1.1 எண்ணிக்கை மாறுபடும் நிலை ஒரு மொழியில் இருக்கும் ஒலியனின் (phoneme) எண்ணிக்கையைப் பொறுத்து அந்த மொழியில் எழுத்துகளின் எண்ணிக்கை அமையும். சமய, பண்பாட்டுக் காரணங்கள், கடன் வாங்குதல் (borrowing), தேசிய ஒருமைப்பாடு (national integration) ஆகியவற்றை ஒட்டியும் இந்த மாற்றம் ஏற்படும். அவை போன்ற காரணங்களால் எழுத்தின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு அந்த அடிப்படையில் நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. தமிழ்மொழி ஒரு வளரும் மொழி (developing language) என்று கூறும்போது, அதில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படுவதால் இன்றளவும் வெளிவரும் நூல்களில் எழுத்தின் எண்ணிக்கை, ஒவ்வொன்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது. அவற்றோடு மட்டும் அல்லாமல் தமிழில் பல்துறை நூல்கள் பெருகி வருகின்றன. மொழியைக் கல்விமொழி என்றும், ஆட்சிமொழி என்றும், நீதிமொழி என்றும் பிரித்துப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களாலும் எழுத்தின் எண்ணிக்கையில் வேறுபாடு ஏற்படுகிறது எனலாம். தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை வரலாற்றினை மொழியியல் அடிப்படையில் நோக்கும்போது தமிழின் ஒலியன்கள் (phonemes) மற்றும் மாற்று ஒலி (allophones) ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. |