6.5 வரலாற்று நோக்கில் எழுத்துச் சீர்திருத்தம்

     தமிழ்மொழி நீண்ட ஒரு வரலாற்றினைப் பெற்றுள்ளது என்பது தெரிந்த ஒன்று. இம்மொழியின்பால் ஏராளமான இலக்கண இலக்கிய நூல்கள் காலந்தோறும் தோன்றிப் பெருகிக் கிடக்கின்றன. அவ்வாறு அமைந்த இலக்கியங்களில் எழுத்தும் ஓர் அங்கமாகும். எனவே சங்க காலத்தில் தோன்றிய எழுத்து முறையிலிருந்து தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்ற எழுத்துகளைப் பற்றி நாம் காண இருக்கிறோம். இவ்வெழுத்துச் சீர்திருத்தத்தை வரலாற்று நோக்கிலும், மொழியியல் அடிப்படையிலும் படிக்க இருப்பதால் தமிழ் நெடுங்கணக்கின் காலத்தைக் கீழ்க்கண்டவாறு பிரித்து அதன் அடிப்படையில் படிப்பது தெளிவு அளிக்கும்.

     1. சங்ககாலம்
     2. இடைக்காலம்
     3. தற்காலம்

     தமிழ் நெடுங்கணக்கின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய ஆராய்ச்சி ஒரு புதிராகவே இன்றையளவும் அமைந்து இருக்கிறது. பலதரப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான கருத்துகளை அளிக்கின்றனர். ஆனால் ஏதோ ஒரு வரிவடிவத்திலிருந்து தோன்றி இன்றையளவில் மாற்றம் அடைந்தும், வளர்ச்சி அடைந்தும் வந்திருக்கின்றது எனலாம். அதற்கு ஒரு சான்று கூற வேண்டுமென்றால் தமிழ் எழுத்து முறை மிகத் தொன்மையானது என்றும், அந்த எழுத்துமுறை மேற்கு ஆசியாவிலிருந்து நேரே தென்னிந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்றும், இந்த எழுத்து முறையை வட இந்தியாவில் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து இருக்கலாம் என்றும் கூறுவர்.

6.5.1 சங்ககாலம்

    சங்ககாலத்தில் தோன்றிய நூல்களில் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் ஆகும். இந்நூலில் தொல்காப்பியர் ‘எழுத்ததிகாரம்’ என்னும் முதல் பகுதியில் எழுத்துகளின் எண்ணிக்கை, உச்சரிப்பு, வருகை, புணர்ச்சி ஆகியன பற்றிக் கூறுகிறார். அத்தோடு மட்டும் அல்லாமல், ஆங்காங்குச் சில நூற்பாக்களில் எழுத்துகள் சிலவற்றின் வரிவடிவத்தையும் குறிப்பிட்டுச் செல்கிறார். அவர் குறிப்பிடும் சில எழுத்துகளின் வரிவடிங்களைக் கீழே காண்போம்.

  1. மெய் எழுத்துகள் புள்ளி இட்டு எழுதப்பட்டன.
  2. உயிர் எழுத்துகளில் எகரம், ஒகரம் ஆகிய குறில்கள் இரண்டு மெய் எழுத்துகளைப் போலப் புள்ளி இட்டு எழுதப்பட்டன.

    எ், ஒ் (இவை எ, ஒ என்னும் குறில்கள்)     எ, ஒ (இவை ஏ, ஓ என்னும் நெடில்கள்)

3. மகர மெய்யானது, பகரமெய் போலவே எழுதப்பட்டது.      ‘ப்’ என மேலே புள்ளி இட்டு எழுதினால் பகரமெய்.      அவ்வடிவத்தினுள் ப் மற்றொரு புள்ளி இட்டு எழுதினால்      மகரமெய்.

     இச் செய்திகளைத் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பின்வரும் நூற்பாக்களில் உணர்த்துகிறார்.

     மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்                  (தொல்.எழுத்து.15)

     எகர ஒகர இயற்கையும் அற்றே              (தொல்.எழுத்து.16)

     உட்பெறு புள்ளி உரு ஆகும்மே                  (தொல்.எழுத்து.14)

     எகர, ஒகரக் குறில் உயிர்களும், மகர மெய்யும் தொல்காப்பியர் காலத்தில் பெற்றிருந்த வரிவடிவங்களும், இக்காலத்தில் அவை பெற்றிருக்கும் வரிவடிவங்களும் வேறுவேறு என்பதை நாம் அறியலாம்.

