5.3 சொல்லில் மாற்றம்

    இக்கால     எழுத்துத்தமிழில் சொல்லின் இலக்கணத்தைப் பொறுத்தவரையில் மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்படலாயின. வேற்றுமை உருபுகள், சொல்லுருபுகள், காலம் காட்டும் இடைநிலைகள், துணைவினைகள், பெயரடை, வினையடை ஆகிய சொல் இலக்கணக் கூறுகள் இக்கால எழுத்துத்தமிழில் எந்த அளவு மாற்றங்கள் பெற்றும், வளர்ச்சி பெற்றும் திகழ்கின்றன என்பது பற்றி இங்கே விளக்கமாகக் காண்போம்.

5.3.1 வேற்றுமை உருபுகள்

    ‘வேற்றுமை’ என்பது பெயர்ப்பொருளை வேற்றுமை செய்வன ஆகும்.

    ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும் ஈறாய்ப் பொருள்
    
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை
                 (நன்னூல். 291)

தொல்காப்பியர் காலத்திற்கு முன் ஏழு வேற்றுமைகள் இருந்தன என்றும், தொல்காப்பியர் தமது நூலில் ‘விளி’ என்னும் ஒரு வேற்றுமையைச் சேர்த்து வேற்றுமையை எட்டாகக் கொண்டார் என்றும் தெரியவருகின்றது.

    வேற்றுமை தாமே ஏழென மொழிப
                 (தொல்.சொல்.62)

என்றும்

    விளிகொள் வதன்கண் விளியொடு எட்டே
                 (தொல்.சொல்.63)

என்றும் அவர் கூறுகிறார். ஆனால் இக்கால எழுத்துத்தமிழில் பத்துவகையான வேற்றுமைகள்,     அவற்றிற்கான உருபுகள் தனித்தனியே பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பர் மொழியியலார். ஒரு சில வேற்றுமைகள் தமக்குள் இரண்டு விதமான பொருள் தந்து பின்னர்த் தனித்தனி வேற்றுமைகளாக மாறின எனலாம்.

    பழந்தமிழில் மூன்றாம் வேற்றுமை (Instrumental case) என்று கூறக்கூடிய ஒன்று இக்கால எழுத்துத்தமிழில் இரண்டாகப் பிரிந்து ‘கருவி வேற்றுமை’ (Instrumental case) என்றும், ‘உடனிகழ்ச்சி வேற்றுமை’ (Sociative case) என்றும் ஆகியது. இவ்விரண்டும் தனித்தனியான வேற்றுமை உருபுகளுடன் இக்கால எழுத்துத்தமிழில் வழங்கி வருவதைக் காணமுடிகிறது.

சான்று:

    ‘குமார் கத்தியால் பழத்தை வெட்டினான்’
             (ஆல் - கருவி வேற்றுமை)

    ‘குமார் அவனோடு வந்தான்’
         (ஓடு - உடனிகழ்ச்சி வேற்றுமை)

இதுபோன்றே நான்காம் வேற்றுமை என்று பழந்தமிழில் கூறப்பட்டது இக்கால எழுத்துத்தமிழில் இரண்டாகப் பிரிந்து ‘Dative case’ என்றும், ‘Benefactive case’ (பயன்பாட்டு வேற்றுமை) என்றும் வழக்கில் இருந்து வருவதாக மொழியியலார் கூறுவர்.

சான்று:

    ‘குமாருக்கு வேண்டும்’     (நான்காம் வேற்றுமை)

    ‘குமாருக்காக வேண்டும்’     (பயன்பாட்டு வேற்றுமை)

    ஆக மொத்தம் இக்கால எழுத்துத்தமிழில் 10 வகையான வேற்றுமைகள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு:

1. முதல் வேற்றுமை - Nominative case
2. இரண்டாம் வேற்றுமை - Accusative case
3. மூன்றாம் வேற்றுமை - Instrumental case
4. நான்காம் வேற்றுமை - Dative case
5. ஐந்தாம் வேற்றுமை - Ablative case
6. ஆறாம் வேற்றுமை - Genetive case
7. ஏழாம் வேற்றுமை - Locative case
8. விளி வேற்றுமை - Vocative case
9. உடனிகழ்ச்சி வேற்றுமை - Sociative case
10. பயன்பாட்டு வேற்றுமை - Benefactive case

5.3.2 சொல்லுருபுகள்

    ஒரு பெயர்ப்பொருளை வேற்றுமை செய்து காட்டுவது வேற்றுமை ஆகும் என்று நாம் படித்தோம். இதற்கென்று ஓர் உருபு பெயர்ச் சொல்லுடன் சேர்ந்து பொருள் தந்து நிற்கின்றது. ஆனால் சொல்லுருபு என்பது பெயர்ச்சொல்லை ஒருசொல் தனியாக நின்று வேற்றுமைப்படுத்திப் பொருள் தருகிறது. அவ்வாறான சொற்களையே சொல்லுருபுகள் என்பர் இக்கால மொழியியலார். இவ்வகையான சொல்லுருபுகள்     பழங்காலத் தமிழிலே     அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்டன. ‘பொருட்டு’, ‘கொண்டு’ என்னும் சில சொல்லுருபுகள் அச்செயலைச் செய்து வந்தன.

