3.3 சொல்லெழுத்தின் வகைப்பாடுகள்

 

    எழுத்து முறையில் ஓவிய எழுத்து முறை (Pictorial Writing System) மற்றும் ஒலியனியல் எழுத்து முறை(phonological writing system) போன்றவை உள்ளன. ஓவிய எழுத்தில் எல்லா உருபன்களுக்கும் (Morpheme) தனித்தனி எழுத்துகள் இருப்பதால் சொல்லெழுத்துப் பயன்பாட்டில் கடினம் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கலாம். ஆனால் ஒலியனியல் எழுத்து முறையில் சொற்களின் ஒலியனை (Phoneme) எழுதும் முறையிலும், ஒலியனுக்கும் எழுத்துக்கும் (letter) உருபனுக்கும் உள்ள உறவு நிலையிலும்     பலவகையான    சொல்லெழுத்து முறைகளைக் காணமுடிகிறது.

3.3.1 ஒலியன் சொல்லெழுத்து (Phonemic Spelling)

    சொற்கள் மாற்று வடிவம் பெற்றிருக்கும்போது (செம்-, செவ்-, செங்-) எல்லா மாற்று வடிவத்தையும் அதன் ஒலியன் அமைப்பிற்கு ஏற்ப எழுதினால் அதை ஒலியன் சொல்லெழுத்து எனலாம். 'சிவப்பு' என்ற பொருளை உணர்த்த வேறுவேறு வடிவத்தில் (செம்,செவ்,செங்) சொல்லெழுத்து அமைந்து வருகிறது. இதுபோன்றே ஆங்கில மொழியில்     எதிர்மறைப்பொருளை (Opposite) உணர்த்த வேறுவேறு சொல்லெழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்.

சான்று:

'Im - possible’
'Il-legal'
'Ir-regular'
'In-decent'

இதனையே ஒலியன் சொல்லெழுத்து (Phonemic Spelling) எனலாம்.

 

3.3.2 உருபொலியன் சொல்லெழுத்து (Morphophonemic      Spelling)

    மாற்றுருபுகள் (Allomorphs) ஒலியனில் வேறுபட்டாலும் எழுத்துவடிவில் (Written Form) வேறுபடாது வரும். இதனை உருபொலியன் சொல்லெழுத்து எனலாம்.

சான்று:

எழுத்துவடிவம் (Written form) ஒலிவடிவம் (Sound Form)

     'தலை - வர்’         'தலை - வரு'
     'தலை - மை’         'தல-ம'

பேச்சுத்தமிழில் /தலை-வர்/ என்பதை, /தலை-வரு/ என்று உச்சரிக்கும்போது 'தலை' என்ற ஒலி மாறாமல் வருவதை நம்மால் உணர முடிகிறது.அதே சமயம் /தலை-மை/ என்பதை/தல-ம/ என்று உச்சரிப்பதை நம்மால் உணர முடிகிறது. எவ்வாறு எனில்/தலை-மை/ என்னும் இச்சொல்லில் இரு /ஐ/ கள் இருப்பதைக் காணமுடிகிறது. ஆதலால் முதலில் வரும் /லை/, /ல/ என்ற ஒலியுடனும், இரண்டாவது வரும் /மை/, /ம/ என்ற ஒலியுடனும் அதனுடைய உண்மையான உச்சரிப்புக் குறைக்கப்பட்டு /ஐ/ என்பது இரண்டு இடங்களிலும் /அ/ என உச்சரிக்கப்படுகின்றது. ஆனால் இவற்றை எழுதும்போது /தலைமை/ என்றே எழுதுகிறோம். இதுவே உருபொலியன் சொல்லெழுத்து ஆகும்.

 

3.3.3 உருபுச் சொல்லெழுத்து (Morphemic Spelling)

    ஒரே வித உச்சரிப்பு (Pronunciation) அல்லது ஒலியன்களை உடையவற்றை இரண்டு உருபன் என்று சுட்டிக்காட்டும் வகையில் இரண்டு விதமாக எழுதலாம். இதனையே உருபுச் சொல்லெழுத்து என்கின்றனர் மொழியியலார்.

குறிப்பாக றகரமும், ரகரமும் சில கிளைமொழிகளைத் தவிரப் (Dialects) பெரும்பாலானவற்றில் ரகரமாக உச்சரிக்கப்படுகின்றது.

