மேலே இதுகாறும் நாம் கண்ட மூவிடப்பெயர்கள்,
சுட்டுப்பெயர்கள், வினாப்பெயர்கள் ஆகிய மூவகைப் பதிலிடு பெயர்களை, இக்கால
மொழியியலார் அவை வழங்கும் முறை நோக்கி அவற்றை மேலும் ஒன்பது வகைகளாகப் பிரித்து
ஆராய்கின்றனர். அவை வருமாறு:
1) உயர்வு ஒருமைப் பதிலிடு பெயர்கள்
2) வினாப் பதிலிடு பெயர்கள்
3) வரையறை இல்லாப் பதிலிடு பெயர்கள்
4) உள்ளடக்குப் பதிலிடு பெயர்கள்
5) பகிர்வுப் பதிலிடு பெயர்கள்
6) தற்சுட்டுப் பதிலிடு பெயர்கள்
7) பரிமாற்றப் பதிலிடு பெயர்கள்
8) முழுமைப் பதிலிடு பெயர்கள்
9) உடைமைப் பதிலிடு பெயர்கள்
1.5.1 உயர்வு ஒருமைப்
பதிலிடு பெயர்கள்
மூவிடப்பெயர்களிலும்,
சுட்டுப்பெயர்களிலும் உள்ள பன்மைப்பெயர்கள் பலரைக் குறிக்காமல், உயர்வு அல்லது
மரியாதை காரணமாக ஒருவரை மட்டும் குறிப்பதும் உண்டு. இவ்வாறு ஒருவரை மட்டும்
குறிக்கும் பன்மைச்சொற்கள், உயர்வு
ஒருமைப் பதிலிடு பெயர்கள் (Honorific
singular pronouns) எனப்படும்.
சான்று :
கண்ணன் வந்தார்;
அவர்க்கு இடம் கொடு.
இந்திரா அம்மையார் வந்தார்; அவர்களைப்
பார்த்தேன்
அண்ணா! நீங்கள்
சொற்பொழிவு ஆற்ற வேண்டும்.
என்ற தொடர்களில் அவர் (பழந்தமிழில் பன்மை), அவர்கள், நீங்கள்
என்ற பன்மைப் பதிலிடு பெயர்கள் உயர்வு காரணமாக ஒருவரை மட்டும் குறிக்கக்
காணலாம்.
1.5.2 வினாப் பதிலிடு
பெயர்கள்
தமிழில் உள்ள வினாப்பெயர்கள்
ஐம்பால் காட்டுவன ஆகும். அவற்றைப் பற்றி விரிவாக முன்னரே பார்த்தோம். பால்
காட்டாமல் எண், அளவு போன்றவற்றைக்
குறிக்கும் எத்தனை, எவ்வளவு, எத்துணை
என்ற வினாப்பெயர்களும் பதிலிடு பெயர்களாக (Interrogative pronouns) வரும்.
சான்று:
பத்தில் மூன்று போனால்
எத்தனை? (எண்)
எவ்வளவு
மண் வேண்டும்? (அளவு)
எத்துணை
துன்பம்? எத்துணை
நட்பு? (அளவு)
1.5.3 வரையறை இல்லாப்
பதிலிடு பெயர்கள்
ஒருவரை அல்லது ஒன்றை, யார் என்றோ
அல்லது எது என்றோ வரையறை செய்து குறிப்பிட முடியாத
நிலையில் பயன்படுத்தப்படும் பதிலிடு பெயர்களே வரையறை
இல்லாப் பதிலிடு பெயர்கள் (Indefinite pronouns) எனப்படும்.
தமிழில் இப்பதிலிடு பெயர்கள் யார், எது, என்ன போன்ற வினாப் பதிலிடு பெயர்களிலிருந்து
உருவாகின்றன.
சான்று :
யாரோ
வந்தார்
யாரையோ பார்த்தான்
யாருக்கோ கொடுத்தான்
எதையோ பார்த்தான்
என்னவோ செய்தான்
1.5.4 உள்ளடக்குப்
பதிலிடு பெயர்கள்
எல்லோரையும் அல்லது எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கூறும்
பதிலிடு பெயர்கள், உள்ளடக்குப் பதிலிடு பெயர்கள் (Universal pronouns) எனப்படும்.
யார், எவன், எவள், எவர், எது போன்ற
வினாப்பெயர்களுடன் உம் சேர்ந்து வரும்போது
இத்தகைய உள்ளடக்குப் பதிலிடு பெயர்கள்
உருவாகின்றன. பொதுவாக இப்பெயர்கள் எதிர்மறையில்தான் அதிகமாக வருகின்றன.
