1.5 எழுத்துக்கும் மொழிக்கும் உள்ள உறவு

    கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டில் தமிழ் மொழியை வட்டெழுத்திலும் ஏனைய பகுதிகளில் கோலெழுத்திலும் எழுதி வந்தனர். தமிழகம் முழுமையும் இராசராசன் ஆட்சியின்கீழ் வந்தபொழுது பாண்டிய நாட்டில் வட்டெழுத்துக் கைவிடப்பட்டு, கோலெழுத்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே ஒரு மொழியை இரண்டு வித எழுத்துகளால் எழுதப்படுவதும் பின்னர் ஆட்சி மாற்றத்தினால் எழுத்து மாற்றம் ஏற்படுவதும் வரலாற்றில் இயல்பாகும்.

    இதுபோல் கி.பி.9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளில் வடமொழி தென்னாட்டில் கிரந்த (கல்வெட்டு) எழுத்துகளாலும், வடநாட்டில் நாகரி எழுத்துகளாலும் மராத்தி மொழி கி.பி.19ஆம் நூற்றாண்டு வரை மோடி எழுத்துகளாலும் எழுதப்பட்டு வந்தது. ரோமன் மொழி எழுத்துகள் (Roman transcription) முதன் முதலில் இலத்தீன் மொழிக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய எல்லாக் கண்டங்களிலும் ரோமன் மொழி எழுத்துகள், பல மொழிகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன எனலாம். ஆகவே, மொழிக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு இடுகுறி என்பதும், ஒரு மொழியைப் பலவித எழுத்துகளால் எழுதுவதும், ஒரு எழுத்தைப் பல மொழிகளுக்குப் பயன்படுத்துவதும் இயல்பானது என்பதும் தெளிவு.

1.5.1 எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள உறவு

    எழுத்துகளுக்கு இரண்டு விதமான உச்சரிப்பு உண்டு. ஒன்று அவற்றைத் தனியே உச்சரிக்கும்போது உள்ள ஒலிமதிப்பு ; மற்றொன்று அதே எழுத்துகள் சொற்களின் உறுப்பாக வரும் போது பெறும் ஒலிமதிப்பு.

    உதாரணமாக, ஆங்கில எழுத்தில் c என்பது தனியாகச் சொல்லும்போது (Si) என்றும், அதாவது (s) என்ற மதிப்புப் பெறுகிறது. cat என்ற சொல்லில் k என்றும், cent என்ற சொல்லில் s என்றும் acknowledge என்ற சொல்லில் வெற்று ஒலியாகவும் (silent) ஒலிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட இரண்டு வகை உச்சரிப்புப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். தனிப்பட்ட முறையில் எழுத்தை உச்சரிப்பதைத் தெரிந்து வேறு இசைத்தல் என்றும் சொற்களின் உறுப்பாக வரும்போது உச்சரிப்பதை மொழிப்படுத்து இசைத்தல் என்றும் வேறுபடுத்திவிட்டுத் தமிழில் இரண்டு வகை உச்சரிப்புக்கும் வேறுபாடு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும்
    எழுத்தியல் திரியா என்மனார் புலவர்                 (தொல்.எழுத்து, 53)

    இந்த உண்மை அவர் கால மொழிக்கே பொருந்தும். ஆனால் அவர் காலத்திற்குப் பிறகு மொழியில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவால் இன்று பல எழுத்துகள் வெவ்வேறு உச்சரிப்பை உடையனவாக அமைந்துள்ளன. உதாரணமாக, என்பதைத் தனியே கூறும்போது ன (na) ஆகவும், பந்து என்ற சொல்லில் ந் (nt) ஆகவும் உச்சரிக்கிறோம். எனவே, தமிழ் எழுத்துகளின் பல உச்சரிப்புகளையும் ஆராய்ந்து எழுத்து, ஒலி ஆகிய இரண்டுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ளலாம்.

    இன்னும் ஒரு வகையான உதாரணம், என்பது ஒலிப்பிலா வல்லொலியாக (voiceless stop /t/) ஒலிக்கப்படுவதே பெரும்பான்மை.

சான்று :

    தாய்
    தந்தை
    தொண்டு
    துன்பம்

ஆகிய சொற்களில் இவ்வாறு உச்சரிக்கப்படுகின்றது. ஆனால் தோசை போன்ற வேறு சில சொற்களில் ஒலிப்புடை ஒலியாக (voiceth stop /d/) உச்சரிக்கப்படுகிறது. இவ்வுச்சரிப்பு வட்டார வழக்கினாலோ (regional dialect) அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதி வழக்காலோ (caste dialect) ஏற்பட்டது அல்ல. பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிப்புடை ஒலியாக ‘தோசை’ என்ற சொல்லை உச்சரிப்பதைக் காணமுடிகிறது. இது போன்ற காரணங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருக்குமாயின் வெவ்வேறு உச்சரிப்பு உள்ள ஒலிகளுக்குத் தனியாக ஒரு எழுத்துத் தேவைப்படுகிறது. இது எழுத்தின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட வழிவகுக்கிறது எனலாம்.