     தொல்காப்பியர் காலத்தும் அவர் காலத்திற்கு முன்பும் ஐகாரமும் ஒளகாரமும் இருவேறு வகையான வரிவடிவங்களில் எழுதப்பட்டன.

     1. ஐகாரம், அகரம் இகரம் ஆகிய இரண்டு உயிர்களின் கூட்டொலியாகக் கொண்டு நாம் இன்று எழுதுவதுபோல என ஓரெழுத்தாக எழுதப்பட்டது. அதேபோல ஒளகாரம், அகரம் உகரம் ஆகிய இரண்டு உயிர்களின் கூட்டொலியாகக் கொண்டு நாம் இன்று எழுதுவது போல ஒள என ஓரெழுத்தாக எழுதப்பட்டது.

     அ + இ = ஐ
     அ + உ = ஒள

     2. ஐகாரம், அகர உயிரும் யகர மெய்யும் ஆகிய இரண்டன் கூட்டொலியாகக் கருதப்பட்டு, அய் என ஈரெழுத்தால் எழுதப்பட்டது. அதே போல ஒளகாரம், அகர உயிரும் வகர மெய்யும் ஆகிய இரண்டன் கூட்டொலியாகக் கருதப்பட்டு, அவ் என ஈரெழுத்தால் எழுதப்பட்டது.

     அ + ய் = அய் (ஐ)
     அ + வ் = அவ் (ஒள)

     இன்று நாம் வாழும் தற்காலத்தில் கூட, ஐகாரம் ‘ஐ’ என்றும், ‘அய்’ என்றும் ஒளகாரம் ‘ஒள’ என்றும் ‘அவ்’ என்றும் இருவேறு வகையாக எழுதப்பட்டு வருவதைக் காணலாம்.

சான்று:

     ஐயனார், அய்யனார்
     ஒளவையார், அவ்வையார்

6.5.2 இடைக்காலம்

    இடைக்காலத் தமிழில் எழுத்துகளின் வரிவடிவ அமைப்பிலும் எழுத்துகளின் எண்ணிக்கை அளவிலும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி அறியப்படுகின்றது.

  • எழுத்துகளின் எண்ணிக்கையில் சீர்திருத்தம்

    இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களிலும் உரைநடை நூல்களிலும் வடமொழியிலிருந்து பல சொற்கள் பயன்படுத்தப்பட்டன.     சங்ககாலத்தில்     வடசொற்கள் கலந்திருந்தாலும் அக்கலப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் இடைக்காலத்தில் வடசொற்களின் கலப்பு மிக அதிகமாகவே இருந்தது.     இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியம் போன்ற சில இலக்கண நூல்கள் வடமொழி இலக்கணத்தை பின்பற்றித் தமிழுக்கு இலக்கணம் அமைக்க முற்பட்டன. இடைக்காலத்தில் தமிழில் வடமொழிக் கலப்பின் வேகம் எந்த அளவு இருந்தது என்பதை இது உணர்த்துகிறது.

    இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் கல்வெட்டு எழுத்துகள் என்று சொல்லக் கூடிய கிரந்த எழுத்துகளாகிய ஜ், ஷ், க்ஷ், ஸ், ஹ், ஸ்ரீ என்னும் ஆறு எழுத்துகளும் புதிய எழுத்துகளாக வந்து வழங்கத் தொடங்கின. ஒரு சிலர் வடமொழிச் சொற்களை, அச்சொற்களில் உள்ள ஒலிகளின்படியே தமிழில் உச்சரிக்க வேண்டும் அல்லது எழுதவேண்டும் என்பதற்காக இந்த ஆறு கிரந்த எழுத்துகளையும் தமிழ் நெடுங்கணக்கோடு சேர்த்துச் சீர்திருத்திக் கொண்டனர். இதன் விளைவாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை முன்பை விட அதிகமாயிற்று. இது குறித்து முந்தைய பாடங்களில் அறிந்துள்ளீர்கள்.

    சங்காலத்திலும், இடைக்காலத்தின் பிற்பகுதி வரையிலும் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை பெரும்பாலும் 247 என்றே கொள்ளப்பட்டது.

