4.1 இலேச அணி
 
    ஒரு கருத்தை அல்லது உணர்வைக் குறிப்பாகக் காட்டுதல் அல்லது வெளிப்படுத்தல் பல அணிகளில் காணப்படுவது. ஒருவகையில் இலேச அணியும் குறிப்புணர்த்தலைச் செய்வது; ஆயினும் குறிப்புணர்த்தும் பிற அணிகளிலிருந்து வேறுபடுவது. மனத்தில் தோன்றும் ஓர் உணர்வைச் சொல்லாமல் மறைக்கிறோம். ஆனால் உடலில் (கண், முகம்) தோன்றும் மெய்ப்பாடுகள் நாம் மறைத்த உணர்வை வெளிப்படுத்திக் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அந்நிலையில் உள்ளக் கருத்தை மறைப்பதற்காக, அம்மெய்ப்பாடுகளுக்கு வேறு காரணம் கற்பித்துக் கூறுகின்றோம். இவ்வாறு கூறுவதே இலேச அணி. (இவ்வாறு மறைக்கமுயன்றாலும் மனக்குறிப்பு தெரிந்துவிடுகிறது என்பதுதான் அணியின் தன்மை)
 
4.1.1 இலேச அணியின் இலக்கணம்
 
     மனத்தில் கருதியதை வெளிப்படுத்திக் காட்டும் சத்துவமாகிய குணங்களை (மெய்ப்பாடுகளை) வேறு ஒன்றால் நிகழ்ந்தன என மறைத்துச் சொல்லுவது இலேசம் என்னும் அணி ஆகும்.
 
குறிப்பு வெளிப்படுக்கும் சத்துவம் பிறிதின்
மறைத்து உரையாடல் இலேசம் ஆகும்
(தண்டி, 65)
 
    சத்துவம் = மனம் கருதியதைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டும் குணங்கள் : அவை சொல் தளர்வு, மெய்வியர்ப்பு, கண்ணீர் அரும்பல், மெய்விதிர்ப்பு (உடம்பு நடுக்கம்), மெய் வெதும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலியன.
எடுத்துக்காட்டு:

கல் உயர்தோள் கிள்ளி பரிதொழுது, கண்பனிசோர்
மெல்லியலார் தோழியர்முன் வேறு ஒன்று -
சொல்லுவரால்,
பொங்கும் படைபரப்ப, மீது எழுந்த பூந்துகள் சேர்ந்து,
எம்கண் கலுழ்ந்தனவால் என்று
 
(கல் - மலை; கிள்ளி - சோழன்; பரி - குதிரை;
ஆல் - அசை; துகள் - புழுதி, கலுழ்ந்தன = கலங்கின)

பாடலின் பொருள்:

    மலை போன்ற உயர்ந்த தோள்களை உடைய சோழன் ஏறி வந்த குதிரையைத் தொழுது, (அதாவது அவன் மீது காதல் கொண்டு) அக்காதலால் கண்களில் நீர் தளும்ப நின்ற மெல்லியல் மகளிர் தம்முடைய தோழியரிடம், அவ்வுண்மையை மறைத்தனர்; 'சினத்தை உடைய படைகள் பரந்து வர, விண்ணில் எழுந்த தூசியானது உள்ளே புகுந்தமையால், எம்முடைய கண்கள் நீர் சொரிந்தன' என்று நிகழ்ந்ததை மறைத்து வேறு ஒன்றைச் சொல்கின்றனர்.

. அணிப் பொருத்தம்

    இப்பாடலில், குதிரையின் மேல் ஏறிச் சோழன் உலா வருகிறான். அவன் பின்னால் அவனுடைய பெரும்படை அணி வகுத்து வருகிறது. அப்போது சோழனைக் கண்ட நங்கையர் அவன் மீது மிக்க காதல் கொள்கின்றனர். அந்தக் காதல் முதிர்ச்சியால் அவர்கள் கண்களில் நீர்த்துளிகள் துளிர்க்கின்றன. அதைத் தோழியர் பார்த்துவிட்டால் என்ன செய்வது? என்று நாணத்தால், அவர்களிடம், 'இந்தப் படைகள் பரந்து வருதலால் எழுந்த புழுதி கண்ணினுள் புகுந்துவிட்டது; அதனால் கண்கள் நீர் சொரிகின்றன' என்று கூறுகின்றனர். சோழன் மேல் கொண்ட காதலைப் புறத்தே 'கண்ணீர் அரும்பல்' என்ற சத்துவக் குணம் காட்டிவிடுகிறது, அதை நங்கையர் மறைத்து, அது வேறு ஒன்றால் அதாவது புழுதி படிந்தமையால் நிகழ்ந்தது என்று கூறியமையால் இப்பாடல் இலேச அணி ஆயிற்று.
 
