பதிலிடு பெயர்கள் மொழியின் அடிப்படைச்
சொற்களாகக்
(basic vocabulary) கருதப்படுகின்றன. ஒரு
மொழியின்
வரலாற்றில் இவை முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. பதிலிடு
பெயர்கள் பொதுவாக எளிதில் மாறும் தன்மை உடையன அல்ல.
எனினும் தமிழ்மொழியின் வரலாற்றை நோக்கினால்,
அம்மொழியில் பதிலிடு பெயர்கள் காலந்தோறும்
சிற்சில
மாற்றங்களையும் புது வடிவங்களையும் பெற்று
வளர்ந்து
வந்திருப்பதைக் காணலாம் ; புது வடிவங்களின் வரவால் பழைய
வடிவங்கள் சில வழக்கிழந்து போயிருப்பதையும் அறியலாம்.
1.1.1 பதிலிடு பெயர் - விளக்கம்
ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் பெயராக அமையாமல்,
அப்பெயருக்குப் பதிலாக - மாற்றாக (Substitute)
நின்று,
அப்பொருளை உணர்த்துவதற்கு வழங்கும் பெயரை மொழியியலார்
திலிடு பெயர் (Pronoun) என்று குறிப்பிடுகின்றனர். இக்கருத்தைச்
சில சான்றுகள் கொண்டு விளக்கிக் காண்போம்.
சான்று : 1
கண்ணன் வந்தான்
இத்தொடரில் கண்ணன்
என்ற பெயர் ஒரு பொருளை
நேரடியாகக் குறிக்கும் பெயர் ஆகும். எனவே
இதனைத்
தனிப்பெயர் (Proper noun) என்று குறிப்பிடுவர்.
இத்தொடரை,
அவன் வந்தான்
என்றும் கூறலாம். இத்தொடரில் அவன்
என்பது நேரடியாக ஒரு
பொருளைக் குறிக்கவில்லை. இருப்பினும் ெஎன்ற பெயருக்குப்
பதிலாக வழங்குகிறது. எனவே அவன்
என்பது பதிலிடு பெயர்
எனக் கூறப்படுகிறது.
சான்று : 2
பூனை வந்தது
இத்தொடரில் பூனை
என்ற பெயர் நேரடியாக ஒரு
பொருளைக் குறிக்கிறது. இத்தொடரை,
அது வந்தது
என்றும் கூறலாம். இத்தொடரில் அது
என்பது, பூனை என்ற
பெயருக்குப் பதிலாக வழங்குகிறது. எனவே அது என்பது
பதிலிடு
பெயர் எனக் கூறப்படுகிறது.
மேலும் சில சான்றுகள்:
நீ வந்தாய்
நான் வந்தேன்
அவள் வந்தாள்
இத்தொடர்களில் முறையே
நீ, நான், அவள் என்னும்
பெயர்கள், அவரவர்க்குரிய நேரடியான பெயர்கள்
அல்ல.
அப்பெயர்களுக்குப் பதிலாக வழங்குகின்ற பெயர்களே ஆகும்.
மேலே சான்று காட்டிய தொடர்களில்
நீ, நான் என்பன
மூவிடப்பெயர்கள்; அவன்,
அவள், அது என்பன
சுட்டுப்பெயர்கள். இப்பெயர்கள்
எல்லாம் ஒரு பொருளை
நேரடியாகக் குறிக்காமல், அப்பொருளை நேரடியாகக் குறிக்கும்
பெயர்களுக்குப் பதிலாக நின்று வழங்குகின்றன. இத்தகைய
பெயர்களையே மொழியியலார் பதிலிடு பெயர்கள்
(Pronouns)
என்று குறிப்பிடுகின்றனர். இவற்றை மாற்றுப் பெயர்கள்
என்ற
வேறொரு பெயராலும் மொழியியலார் குறிப்பிடுவர்.
1.1.2 பதிலிடு பெயர் வரும் இடங்கள்
தமிழில் பதிலிடு பெயர்
வரும் இடங்களை இக்கால
மொழியியலார் வகைப்படுத்திக் கூறியுள்ளனர்.
பெயருக்குப் பதிலாக வருதல்
கண்ணன் வந்தான்; அவனுக்கு இடம் கொடு.
என்ற தொடரில் ‘கண்ணன்’ என்ற பெயருக்குப் பதிலாக,
அவன்
என்ற பதிலிடு பெயர் வருகிறது.
பெயர்த்தொடருக்குப் பதிலாக வருதல்
அங்கு வந்த பையன் நல்லவன்; அவனுக்கு இடம்
கொடு.
என்ற தொடரில் ‘அங்கு வந்த பையன்’ என்ற
பெயர்த்தொடருக்குப் (Noun Phrase) பதிலாக அவன்
என்ற
பதிலிடு
பெயர் வருகிறது.
சொற்றொடருக்குப் பதிலாக வருதல்
கண்ணன் வந்தான்; அது நல்லதன்று.
என்பதில் ஒரு சொற்றொடருக்குப் (கண்ணன் வந்தது) பதிலாக,
அது என்ற பதிலிடு பெயர் வருகிறது.