     உயிர்     - 12
    
மெய்     - 18
    
உயிர் மெய் - 216
    
ஆய்தம்     - 1
                  ------
                       247
                     ------

    மேலே கூறப்பட்ட கிரந்த எழுத்துகளில் ஜ், ஷ், க்ஷ், ஸ், ஹ் ஆகிய ஐந்தும் அகரம் முதலான பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும் கூடி வரலாயின. இதனால் இவற்றின் கூட்டுவடிவம் 60 ஆயிற்று. எனவே ஜ், ஷ், க்ஷ், ஸ், ஹ் என்னும் கிரந்த எழுத்துகள் 5 , அவற்றின் கூட்டுவடிவம் 60 சேர்ந்து, இவற்றோடு ‘ஸ்ரீ’ என்ற தனியெழுத்தும் 66 ஆகி, ஏற்கனவே இருந்த 247 எழுத்துகளோடு சேர்ந்து தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை மொத்தம் 313 என்ற அளவில் பெருகி அமைந்தது.

    கிரந்த எழுத்துகள் அல்லது கல்வெட்டு எழுத்துகள் என்று கூறப்படும் இந்த எழுத்துகள் இடைக்காலத்தின் இறுதிப் பகுதியில் தோன்றிய அருணகிரி நாதரின் திருப்புகழில் வருகின்றன.

சான்று:     ‘ஷ் - குமர முஷிக முந்திய வைங்கர’ (திருச்செந்தில்: 13)

    ‘ஜ் - உபயகுல தீபதுங்க விருது கவிராஜசிங்க’                  (திருப்பழநிமாலை: 15)

    ‘ஹ் - ஜெயஜெய ஹரஹர’     (திருச்செந்தூர்: 427)

    ‘க்ஷ் - தெளிய மோக்ஷத்தை’     (குமரக் கோட்டம்: 52)

    ‘ஸ்ரீ - பங்கய ஸ்ரீ பாதநூபுரி’     (திருச்செந்தூர்: 131)

  • எழுத்துகளின் வரிவடிவத்தில் சீர்திருத்தம்

    இடைக்காலத்தின் பிற்பகுதி வரை (கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை), தொல்காப்பியர் காலத்தைப்போல எகர, ஒகரக் குறில் உயிர்கள் புள்ளி இட்டே எழுதப்பட்டு வந்தன.

    கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் கூட, எகர ஒகரக் குறில் உயிர்கள் புள்ளி இட்டு எழுதப்படும் என்று கூறுகிறது.

    தொல்லை வடிவின எல்லா எழுத்தும்; ஆண்டு
    எய்தும் எகர ஒகரம், மெய் புள்ளி
                (நன்னூல்.98)

    கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலி நாட்டிலிருந்து கிறித்தவ சமயம் பரப்ப வந்தவர் வீரமா முனிவர் (கி.பி. 1680 - 1747) ஆவார். இவரது இயற்பெயர் பெஸ்கி என்பதாகும். இவர் தமிழ்நாட்டில் தங்கியிருந்து கிறித்தவ சமயம் பரப்பியதோடு மட்டுமன்றி, தமிழ்ப்பணியும் செய்தவர் ஆவார். தேம்பாவணி என்னும் காப்பியத்தையும் சதுரகராதி, தொன்னூல் விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும் வேதியர் ஒழுக்கம், வேத விளக்கம் போன்ற உரைநடை நூல்களையும் இயற்றிய பெருமை உடையவர் வீரமாமுனிவர்.

    வீரமாமுனிவர் செய்த தமிழ்ப்பணிகளில் குறிப்பிடத்தக்கது எழுத்துச் சீர்திருத்தம் ஆகும். சங்ககாலம் முதல் வீரமாமுனிவர் காலம் வரையிலும் எகர ஒகரக் குறில் உயிர்கள் புள்ளியுடனும் ஏகார, ஓகார நெடில் உயிர்கள் புள்ளிஇல்லாமலும் எழுதப்பட்டு வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். வீரமாமுனிவர் ‘அ, இ, உ’ என்னும் ஏனைய குறில் உயிர்களுக்கு ஒப்பான வகையில், எகர ஒகரக் குறில் உயிர்களைப் புள்ளி இல்லாமல் அமைத்தார். அவற்றின் நெடில்களுக்கு அக்குறில் வடிவங்களின் கீழே சிறிது மாறுதல் செய்து அமைத்தார். குறில் எகரத்தின் கீழே இடப்புறம் சாய்வுக்கோடு இட்டு நெடில் ஏகாரத்தையும், குறில் ஒகரத்தின் கீழே ஒரு சுழி இட்டு நெடில் ஓகாரத்தையும் குறிக்கும் வடிவங்களாகக்     கொண்டு எழுதும் புதிய எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