சான்று:

    செய்தற் பொருட்டு     (திருக்குறள். 21:212)
    
நம் பொருட்டால் (சிலம்பு. 19:23)

    ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி (புறநானூறு.55:2)

இக்கால எழுத்துத்தமிழிலும் கொண்டு என்ற ஒருசொல் தனியாக நின்று பொருள் தருகிறது.

சான்று:

    ‘குமார் கத்திகொண்டு பழத்தை வெட்டினான்’

    அதே சமயத்தில் பழங்காலத் தமிழ் நான்கு வகை இலக்கணக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டு வழக்கில் இருந்தது (பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்). இன்றையளவில் ‘சொல்லுருபு’ என்ற ஒரு இலக்கணக்கூறு தனித்த ஒன்றாக வளர்ச்சிபெற்று வருகிறது என்பர் மொழியியலார். எவ்வாறு எனில் இக்கால எழுத்துத்தமிழ்     பலவிதமான புதிய புதிய சொல்லாக்கங்களையும், செய்திகளையும் பயன்படுத்துகிறது.இதனால் ஒரு சில சொல்லுருபுகள் மட்டுமே இருந்து வந்த தமிழில் இன்று 150க்கும் மேற்பட்ட சொல்லுருபுகள் இருப்பதாகக் கூறுவர்.

    ‘மூலம், அண்டை, பக்கம், கீழ்,பிறகு, உள், குறுக்கே, வெளியே, வழியாக, தவிர்த்து, பற்றி, வைத்து, ஒழிய, விட, பிந்தி, இல்லாமல்’ போன்றவை தற்காலத் தமிழில் வழங்கும் சில சொல்லுருபுகளாகும்.

5.3.3 கால இடைநிலைகள்

    பழங்கால எழுத்துத்தமிழில் நமக்கு இலக்கியங்கள் வாயிலாக இரண்டு விதமான காலங்கள் காட்டப்பட்டது தெரியவருகிறது. அவை:

1. இறந்தகாலம் 2. இறந்தகாலம் அல்லாதவை

    பழங்காலத் தமிழில் இறந்த காலத்திற்கான கால இடைநிலைகள் தெளிவாகக் காணப்படுகின்றன. அதே சமயத்தில் இறந்தகாலம் அல்லாதவை என்ற பெயர் வருவதற்குக் காரணமாகிய கால இடைநிலைகள் சரிவரச் சுட்டப்படவில்லை (நிகழ்காலம், எதிர்காலம்) எனலாம். ஓரிரு சான்றுகள் இவற்றிற்குக் கிடைத்தாலும் அவ்வளவு தெளிவாகக் காண்பிக்கப்படவில்லை எனலாம்.

சான்று:

    கல் பிறங்கு வைப்பின் கடறு அரையாத்த நின்
             (பதிற்றுப்பத்து.53:4)

    இங்கு இறந்தகாலத்தைச் சுட்டுவதுபோல், நிகழ்காலம், எதிர்காலம் என வேறுபடுத்திக் காட்ட முடியாத சான்றுகள் நமக்குப் பழந்தமிழ் வாயிலாகக் கிடைக்கப்பெறுகின்றன. இறந்தகாலம் அல்லாதவைக்கான கால இடைநிலைகள். ‘-ப்-, -ம்-. -க்-, -த்-’ என்பர் மொழியியலார்.

சான்று:

    ‘செய்யும்’ என்ற சொல்லைத் தொல்காப்பியர் பயன்படுத்தி இது எந்தக் காலத்தை உணர்த்துகிறது என்று கூறாமல் சென்றுள்ளார். இதில் நமக்கு ‘நிகழ்காலம், எதிர்காலம்’ ஏதும் தென்படவில்லை.