  • 1.5.2 தமிழின் ஒலிவளம்

        தமிழில் குறிப்பிட்ட சில ஒலிகளுக்கு (g. f. b. d) தனிப்பட்ட எழுத்துகள் இல்லை என்று புதுமையை விரும்புபவர்கள் கூறிவருகிறார்கள்.     அவ்வொலிகளுக்குத் தனிப்பட்ட எழுத்துகள் தேவை என்பதும் இவர்களுடைய வாதம். இதனையே இலக்கியப் பாரம்பரியத்தில் உள்ளவர்கள் அவ்வொலிகளுக்கென்று தனிப்பட்ட எழுத்துகள் தேவையில்லை என்றும், அவ்வாறு ஒலிக்கப்படும் ஒலிகள் இடத்திற்குத் தகுந்தாற் போல் ஒரு எழுத்தே உணர்த்துகிறது என்றும் கூறுகின்றனர். வேற்றுமொழிச் சொற்களை நாம் பயன்படுத்தும்போது அவ்வாறு நிகழ்கிறது.

    சான்று :

    g

    -

    gate

    f

    -

    fast

    b

    -

    bun

    d

    -

    doctor

        இன்றைய நிலையில் இச்சொற்களில் வரும் ஒலிகள் சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வந்து அவை இயல்பாக இயங்க ஆரம்பித்து விட்டன. இதனையே மொழியியலின்படி கூறவேண்டும் என்றால் வல்லொலிகளின் (stop sound) மாற்றொலியாக (allophone) இருந்தவை இன்று தனி ஒலியன்களாக (separate phoneme) அமைந்து விட்டன. எனவேதான் இன்று தனித்தனி எழுத்துகள் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இவைகளுக்கு ஒலி உறழ்ச்சியும் அல்லது கட்டிலா மாற்றமும் (free variation) ஒரு காரணம் ஆகும்.

    சான்று :

    மேஜை

    -

    மேசை

    ஜன்னல்

    -

    சன்னல்

    ஸர்ப்பம்

    -

    சர்ப்பம்

    போன்ற சொற்களில் உறழ்ச்சி எழுத்து நிலையில் மட்டுமே தவிர உச்சரிப்பில் வேறுபாடு இல்லை எனலாம். இந்த இரண்டு உச்சரிப்பும் ஒருவரிடமே இருப்பதில்லை. சிலர் ஜகரத்தை சகரமாக உச்சரிக்கிறார்கள். பெரும்பான்மையான படித்த நகர்ப்புற மக்கள் பேச்சில் ஜகரமும், படிக்காத கிராமப்புற மக்களிடையே சகரமும் வழக்கிலுள்ளன.

        அதனால் மொழித்தூய்மை விளைவால் இரண்டு விதமாகவும் எழுதப்படுகின்றன. அதே சமயத்தில் சிலர் சகரமாக எழுதிவிட்டு ஜகரமாகவும் சொல்வதும் உண்டு.

    சான்று :

    ஜாதி

    -

    சாதி

    ஜாதகம்

    -

    சாதகம்

    ஜோதி

    -

    சோதி

        இன்னும் பெரும்பாலோருடைய பேச்சில் ‘ஜவுளி’, ‘ஜல்லி’ போன்ற சொற்கள் ஒலியுடனே ஒலிக்கப்படுகின்றன. உண்மையில் எங்கு ஜ வரவேண்டும் என்று அறிந்தால்தான் அதைச் சகரமாக மாற்றி எழுத முடியும். ரகரமும் றகரமும் சில கிளை மொழிகளில் (regional dialect) வேறாகவும், ஏனைய கிளைமொழிகளில் ஒன்றாக உச்சரிக்கப்பட்டாலும், எழுத்து மொழியில்     இரண்டு வடிவங்களையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். அது போலவே ச/ஜ வேறுபடுகிறது எனலாம்.

    சான்று :

    1.

    ஜீன் லாரன்ஸ்

    -

    தஞ்சை மாவட்டம்

    ஜீன் லாறன்ஸ்

    -

    கன்னியாகுமரி மாவட்டம்

    2.

    சீனி, ஜீனி