1.4 வினாப்பெயர்கள் பதிலிடு பெயர்களில் மூன்றாவது வகை வினாப்பெயர்கள் (Interrogative pronouns) ஆகும். வினாப்பெயர்கள் சுட்டுப் பெயர்களைப் போலவே ஒருமை, பன்மை என்னும் எண் வேறுபாடு, ஆண் பால், பெண்பால் போன்ற பால் வேறுபாடு காட்டுவனவாக அமைந்துள்ளன. தொல்காப்பியர் சுட்டுப்பெயர்களைப் போலவே வினாப் பெயர்களையும் உயர்திணைக்கு உரிய வினாப்பெயர்கள், அஃறிணைக்கு உரிய வினாப்பெயர்கள் எனப் பகுத்துக் கூறுகிறார். யாவன், யாவள், யாவர் என்னும் வினாப்பெயர்கள் உயர்திணைக்கு உரியன. இம்மூன்றும் முறையே ஆண்பால், பெண்பால், பலர்பால் பெயர்களை வினவுதற்கு உரியன. யாது, யா, யாவை என்னும் வினாப்பெயர்கள் அஃறிணைக்கு உரியன. இவற்றுள் யாது என்பது அஃறிணை ஒருமைப் பெயரையும், யா, யாவை என்பன அஃறிணைப் பன்மைப் பெயரையும் வினவுதற்கு உரியன. சான்று: அவன் யாவன் யா என்னும் வினா எழுத்தை அடியாகக் கொண்டு, பால் உணர்த்தும் வினாப்பெயர்கள், சுட்டுப்பெயர்களைப் போலவே ஓர் ஒழுங்கான முறையில் அமைந்திருப்பது கருதத்தக்கது. யாவர் என்பது யார் எனத் தொல்காப்பியர் காலத்தில் மருவி வழங்கியது. யார் என்னும் இவ்வினாச்சொல் உயர்திணை முப்பால் பெயர்களையும் வினவுவதற்குரிய பொது வினாச்சொல் என்பார் தொல்காப்பியர். யார் என்னும் வினாவின்
கிளவி சான்று: அவள் யார்; அவன் யார்; அவர் யார். சங்க இலக்கியங்களில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள வினாப்பெயர்கள் அனைத்தும் வருகின்றன. யார் என்னும் வினா, உயர்திணை முப்பாலுக்கும் உரியதாக வழங்குகிறது. சான்று: யார் இவன்? எம்
கூந்தல் கொள்வான் ஈங்கே வருவாள்
இவள் யார்
கொல்?
இவர் யார்? என்குவள்
அல்லள் இடைக்காலத் தமிழில், சங்க காலத்தில் வழங்கிய வினாப்பெயர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெறுகின்றன. யாவர் என்பது சங்க காலத்தில் யார் என மருவி வழங்கியது என மேலே கண்டோம். இடைக்காலத்தில் இவ்வினாப்பெயர் யார் என வழங்குவதோடு, மொழி முதல் யகரமெய் வீழ்ச்சியுற்று, ஆர் எனவும் வழங்குகிறது. சான்று: ஆர் இக்கொடுமை செய்தார்? யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்னும் வினாப்பெயர்களில் மொழிமுதலில் உள்ள யாகாரம் எகரமாகத் (யா > எ) திரிந்தது. யாவன் > எவன் யாவர் என்பது ஏவர் என்றும் திரிந்து வழங்குகிறது. சான்று: எவன் அவ் ஈசன் என்பார்
பொர
ஏவர் (எவர்) வெல்வர் என்று
எண்ணலர் ஏங்குவர் அடியேன் அணுகப் பெறும் நாள்
எவை கொலோ தற்காலத் தமிழில் எவன், எவள், எவர், யாவர், யார், எது, யாது, ஏது, எவை, யாவை போன்ற வினாப்பெயர்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. யார் என்பது இடைக்காலத் தமிழைப் போல, தற்காலத் தமிழில் பேச்சு வழக்கில் ஆர் என்று திரிந்து வழங்குகிறது. தற்காலத் தமிழில் மேற்கூறிய வினாப்பெயர்களுடன் என்ன, ஏன் போன்ற வினாச்சொற்களும் வழங்குகின்றன. |