    ஆனால் இக்கால எழுத்துத்தமிழில் மூன்று வகையான காலத்திற்கும்     தனித்தனியேயான     கால     இடைநிலைகள் சுட்டப்படுகின்றன. அவை பின்வருமாறு:

     இறந்தகாலம் - -த்-, -த்த்-, -ந்த்-, -ட்-, -இன்-
     நிகழ்காலம் - -கிறு-, -கின்று-. -க்கிறு-, -க்கின்று-
     எதிர்காலம் - -ப்-, -ப்ப்-. -வ்-

5.3.4 துணைவினைகள்

    வினைச்சொல்லாகப் பழந்தமிழில் ஒரு பொருளை உணர்த்திய சொல் நாளடைவில் அது தன் சொற்பொருளை இழந்து இலக்கணப் பொருளைத் தரலாயிற்று. அவ்வாறு இலக்கணப் பொருளைத் தருகின்ற சொல்லைத் துணைவினை என்பர். இவ்வாறான இலக்கணக்கூறு பழந்தமிழில் ஓரளவுக்குக் காணப்பட்டது. இருப்பினும் இக்கால     எழுத்துத்தமிழில்     அக்கூறுக்கான     சொற்கள் (துணைவினைகள்) பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளன என்பது நமக்குத் தெரியவருகிறது. பழந்தமிழில் விடு என்ற துணைவினை இருந்தது.

சான்று:

    விதிர்த்துவிட்டன்ன அம்நுண் சுணங்கின்
                 (நற்றிணை.160:5)

    இங்கு விடு என்னும் துணைவினை ஒருபொருளை உணர்த்தி வருகிறது. ஆனால் இக்கால எழுத்துத்தமிழில் எண்ணற்ற துணைவினைகள் பயன்பாட்டில் இருந்து வருவதைக் காணமுடிகிறது. அவற்றுள் சில: விடு, இரு, படு, செய், பண்ணு போன்றவையாகும். இன்றையளவில் ஒரு சில துணைவினைகள் பழங்காலத் தமிழில் காணப்பட்டதுபோல் ஒரு பொருளை மட்டும் தராமல் மூன்று விதமான வெவ்வேறு பொருளை உணர்த்திவருகின்றன என்பர் மொழியியலார்.

சான்று:

இரு

  • ‘குமார் மதுரைக்குப் போயிருக்கிறான்’. இங்கு ‘செயல்முடிவு’ (perfect tense) என்ற பொருளில் அமைந்து வருகிறது.
  • ‘குமார்     நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான்’. இங்கு ‘தொடர் செயல்’ (progressive aspect) என்ற பொருளில் வந்துள்ளது.
  • ‘நேற்று இரவு     மழை     பெய்திருக்கும்’. இங்கு எதிர்காலத்திலுள்ள ‘எதிர்பார்ப்பு’ (supposition) என்ற பொருளில் அமைந்து வருகிறது.
  •     இவ்வாறான பெரும் வளர்ச்சி இக்கால எழுத்துத்தமிழில் ஏற்பட்டுள்ளது எனலாம்.

    5.3.5 பெயரடை

        பெயரடை என்பது ஒரு பெயர்ச்சொல்லின் பண்பைக் குறிக்கும் சொல்லாகும். இதனை ஒரு புதிய இலக்கணக் கூறாக மொழியியலார் கூறுவர். ஏற்கனவே இதைப்பற்றித் திராவிட மொழிகளில் ஆராய்ச்சி செய்தவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் பெயரடை என்ற ஒன்று இருப்பதாகக் கூறிச் சென்றனர். இப்பெயரடை பழந்தமிழில் குறிப்புப் பெயரெச்சம் என்று வழங்கப்பட்டு வந்தது. இக்கால எழுத்துத்தமிழில் இக்கூறு தனி ஒன்றாக அமைந்துள்ளது. இவ்விலக்கணக்கூறு ஆங்கிலமொழிப் பாகுபாட்டில் (adjective) அமைந்துள்ளதுபோல் அமைந்துள்ளது. இக்கால எழுத்துத் தமிழில் நிறையப் பெயரடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    சான்று:

        நல்ல பையன்
        
    அழகிய தீவு

    5.3.6 வினையடை

        வினையடை என்பது வினையின் தன்மையைக் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது. பழங்காலத் தமிழில் குறையெச்சம் எனப்படுவது இக்கால எழுத்துத்தமிழில் வினையடை என்ற இலக்கணக் கூறாகப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பழந்தமிழில் ‘மிக, குறைய, செய, கூடிய, ஆர’ போன்றவை இருந்தன.

    சான்று:

        மகிழ் மிகச்சிறப்ப மயங்கினள் கொல்லோ
                 (ஐங்குறுநூறு, 42:1)

    இந்தச் சான்றில் வரும் மிக என்பது மிகுதியாக என்று இக்கால எழுத்துத்தமிழில் வழங்கிவருகிறது. முன்பு கூறப்பட்ட பெயரடை போன்றே வினையடையும் தனி ஒரு இலக்கணக் கூறாக இக்கால எழுத்துத்தமிழில் வழங்கி வருகின்றது.