4.1.2 இலேச அணியின்பால் படும் அணிகள்
 
    புகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல் என்னும் இரண்டு அணிகளும் இலேச அணியின்பால் படுவன ஆகும்.

. புகழ்வது போலப் பழித்தல்

    ஒருபொருளைப் புகழ்வது போலப் பழித்துக் கூறுதல் உண்மைக் கருத்தை மறைத்து வேறு விதமாகச் சொல்வதால் இது இலேசத்துள் அடங்குகிறது.

எடுத்துக்காட்டு:

மேய கலவி விளைபொழுது, நம் மெல்லென்
சாயல் தளராமல் தாங்குமால் - சேயிழாய்!
போர்வேட்ட மேன்மைப் புகழாளன், யாம் விரும்பும்
தார்வேட்ட தோள்விடலை தான்

(மேய - பொருந்திய; கலவி - புணர்ச்சி; சாயல் - மென்மை;
தளராமல் - குன்றாமல்; வேட்ட - விரும்பிய;
தார் - மாலை; விடலை - தலைவன்.)


இப்பாடலின் பொருள்

    'தோழி! கேட்பாயாக! எப்பொழுதும் போர்த் தொழிலை விரும்பிய மேம்பட்ட புகழினை உடையவனும், யாம் விரும்பிக் காதலித்து மாலையிட்ட தோள்களை உடையவனும் ஆகிய தலைவன், எம்மொடு பொருந்திப் புணர்ச்சியினை நிகழ்த்தும் பொழுது, நம்முடைய மென்மைத் தன்மை குன்றாதவாறு நடந்து கொள்கிறான்' என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

. அணிப்பொருத்தம்

    இப்பாடலில் தலைவி, புணர்ச்சியின்போது தன்னுடைய மென்மைத் தன்மை கெடாதவாறு தலைவன் நடந்து கொள்கிறான் என்று கூறுவதுர். புகழ்வது போலத் தோன்றுகிறது. ஆனால் புணர்ச்சிக் காலத்தில் உணர்ச்சி மேலிட்டு அறிவு அழியாமல் இருக்கிறான்; போரில் உள்ள அளவு விருப்பம் காதலில் அவனுக்கு இல்லை எனத் தலைவனைத் தலைவி மறைமுகமாகப் பழிக்கிறாள். ஆகவே இது புகழ்வது போலப் பழித்தல் ஆயிற்று.

. பழிப்பது போலப் புகழ்தல்

    ஒரு பொருளைப் பழிப்பது போலப் புகழ்ந்து கூறுதல். இதுவும்    உள்ளக்    கருத்தை மறைத்து வேறுவிதமாகச் சொல்வதால் இலேசத்துள் அடங்குகிறது.

எடுத்துக்காட்டு:

ஆடல் மயில் இயலி! அன்பன் அணிஆகம்
கூடுங்கால் மெல்லென் குறிப்புஅறியான் - ஊடல்
இளிவந்த செய்கை இரவாளன், யார்க்கும்
விளிவந்த வேட்கை இலன்

(இயல் = சாயல்; அன்பன் = தலைவன்;
அணி ஆகம்
= அழகிய மார்பு; இளிவந்த = தகாத செயல்கள்;
விளிவந்த
= வெறுக்கத்தக்க; வேட்கை = விருப்பம்.)

இப்பாடலின் பொருள்

    'ஆடும் மயில் போன்ற சாயலினை உடைய தோழியே!
தலைவன் என்னுடைய அழகிய மார்பகத்தைக் கூடும் போது
மென்மையான என் நலத்தைப் பாராட்டி நுகர்தலை அறியான் நான் ஊடல் கொண்டபோது, தன் தகுதிக்குப் பொருந்தாதபடி பணிந்து இரக்கும் இரவாளன்; யார்க்கும் வெறுக்கத்தக்க; ஆசை உடையவன் அல்லன். ஆகவே இகழ்தற்கு உரியவன்; என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.