     பழைய எழுத்து     வீரமாமுனிவர் செய்த
     வடிவம்     சீர்திருத்த வடிவம்

குறில்     எ், ஒ்         எ, ஒ

நெடில்     எ, ஒ         ஏ, ஓ

    வீரமாமுனிவர் செய்த இந்த எழுத்துச் சீர்திருத்தம் இன்று வரையில் பயனுள்ளதாய்ப் போற்றப்படுகின்றது.

6.5.3 தற்காலம்

    தற்காலத் தமிழில் அச்சுப்பொறி, தட்டச்சுப்பொறி, கணிப்பொறி (கணினி) ஆகியன     இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இவற்றின் துணைகொண்டு இன்று கல்வி கற்பது, பல்துறை நூல்களை எழுதி வெளியிடுவது போன்றவை நடந்து வருகின்றன. இந்நிலையில் தமிழில் உள்ள எழுத்துகளுக்கான வரிவடிவங்களில் ஓர் ஒழுங்கான அமைப்பினைக் கொண்டு வந்தால், பல எழுத்து வடிவங்களைக் கொண்ட தமிழை, மிகக் குறைந்த     எழுத்து வடிவங்களைக் கொண்டு எளிதாக எழுதிவிடலாம் - கற்று விடலாம் என்ற எண்ணம் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே தமிழ் அறிஞர் சிலரிடம் இருந்தது. அவ்வெண்ணத்தைச் செயலாக்குவதற்கு அவர்கள் ஆக்கப்பூர்வமான முயற்சியில் ஈடுபட்டனர் - ஈடுபட்டும் வருகின்றனர்.

    தந்தை பெரியார் அவர்கள் தற்காலத் தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்துச் சீர்திருத்தம் செய்த பெருமைக்கு உரியவர் ஆவார். தமிழில் ‘க், ங், ச், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ்’ என்னும் பதின்மூன்று மெய் எழுத்துகள் ‘ஆ, எ, ஏ, ஐ, ஒ, ஓ’ என்னும் ஆறு உயிர்களோடு சேர்ந்து உயிர்மெய்களாக வரும்போது அவற்றின் உயிர்மெய் வடிவங்கள் 78 ஓர் ஒழுங்கான அமைப்பில் உள்ளன.

சான்று:

    கா, கெ, கே, கை, கொ, கோ.
    சா, செ, சே, சை, சொ, சோ.
    தா, தெ, தே, தை, தொ, தோ.
    பா, பெ, பே, பை, பொ, போ.

    ஆனால் ‘ண், ல், ள், ற், ன்’ ஆகிய ஐந்து மெய் எழுத்துகள் மேலே குறிப்பிட்ட ஆறு உயிர்களோடு சேர்ந்து உயிர்மெய்களாக வரும்போது அவற்றின் வரிவடிவங்கள் 30இல் 17 வரிவடிவங்கள் மேலே கூறப்பட்டுள்ளவாறு ஓர் ஒழுங்கான அமைப்பில் காணப்பட்டன. ஆனால் ஏனைய 13 வரிவடிவங்கள் ஒழுங்கான அமைப்பில் இல்லை; வேறுபட்ட அமைப்புடன் இருந்தன. அவற்றைக் கீழ்க்கண்ட பட்டியல் காட்டும்.

இப்பதின்மூன்று எழுத்து வடிவங்களையும், ‘கா, கெ, கே, கை, கொ, கோ’ போன்ற ஏனைய உயிர்மெய்களின் வரிவடிவ அமைப்பில் எழுதினால் ஓர் ஒழுங்கு முறையும், எளியமுறையும் கிடைக்கும் எனக் கருதிய தந்தை பெரியார் அவ்வெழுத்துகளின் வரிவடிவங்களில் சீர்திருத்தம் செய்தார். அவர் செய்துள்ள சீர்திருத்தத்தைப் பின்வரும் பட்டியல் தெளிவாகக் காட்டும்.