சான்று:

சொல்

 

உச்சரிப்பு

     'மரம்'      'மறம்'

     'மரம்'

     'அரை'      'அறை'

     'அரை'

     'கரி'      'கறி      'கரி'

தமிழ்மொழியானது இரட்டை வழக்கினைக் கொண்டதாகும் (Diaglossia).இரட்டை வழக்கு என்பது தமிழை எழுதும்போது ஒரு விதமாகவும் (இதனை எழுத்துத்தமிழ் என்பர்), பேசும்போது இன்னொரு விதமாகவும் (இதனைப் பேச்சுத்தமிழ் என்பர்) பேசுகிறோம். அவ்வாறாக வரும்போது எழுத்துத் தமிழில் 'மரம்', 'மறம்' என்னும் இரு வேறு பொருள்களை உடைய சொற்களைப் பேச்சுத்தமிழில் ‘மரம்’ என ஒரே விதமாக உச்சரிக்கிறோம். இதனையே உருபுச் சொல்லெழுத்து என்பர்.

அதுபோன்று 'ந்', 'ந', 'ன்', 'ன', 'ழ', 'ள' என்று எழுத்தில் மட்டும் வேறுபடுவன எல்லாம் ஒரே உச்சரிப்பைக் கொண்டு வேறுவேறு பொருளை உணர்த்துகின்றன. ஆங்கில மொழியிலும் இது போன்றவற்றைக் காணலாம்.

சான்று:

I read now - 'இப்போது நான் படிக்கிறேன்' Yesterday he read - ‘நேற்று அவன் படித்தான்'

இங்கு ஒரே வித எழுத்து வெவ்வேறான உச்சரிப்பு.இதன் மூலம் பொருள் மாறுபடுவதைக் காணலாம். .

3.3.4 சந்தி அல்லது புணர்ச்சிச் சொல்லெழுத்து (Sandhi      spelling)

    ஒரே ஒலியை உடைய சொற்கள் புணர்ச்சி (சந்தி) நிலையில் வேறுபட்டு விளங்குகின்றன.

தமிழ் மொழியில் பேச்சுமொழிக்கும், எழுத்துத்தமிழுக்கும் இடையே அதுபோன்ற புணர்ச்சி மாற்றத்தை நம்மால் உணர முடிகிறது. பேச்சு மொழிக்கு எழுத்துரு இல்லாவிட்டாலும் உணரலாம் அல்லவா. மொழியியலின்     அடிப்படையில்     பயிலுவதால்     பேச்சுமொழியில்     இருந்தும் சான்றுகளைக் கொடுக்க வேண்டியுள்ளது அவசியமாகிறது.

சான்று:

     பேச்சுமொழி         எழுத்துமொழி

     /பயிரு/             'பயிர்'
                 'பயிறு'

பயிரு என்று பேச்சுமொழியில் வழங்குவதை எழுத்துமொழியில் பயிர்' என்றும், 'பயிறு' என்றும் எழுதுகிறோம். இதுவும் உருபுச் சொல்லெழுத்தில் அடங்கும். ஆயினும் அவை இரண்டும் புணர்ச்சியின்போது மாறுபடுகின்றன.

சான்று:

     எழுத்துமொழி     பேச்சுமொழி

'பயிர்     'பயிரில்'         'பயிர்ல'
'பயிறு'     'பயிற்றில்'         'பயித்தில்'
         'பயிற்றை'         'பயித்தை'

இந்தச் சொற்கள் பயன்படும் விதத்தை முழுவதும் அறியும்போது அவற்றின் சொல்லெழுத்து வேறுபடுவதை நன்கு     உணர்ந்து     கொள்ள முடிகிறது. இவையே பிற்காலத்தில்     சொல்லெழுத்து     வளர்ச்சியில் நிலைநாட்டப்படுகின்றன.

3.3.5 ஓரெழுத்துப் பன்மொழிச் சொல்லெழுத்து (Homographemic Spelling)

இரண்டு வித ஒலியன் அமைப்பை உடைய சொற்கள் ஒரே விதச் சொல்லெழுத்தால் எழுதப்படுவதும் உண்டு.

சான்று:

 

         ஒலியன்     பொருள்

'பாவம்'     'pa:vam'         'sin'
         'ba:vam'     'expression'

இதுபோன்ற சொற்கள் பெரும்பாலும் பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட (Borrowing) சொற்களாகவே இருக்கும். இவ்வாறாக வருவதை ஓரெழுத்துப் பன்மொழிச் சொல்லெழுத்து எனலாம்.

