1.3 சுட்டுப்பெயர்கள் பதிலிடு பெயர்களில் இரண்டாவது வகை சுட்டுப்பெயர்கள் ஆகும். தமிழில் அ, இ, உ என்னும் மூன்று உயிர்கள் சுட்டுப்பொருளில் நெடுங்காலந் தொட்டே வழங்கி வருகின்றன. அகரம் சேய்மையில் (Remote) உள்ளதையும், இகரம் அண்மையில் (Proximate) உள்ளதையும், உகரம் சேய்மைக்கும் அண்மைக்கும் இடையில் (Intermediate) உள்ளதையும் சுட்டும். எனவே தமிழிலக்கண நூலார் இம்மூன்றையும் சுட்டெழுத்துகள் என்று குறிப்பிடுவர். இம்மூன்று சுட்டெழுத்துகளோடு ஐம்பால் காட்டும் அன், அள், அர், து போன்ற விகுதிகள் சேர்வதால் சுட்டுப்பெயர்கள் உருவாகின்றன. சான்று : அ + அன் = அவன் இவ்வாறு உருவாகும் சுட்டுப்பெயர்கள் ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் பெயர்களுக்குப் பதிலாக வழங்குகின்றன. எனவே இவற்றை மொழியியலார் சுட்டுப் பதிலிடு பெயர்கள் (Demonstrative Pronouns) என்று குறிப்பிடுகின்றனர். இனிக் காலந்தோறும் தமிழில் சுட்டுப்பெயர்கள் வழங்கி வந்துள்ள முறையைக் காண்போம். தொல்காப்பியர் சுட்டுப்பெயர்களை உயர்திணைக்கு உரிய சுட்டுப் பெயர்கள், அஃறிணைக்கு உரிய சுட்டுப்பெயர்கள் என இரு வகைப்படுத்துகிறார். அவர் குறிப்பிடும் சுட்டுப் பெயர்களைப் பின்வரும் பட்டியல் காட்டும்.
மேலே காட்டிய பட்டியலை நோக்கின் சுட்டெழுத்துகளை அடியாகக் கொண்டு திணை, பால் உணர்த்தும் சுட்டுப்பெயர்கள் தமிழில் பண்பட்ட ஓர் ஒழுங்கான முறையில் உருவாகி அமைந்திருப்பதை அறிந்து கொள்ளலாம். தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள சுட்டுப்பெயர்கள் யாவும் சங்க கால இலக்கியங்களில் வழங்குகின்றன. தற்காலத் தமிழில் இடைநிலைச் சுட்டுப் பெயர்களாகிய உவன், உவள், உவர், உது, உவை என்பன வழக்கில் இல்லை. ஆனால் சங்க கால இலக்கியங்களில் இவை வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். சான்று: பாக்கத்து
உவன்
வரின் எவனோ? பாண!
உதுக்காண் தோன்றும்எம்
சிறுநல் ஊரே
இடைக்காலத் தமிழில் சங்க காலத்தில் இருந்த சுட்டுப்பெயர்கள் யாவும் வழக்கில் இருந்துள்ளன. சங்க காலத்தைப் போலவே, இடைக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களிலும் இடைநிலைச் சுட்டுப் பெயர்கள் காணப்படுகின்றன; ஆனால் மிக அருகியே காணப்படுகின்றன. உவன்
காண் குமுதன்; குமுதாக்கனும் என்ற கம்பராமாயணப் பாடல் அடிகளில் மூன்று சுட்டுப்பெயர்களும் வந்துள்ளன. சுட்டுப்பெயர்களைப் பொறுத்தவரை இடைக்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. சங்க காலத்தில் அவர் என்பது பலரைக் குறிக்கும் பன்மைச் சுட்டுப்பெயர். ஆனால் அது ஒருவனையோ ஒருத்தியையோ மட்டும் குறிக்கும் உயர்வு ஒருமைப்பெயராகவும் சங்க காலத்தில் வழங்கியது. இவ்வாறு உயர்வு காரணமாக ஒருவரை மட்டும் அவர் என்ற சொல் குறிக்கவே, பலரைக் குறிக்க ‘அவர்’ என்பதோடு ‘கள்’ விகுதி சேர்த்து, அவர்கள் என்ற பன்மைச் சுட்டுப்பெயர் இடைக்காலத் தமிழில் உருவாக்கப்பட்டு வழங்கி வரலானது. மற்ற தன்மை, முன்னிலைப் பன்மைகளில் யாங்கள், நாங்கள், நீங்கள் போன்ற வடிவங்களிலும் கள் விகுதி இருப்பது இங்கே கருதத்தக்கது. இடைக்காலத் தமிழில் ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் அவர்கள் என்னும் வழக்கு மிகுதியாக உள்ளது. அழைப்பன் திருமாலை ஆங்கு
அவர்கள் சொன்ன இடைக்காலத்தில் தோன்றிய வீரசோழியம், அவர் என்பதோடு அவர்கள் என்பதையும் படர்க்கைச் சுட்டுப் பன்மைப்பெயராகக் குறிப்பிடுவது இங்கே கருதத்தக்கது. தற்காலத் தமிழில் உகரச் சுட்டுப்பெயர்கள் காணப்படவில்லை. பிற அகர, இகரச் சுட்டுப் பெயர்கள் காணப்படுகின்றன. இடைக்காலத் தமிழில் போலவே தற்காலத் தமிழிலும் அவர் என்பது உயர்வு ஒருமைச் சுட்டுப் பெயராக வழங்குகிறது; அவர்கள் என்பதே பன்மைச் சுட்டுப்பெயராக வழங்குகிறது. சான்று : அவர் வந்தார் |