தந்தை பெரியார் செய்த இந்த எழுத்துச் சீர்திருத்தத்தின் விளைவாக, தமிழில் உள்ள ‘ஆ, எ, ஏ, ஐ, ஒ, ஓ’ என்னும் ஆறு உயிர் எழுத்துகளோடு பதினெட்டு மெய் எழுத்துகளும் சேர்ந்து வரும் 108 உயிர்மெய்கள் ஓர் ஒழுங்கான வரிவடிவ அமைப்புக்குள் வரலாயின.

    தந்தை பெரியார்     மேலே குறிப்பிட்ட எழுத்துச் சீர்திருத்தத்தினைக் கி.பி. 1935இல் தமது திராவிடர் கழக நாளிதழான விடுதலையில் அறிமுகப்படுத்திப் பின்பற்றி வந்தார். மேலும் அவர் இந்த எழுத்துச் சீர்திருத்தத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தார்.

    தந்தை பெரியார் பின்பற்றிய - வலியுறுத்திய இந்த மாபெரும் எழுத்துச் சீர்திருத்தத்தை, கி.பி. 1978இல் அப்போது இருந்த தமிழ்நாடு அரசு சட்டமாக்கி, ஆணை பிறப்பித்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

    ‘ஆ, எ, ஏ, ஐ, ஒ, ஓ’ மற்றும் ‘அ, ஒள’ ஆகிய எட்டு உயிர்களோடு பதினெட்டு மெய் எழுத்துகளும் சேர்ந்து வரும் 144 உயிர்மெய்கள் தமிழ் நெடுங்கணக்கில் தற்போது ஓர் ஒழுங்கான வரிவடிவ அமைப்பைப் பெற, ஏனைய ‘இ, ஈ, உ, ஊ’ ஆகிய நான்கு உயிர்களுடன் பதினெட்டு மெய் எழுத்துகளும் சேர்ந்து வரும் 72 உயிர்மெய்கள் ஒரு சீரான ஒழுங்கான வரிவடிவ அமைப்பில்     அமையாமல்,     தனித்தனியே     வேறுபட்ட வரிவடிவங்களாக அமைந்துள்ளன. சான்றாக, ‘க், ச், த், ந், ம்’ என்னும் மெய் எழுத்துகள் இந்த நான்கு உயிர்களோடு சேர்ந்து வரும்போது,

    கி, கீ, கு, கூ
    சி, சீ, சு, சூ
    தி, தீ, து, தூ
    நி, நீ, நு, நூ
    மி, மீ, மு, மூ

என வெவ்வேறு வடிவங்களில் எழுதப்படுகின்றன.

    எனவே, ‘இ, ஈ, உ, ஊ’ என்னும் நான்கு உயிர்களோடு பதினெட்டு மெய்கள் சேர்ந்து வரும் 72 உயிர்மெய்களின் வரிவடிவ அமைப்பிலும் ஒரு சீரான ஒழுங்குமுறையைக் கொண்டு வருவதற்கான முயற்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இத்தகைய அரிய முயற்சியில் ஐராவதம் மகாதேவன், டாக்டர் வா. செ. குழந்தைசாமி போன்றோர் அயராது பாடுபட்டு வருகின்றனர். இவர்களது முயற்சி வெற்றி பெற்றால் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளை மிகவும் குறைவான குறியீடுகளால் எழுதிவிட முடியும் என்பர்.

    இக்காலத்தில் இன்னும் சிலர் தம்மைப் ‘புதுமைவாதிகள்’ எனக் கூறிக்கொண்டு தமிழ் எழுத்தில் சில புதிய உத்திகளைக் கையாளுகின்றனர். இவர்கள் குரல் இலா ஒலி (voiceless sound), குரல் உடைய ஒலி (voiced sound) என்பனவற்றை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகத் தமிழ் எழுத்தில் சற்றுத் தடித்த எழுத்தில் (bold) எழுதுகின்றனர். இதன் நோக்கம் ஒலிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டினைக் காண்பதற்கே.

சான்று:

    'பாம்பு'