சொற்றொடரின் ஒரு பகுதிக்குப் பதிலாக வருதல்
அவன் சென்னையில் வெற்றி பெற்றான்;
ஆனால் அது இங்கே நடக்காது.
என்ற சொற்றொடரில் ஒரு பகுதிக்குப் (வெற்றி பெறுதல்) பதிலாக
அது என்ற பதிலிடு பெயர் வருகிறது.
மேலும் பதிலிடு பெயர்கள், முன்னால் சொன்ன பெயர்
பற்றிய செய்திகள் அனைத்தையும் கொண்டு தரும்.
குழலி என் மாமன் மகள்; அவள் நல்லவள்.
என்பதில் அவள் என்பது பதிலிடு பெயர்.
இது ‘குழலி’, ‘மாமன்
மகள்’ போன்ற எல்லாச் செய்திகளையும் தந்து நிற்றல் காணலாம்.
1.1.3 மொழியியலார் குறிப்பிடும் பதிலிடு பெயர்கள்
தமிழில் உள்ள பதிலிடு பெயர்களை மொழியியலார் மூன்று
வகையாகப் பிரித்துக் கூறுகின்றனர்.
1) மூவிடப் பெயர்கள் (Personal pronouns)
2) சுட்டுப் பெயர்கள் (Demonstrative pronouns)
3) வினாப் பெயர்கள் (Interrogative pronouns)
1.1.4 தமிழிலக்கண நூலாரும் பதிலிடு பெயர்களும்
தொல்காப்பியர், நன்னூலார்
போன்ற தமிழிலக்கண
நூலாரும் பெயர்களை வகைப்படுத்திக் கூறும்போது, மொழியியலார்
குறிப்பிடும் மூவகைப் பதிலிடு பெயர்களுக்கே முதன்மை இடம்
தந்துள்ளனர்.
தொல்காப்பியர் பெயர்களை உயர்திணைப்
பெயர்கள்,
அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் (இருதிணைக்கும்
பொதுவான பெயர்கள்) என மூவகையாகப்
பகுக்கின்றார்.
ஒவ்வொரு வகையிலான பெயர்களைத் தொகுத்துக் கூறும்போது
முதலில் பதிலிடு பெயர்களையே கூறுகின்றார்.
உயர்திணைப் பெயர்களைப் பற்றிப் பேசும்போது,
அவன்,இவன், உவன்,என
வரூஉம் பெயரும்,
அவள்,இவள், உவள், என வரூஉம் பெயரும்,
அவர், இவர், உவர்,என வரூஉம் பெயரும்,
யான்,யாம் நாம்,என வரூஉம் பெயரும்,
யாவன், யாவள், யாவர், என்னும்
ஆவயின் மூன்றொடு, அப்பதி னைந்தும்
பால்அறி வந்த உயர்திணைப் பெயரே
(தொல்காப்பியம், சொல்லதிகாரம்-162)
என முதலில் பதிலிடு பெயர்களையே
குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியர் இந்நூற்பாவில் குறிப்பிடும் அவன், இவன், உவன்;
அவள், இவள், உவள்; அவர், இவர், உவர் என்னும் ஒன்பதும்
சுட்டுப்பெயர்கள். யான், யாம், நாம் என்னும்
மூன்றும் தன்மை
இடப்பெயர்கள். யாவன்,
யாவள், யாவர் என்னும் மூன்றும்
வினாப்பெயர்கள்.
இதேபோலத் தொல்காப்பியர் அஃறிணைப் பெயர்களைப்
பற்றிப் பேசும்போது முதற்கண் அது, இது, உது; அவை, இவை,
உவை என்னும் சுட்டுப் பெயர்களையும்,
யாது, யா, யாவை
என்னும் வினாப் பெயர்களையும்
குறிப்பிடுகிறார்.
விரவுப்பெயர்களைப் பற்றிப் பேசும்போது, நீ, நீயிர் என்னும்
முன்னிலை
இடப்பெயர்களையும், தான், தாம் என்னும்
படர்க்கை
இடப்பெயர்களையும் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியருக்குப் பல
நூற்றாண்டுகள் பிற்பட்ட
காலத்தில் தோன்றிய நன்னூலாரும்,
தன்மை யான், நான்,
யாம், நாம்; முன்னிலை
எல்லீர் நீயிர், நீவிர் நீர், நீ;
அல்லன படர்க்கை; எல்லாம் எனல்பொது
(நன்னூல் - 285)
என்ற நூற்பாவில் பதிலிடு பெயர்களில் ஒன்றாகிய
மூவிடப்பெயர்களைத் தொகுத்துக் கூறுகிறார்.
இனி, மூவிடப்பெயர்கள், சுட்டுப்பெயர்கள், வினாப்பெயர்கள்
என்னும் மூன்று வகைப் பதிலிடு
பெயர்களும்
தமிழ்மொழி
வரலாற்றில் காலந்தோறும் அடைந்த மாற்றங்களையும்
வளர்ச்சியையும் பற்றி விரிவாகக் காண்போம்.