3.3.6 உருபு எழுத்தன் சொல்லெழுத்து (Morphographeme      Spelling)

ஒரு சொல்லில் உள்ள ஒரு குறிப்பிட்ட எழுத்தானது சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு வடிவமும், சொல்லின் இடையில் வரும்போது இன்னொரு வடிவமும் அந்த ஒலியன் ஏற்று வருவதை உருபு எழுத்தன சொல்லெழுத்து எனலாம். ஆங்கிலத்தில் ‘beauty’ என்ற சொல்லின் இறுதி எழுத்து < y >.ஆனால் beautiful என்ற சொல்லில் அதே ஒலியன் நடுவில் வரும்போது <i> ஆக மாறி வருகிறது எனலாம். அதுபோலவே தமிழில் பிறமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்தில் எழுதும்போது அதுபோன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன.

சான்று:

    போலீஸ் - Policeman
     'போலீஸ்'    
    போலீசார் - Policemen

தமிழில் < ஸ் > என்ற எழுத்தன் சொல்லின் இறுதியிலும், < ச > சொல்லின் நடுவிலும் வருவதைக் காணலாம். இந்த வகையான சொல்லெழுத்தில் சொற்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு இல்லாமல் சரியாக அமைந்து வருவதைக் காணலாம்.

    காங்கிரஸ் - Congress
     காங்கிரஸ்    
    காங்கிரசார் - Congress party men

 

    'ஆபீஸ்' - 'Office'
     ஆபீஸ்    
    'ஆபீசர்' - 'Officer'

 

இந்த வகைச் சொல்லெழுத்துகளைப்போல் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவோரிடம் இன்னொரு வகைச் சொல்லெழுத்தைக் காணமுடிகிறது.

ஒலிப்பிலா வல்லொலியை (Voiceless Stop) ஒரு சொல்லுக்கு இறுதியில் வரும்போது ஒரு வல்லெழுத்தாலும் இடையே வரும்போது இரண்டு வல்லெழுத்தாலும் எழுதுகிறார்கள்.

சான்று:

'பீச்' - 'பீச்சில்' 'டேப்' - 'டேப்பில்'

சொல்லெழுத்தில் மாற்றங்கள் ஏற்படுவது உலகமொழிகளில் இயல்பான ஒன்றாகும்.மொழியானது காலந்தோறும் சூழலுக்கு ஏற்ப மாறும் தன்மை உடையது. சொல்லெழுத்தில் மாற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் முடியாது. முற்காலத்தில் இலக்கியத்தமிழ் பக்தி இலக்கியமாகவும், காப்பியங்களாகவும் புலவர்களால் இயற்றப்பட்டன. அக்காலத்தில் கல்வெட்டுகளையும் சோதிட மருத்துவ நூல்களையும்    எழுதியவர்கள்    சாதாரணமாகப் படித்தவர்களே. அவர்கள் புலவர்களைப்போல் புலமை பெற்றிருக்கவில்லை. இவர்களால் பேச்சுமொழியில்தான் எதையும் வடிக்க முடியும். இதுபோன்ற காரணங்களாலும் சொல்லெழுத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன எனலாம். அதுபோலவே இன்றைய எழுத்துமொழியில்     சொற்கள் பழைய     வழக்கிலிருந்து மாறுபட்டுக் காணப்படுகின்றனவற்றை எல்லாம் பிழைகள் எனக் கருதக்கூடாது, அவ்வகையான மாற்றங்களுக்கான காரணங்களை ஆராய்ந்தால் அவற்றுள் சில கிளைமொழித் தமிழின் நேரடிச் செல்வாக்கு என்றும்,சில பேச்சுமொழியை ஒட்டி எழுத்துமொழியில் ஏற்பட்ட மாறுபாடு என்றும் உணர்ந்து கொள்ளமுடியும்.

சான்று:

'முன்னூறு' என்று இன்று எழுதுவதைக் காணமுடிகிறது. இதனைப்     பார்த்து நம்முடைய இலக்கண அறிவைக் காட்டும் விதமாகவே பழைய இலக்கிய மேற்கோள்களைக் காட்டிப் புதிய சொல்லெழுத்துகளைத் தவறு என்று சுட்டுவது தவறாகும் எனலாம்.

'மூன்று' என்பதன் அடிப்படை வடிவம் 'மு' ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு மு+நூறு= முந்நூறு என்றாகி -ந்-, -ன்- போன்ற ஒலியன்களுக்கு வேறுபாடு     இன்றையளவில் பேச்சுத்தமிழில் காணப்படாததால் 'முன்னூறு' என்று இன்று பலராலும் எழுதப்பட்டு வருகிறது. இது இலக்கணப் படி தவறாக இருந்தாலும் இன்றையளவில் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.