1.3 எழுத்து வடிவத்தின் வகை
தமிழில் வழங்கும் எழுத்துகளைத் தமிழ் எழுத்துகள் என்றும், வடமொழி எழுத்துகள் என்றும் இரண்டாகப் பிரித்து, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குக் கற்பிக்கிறோம். வடமொழிச் சொற்களை எழுதத் தென் இந்தியாவில் மட்டும் முற்காலத்தில் பயன்படுத்திய எழுத்துகளிலிருந்து அவற்றைப் பெற்றதால், அவை வடமொழி எழுத்துகள் என்று கூறப்படுகின்றன. ஆனால் இந்தியா முழுவதும் வடமொழி தேவநாகரி எழுத்தால் எழுதப்படுவதால், வடமொழி எழுத்து என்ற பெயர் குழப்பத்தை விளைவிக்கும். அதனால் அவற்றைக் கிரந்த எழுத்து என்று குறிப்பிட்டார்கள். இங்கு, தமிழ் நூல்களில் வழங்கும் எழுத்துகளை மொழியியல் அடிப்படையில் விளக்குவதால், அதனைக் கிரந்த எழுத்து என்று கூறாமல், கல்வெட்டு எழுத்துகள் என்றே கூறலாம். ஏனெனில் கிரந்த எழுத்துகள் முதன் முதலில் கல்வெட்டுகளிலேயே பயன்படுத்தப் பட்டன. அவ்வாறே தமிழ் எழுத்துகள் என்பதை இலக்கிய எழுத்துகள் என்றோ அல்லது இலக்கண எழுத்துகள் என்றோ அழைக்கலாம். |