சான்று :
யாரும் வரவில்லை
எவனும் வரவில்லை
எவளும் வரவில்லை
எவரும் வரவில்லை
எதுவும் வரவில்லை
1.5.5 பகிர்வுப்
பதிலிடு பெயர்கள்
தனித்தனியாக ஒருவரை அல்லது ஒன்றனைக் குறித்து வரும் பதிலிடு
பெயர்களே பகிர்வுப் பதிலிடு பெயர்கள்
(Distributive pronouns) எனப்படும். ஒரு கூட்டத்தில் ஒவ்வொருவரையும் அல்லது
ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கருதும்போதுதான் இப்பெயர்களைப் பயன்படுத்துகிறோம்.
சான்று:
ஒவ்வொருவராக
வந்து வாங்கவும்
ஒவ்வொன்றையும் பார்த்து வாங்கினான்
1.5.6 தற்சுட்டுப்
பதிலிடு பெயர்கள்
ஒரு தொடரில் ஒரு செயலைச் செய்பவனும்
செய்யப்படுபவனும் ஒருவராக இருக்கும்போது, செய்யப் படுபவனைக் குறிப்பதற்குக்
குறிப்பிட்ட பதிலிடுபெயர்களைப் பயன்படுத்துவது உண்டு. அப்பதிலிடு பெயர்களைத்
தற்சுட்டுப் பதிலிடு பெயர்கள் (Reflexive
pronouns) என்பர். பொதுவாகச் செய்பவன் எழுவாயாக வரும்போதுதான் தற்சுட்டுப்பெயர்கள்
செயப்படு பொருளுக்குப்
பதிலாகப் பயன்படுகின்றன. தற்சுட்டுப்பெயர்கள் இரண்டாவதாக வரும்.
தமிழில் ஐம்பால் காட்டும் சுட்டுப்பெயர்கள், பெயர்ச் சொற்கள்
ஆகியவற்றை அடுத்து தன்னை, தம்மை, தங்களை
என்பனவும், தன்மை இடப்பெயர்களை அடுத்து என்னை,
எங்களை என்பனவும், முன்னிலை இடப்பெயர்களை அடுத்து உன்னை,
உங்களை என்பனவும் தற்சுட்டுப்பெயர்களாக வரும்.
சான்று:
அவன் தன்னையே அடித்துக் கொண்டான்
அவள் தன்னேயே பார்த்துக் கொண்டாள்
இராமன் தன்னையே நொந்து கொண்டான்
அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்
நான் என்னையே அடித்துக் கொண்டேன்
நீ உன்னையே அடித்துக் கொண்டாய்
1.5.7 பரிமாற்றப்
(கொண்டு கொடுக்கும்) பதிலிடு பெயர்கள்
இருவர் அல்லது மேற்பட்டவர்கள் தம்முள் பரிமாற்றம் செய்து
கொண்ட செயல்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பதிலிடு பெயர்கள்,
பரிமாற்றப் பதிலிடு பெயர்கள் (Reciprocal pronouns) எனப்படும்.
இது எப்போதும் பன்மையிலேயே வரும்.
சான்று:
அவர்கள் தங்களுக்குள் அடித்துக்
கொண்டார்கள்
அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டார்கள்
அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொண்டார்கள்
இத்தொடர்களில் தங்களுக்குள்,
ஒருவரை ஒருவர், ஒருவருக்கு ஒருவர் என்பன பரிமாற்றப் பதிலிடு
பெயர்கள் ஆகும்.
1.5.8 முழுமைப்
பதிலிடு பெயர்கள்
முழுமையைக் குறித்து வரும் பதிலிடு பெயர்கள் முழுமைப்
பதிலிடு பெயர்கள் (Pronouns of totality) எனப்படும். தமிழில்
எல்லாரும், அனைவரும், எல்லாம், அனைத்தும்
என்பன முழுமைப் பதிலிடு பெயர்களாகப் பயன்படுகின்றன.
சான்று :
எல்லாரும் வந்தார்கள்
அனைவரும் வந்தார்கள்
மக்கள் எல்லாரும் வந்தார்கள்
எல்லாம் வந்தன
அனைத்தும் வந்தன
எல்லா மாடுகளும் வந்தன.
1.5.9 உடைமைப் பதிலிடு
பெயர்கள்
உடைமையைக் காட்டும் பதிலிடு பெயர்களே
உடைமைப் பதிலிடு பெயர்கள் (Possessive
pronouns) எனப்படும். பல்வேறு பதிலிடு பெயர்களுடன் உடைய
என்ற சொல் இணைய, அதனுடன் அது, அவை, அவன், அவள், அவர் போன்ற பெயர்களை
இணைக்கும்போது உடைமைப் பதிலிடு பெயர்கள் உருவாகின்றன.
சான்று :
என் + உடைய + அவள் = என்னுடையவள்
உன் + உடைய + அவள் = உன்னுடையவள்
அவன் + உடைய + அவள் = அவனுடையவள்
யார் + உடைய + அது = யாருடையது
அவள் + உடைய + அவை = அவளுடையவை