4.3 புணர்ச்சி மாற்ற வரலாறு

    புணர்ச்சி     மாற்ற     வரலாற்றைப் பார்க்கும்போது தொல்காப்பியம் சங்க காலம்,     இடைக்காலம் போன்ற கால கட்டங்களில் பெரும்பாலான புணர்ச்சி விதிகள் ஒத்தே காணப்படுகின்றன. எவ்வாறு எனில் பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்திருந்தாலும் அவற்றின் புணர்ச்சி விதிகள் சரிவரச் சுட்டப்படவில்லை எனலாம். அன்றைய அளவில் சமஸ்கிருதச் சொற்களே கலக்கலாயின.     வேற்றுமொழிச் சொற்கள் அவ்வளவாகக் கலக்கவில்லை. ஆனால் இன்றைய நிலை அவ்வாறு இல்லை. ஏற்கனவே சுட்டிக் காட்டியது போல     மனிதன்     பல     இனத்தாரோடும்,     அறிவியல் முன்னேற்றத்துடனும்     ஈடுகட்டிக் கொண்டு போவதால் பலவிதமான மொழிகளும் கலாச்சாரங்களும் அவனுடைய வாழ்வில்     கலந்து விடுகின்றன. இது     போன்ற மாற்றங்களும் விளைவுகளும் தொல்காப்பியக் காலத்திலோ அதன் பின்னரோ நிகழவில்லை. தற்காலத்தில் அவை மிகுதியாக நிகழ்வதால் அவற்றிற்கு ஏற்ப மொழியில் மாற்றங்கள்     ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எழுத்தியல் மாற்றங்கள், ஒலியியல் மாற்றங்கள், சொல்லியல் மாற்றங்கள் என மூவகைப்படும். அவற்றைப் பற்றி இங்கே விரிவாகக் காண்போம்.