சொல் அதே பொருளில் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது.

எடுத்துக்காட்டு :

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃது உணரார்;
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர்;
வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துஉணரா தார்

(வைகல் : நாள்)


இப்பாடலின் பொருள்

    நாள்தோறும் நாள் கழிந்து வருவதைக் கண்கூடாகப் பார்த்திருந்தும், அப்படிக் கழிதலைத் தம் வாழ்நாள் மேல் வைத்து, அதுதான் இவ்வாறு கழிகின்றது என உணராதவர்கள், நாள்தோறும் நாள்கழிவதைக் கண்டு துன்புறாமல் இன்புறும் நாளாக எண்ணி மகிழ்வார்கள்.

  • அணிப் பொருத்தம்

    இப்பாடலில், 'வைகல்' என்ற முன் வந்த சொல் பின்னும் பலவிடத்து 'நாள்' என்னும் ஒரே பொருளில் பின்னர்ப் பலவிடத்திலும் வந்தமையால் இப்பாடல் சொல் பொருள் பின்வருநிலை அணியாயிற்று.

    சொல் பொருள் பின்வருநிலை அணி திருக்குறளில் பல இடங்களில் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு சான்று காண்போம்.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை     (குறள் : 411)

என்ற குறளில் 'செல்வம்' என்ற சொல் திரும்பத் திரும்ப ஐந்து இடங்களில் ஒரே பொருளில் வந்துள்ளமை காணலாம்.