. அணிப் பொருத்தம்

    இப்பாடலில் தலைவி, புணர்ச்சியின்போது தலைவன் தலைவியினுடைய மென்மைத் தன்மை கெடுமாறு நடந்து கொள்கிறான் என்றும் தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்காகத் தன் தகுதியிலிருந்து தாழ்ந்து கெஞ்சுகிறான் என்றும், விருப்பம் அற்றவன் என்றும் கூறுவது பழிப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் புணர்ச்சிக் காலத்தில் அவன் காமவசப்பட்டு அறிவழிந்தவனாக இருக்கிறான்; அதுவே தனக்கு இன்பமாக இருக்கிறது எனத் தலைவி மறைமுகமாகப் புகழ்கிறாள். ஆகவே இது பழிப்பது போலப் புகழ்தல் ஆகும்.

    இவ்விரு அணிகளையும் ஒரே அணியாகக் கொண்டு அதற்கு 'வஞ்சப் புகழ்ச்சி அணி' என்று பெயரிட்டுக் கூறுவதும் உண்டு.
 
4.1.3 வஞ்சப் புகழ்ச்சி அணி

    புகழ்வது போலப் பழித்தும், பழிப்பது போலப் புகழ்ந்தும் கூறுவது வஞ்சப் புகழ்ச்சி அணி எனப்படும். புறநானூற்றில் ஒளவையார் பாடிய பாடல் ஒன்றில் வஞ்சப் புகழ்ச்சி அணி சிறப்பாக அமைந்துள்ளது.

    அதியமான் போர்க்களம் பல கண்டவன். வெற்றி பல குவித்தவன். இருப்பினும் போரால் ஏற்படும் உயிர் இழப்புக் கண்டு மனம் வருந்திப் போரில் விருப்பம் இல்லாதிருந்தான். இந்நிலையில் தொண்டைமான் என்பவன் அதியமான் மீது போர் தொடுத்தான். ஒளவையார் போரைத் தடுத்து நிறுத்த வேண்டி அதியமான் பொருட்டு, தொண்டைமானிடம் தூது சென்றார். ஒளவையாரை வரவேற்ற தொண்டைமான் தனது படைக் கொட்டிலை அழைத்துச் சென்று காட்டினான். அதைக் கண்ணுற்ற ஒளவையார் அதனைப் புகழ்வது போலவும், அதே நேரத்தில் அதியமான் படைக்கலங்கள் இருக்கும் கொட்டிலை இகழ்வது போலவும் பின்வருமாறு பாடுகிறார்.

    'தொண்டைமானே! இப்படைக் கலங்கள் மயில் பீலி அணிந்து, மாலை சூட்டி, திரண்ட வலிய காம்புகள் திருத்தி, நெய் பூசப்பட்டுக் காவலை உடைய உன் அரண்மனையிலே உள்ளன. ஆனால் எம் அரசனாகிய அதியமானின் வேல்கேளா (படைக் கருவிகேளா) பகைவர்களைக் குத்தியமையால் நுனி முறிந்து கொல்லனுடைய உலைக்களத்தில் அன்றோ கிடக்கின்றன.


இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து,
கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ .... ....
அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே
(புறநானூறு, 95)
(இவ்வே = இவை; கண்திரள் = திரண்ட;
நோன் காழ்
= வலிமையான காம்பு; கடி = காவல்;
வியன்நகர்
= பெரிய அரண்மனை; அவ்வே = அவை;
கோடு
= வேலின் கழுத்துப் பகுதி; நுதி = நுனி;
கொல்துறை
= கொல்லனுடைய உலைக்களம்)

    இப்பாடலில், ஒளவையார் தொண்டைமானுடைய படைக்கலங்களைப்     புகழ்வதுபோல, அவன் போர்ச்செயல் செய்யாதவன் என மறைமுகமாக இகழ்கிறார். அதே நேரத்தில் அதியமானது படைக் கருவிகள் எல்லாம் கோடும் நுனியும் முறிந்து கொல்லனது உலைக்களத்திலே உள்ளன என்பதன் வாயிலாக, போர்கள் பலவற்றைச் செய்து வெற்றி கண்ட அவனுடைய வீரத்தை மறைமுகமாகப் புகழ்கின்றார். இவ்வாறு தொண்டைமானைப் புகழ்வது போலப் பழித்தும், அதியமானின் பழிப்பது போலப் புகழ்ந்தும் பாடியுள்ளதால் இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணி ஆயிற்று.