4.1
புணர்ச்சியில் மாற்றங்கள்
சமூகத்தின் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்படுவதுபோல்
மொழியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழ் இலக்கண
நூல்களான தொல்காப்பியத்திற்கும்
நன்னூலுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன
என
அறிவோம். நன்னூலுக்கும் இன்றைய தமிழுக்கும் மொழி அமைப்பில்
நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இவ்வகையான
வேறுபாடுகள் மொழியின் பயன்பாட்டிலும், அதாவது மொழியைப்
பயன்படுத்துவோரைப் பொறுத்தவரையிலும் தமிழ்
மொழியைக்
கையாளும் துறைகளைப் பொறுத்தவரையிலும்
மாற்றங்களை
ஏற்படுத்தி விட்டன. இங்கு அம்மாற்றங்களைப் பற்றி மொழியியல்
(Luiguistics) கண்ணோட்டத்தில் காண்போம்.
பேச்சு வழக்குத்தான் இலக்கிய வழக்கிற்குக் காரணமாக
இருந்தது.
பேச்சுமொழி வந்த பிறகு இலக்கியங்கள் தோன்றலாயின. ஆனால்
பின்னர் இலக்கியங்களுக்கும் அவற்றில்
பயன்படுத்தப்படும்
வழக்கிற்கு மட்டும் இலக்கணங்கள் தோன்றலாயின. மொழியியலார்
(Linguists) பேச்சு வழக்கையும், இலக்கிய
வழக்கையும் இரு
கண்களாகக் காண்கின்றனர். அவ்வாறு காணும்போது தொல்காப்பியம்
எழுந்த சங்ககாலம் முதல் தற்காலம் வரை மொழியின் பல்வேறுகூறுகளான எழுத்து,
சொல், பொருள் ஆகியவற்றில்
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று
குறிப்பிடுகின்றனர். அது
போலவே எழுத்துகளின் புணர்ச்சியிலும் (Sandhi)
மாற்றங்கள்
தற்காலத்தில் ஏற்பட்டுள்ளன என்பது கண்கூடு.
இப்பாடத்தின் கீழ் விளக்கப்பட்டுள்ள அத்தனை
சான்றுகளையும்
மொழியியலார் ஏற்றுக் கொள்கின்றனர். ஏனெனில் உலகோடு ஒத்து
வாழ வேண்டும் என்பதற்கு ஏற்ப
மொழியில் ஏற்பட்டுள்ள
மாற்றங்களை ஏற்பது அவசியமானதாகும்.
4.1.1 தமிழில்
பிறமொழிச் சொற்கள்
ஆங்கிலம்
முதலிய ஐரோப்பிய மொழிச் சொற்கள் இன்று
பெருந் தொகையாகத் தமிழில் வந்து சேர்கின்றன. போக்குவரத்து
வசதிகள் பெருகிக் கொண்டிருப்பதாலும், அறிவியல் வளர்ச்சி மின்
வேகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருப்பதாலும்
பல இன
மக்களோடும், அவர்களின் மொழிகளோடும் தமிழ் மக்களுக்கும்,
தமிழ் மொழிக்கும் தொடர்பு
நெருக்கமாகிக்
கொண்டிருக்கிறது. அதனால் பிறமொழிகளுக்குச் சிறப்பாக உரிய
ஒலிகளால் ஆன சொற்களைத் தமிழில் எப்படி எழுதுவது என்பது
இன்றுள்ள பெரும் சிக்கலாகும்.
பிறமொழிச் சொற்கள்
ஒரு மொழியில் புகும்போது பல
விளைவுகள் ஏற்படுகின்றன எனலாம். ஒவ்வொரு
மொழியிலும்
அம்மொழிக்கே உரிய தனித்த ஒலிகள் காணப்படுகின்றன.
தொல்காப்பியர் காலத் தமிழில் பிறமொழிக் கலப்புப்
பெருமளவு
இல்லை. அவ்வாறு இல்லாமல் போனதால் தொல்காப்பியர் இந்தத்
துறைக்கு விரிவாக விதிகள் கூறவில்லை
எனலாம். ஆனால்
நன்னூலார் காலத்திலும் அதற்கு முன்பும் சமஸ்கிருதச்
சொற்கள்
பெருவாரியாகத் தமிழில் கலந்தன. எனவே சமஸ்கிருத மொழிக்குச்
சிறப்பாக உரிய ஒலிகள் தமிழில் அம்மொழியின் ஒலியமைப்பிற்கு
ஏற்ப எவ்வாறு மாறி அமையும் என்பதற்கு நன்னூலார் நன்னூல்
பதவியலில் வடமொழியாக்கம் என்னும் தலைப்பில் (நூற்பா. 146-
50) விரிவாக விதிகள் கூறியுள்ளார்.
இதனை விளக்கவந்த நன்னூல்
உரையாசிரியர் தோன்றல்,
திரிதல், கெடுதல் போன்ற புணர்ச்சி இலக்கணங்கள் இவ்வகையான
சொற்களுக்குப் பொருந்தாது என்றார். |