திராவிட மொழிகளில் வேற்றுமைப்பொருள்
அனைத்தும் வேற்றுமை உருபு (Case suffix) மற்றும் சொல்லுருபுகளாலேயே (postpositions)
உணர்த்தப்படுகின்றன.
வேற்றுமை
உருபு மற்றும் பொருள் என்றால் என்ன?
ஒரு சொற்றொடரில் பெயர்ச்சொல்லுக்கு
வினைச்சொல்லோடு உள்ள பொருள் தொடர்பை வேற்றுமைப்பொருள்
என்றும் அப்பொருள் தொடர்பை உண்டுபண்ணும் உருபை
வேற்றுமை உருபு என்றும் கூறுவர்.
சான்று
:
‘குமார் இராமனைப் (இராமன்+ஐ)
பார்த்தான்.’
சொல்லுருபு
என்றால் என்ன?
ஒரு சொற்றொடரில் பெயர்ச்சொல்லுக்கு
வினைச்சொல்லோடு உள்ள பொருள்தொடர்பினைத் தனி ஒரு சொல்லாக நின்று விளக்கும்
சொல் சொல்லுருபு எனப்படும்.
சான்று
:
‘குமார் வீடு வரை
ஓடினான்.’
இச்சொற்றொடரில்
வரை எனும் சொல் ஏழாம் வேற்றுமைக்கான இட வேற்றுமைப்பொருளைத் தனி
ஒரு சொல்லாக நின்று உணர்த்துகிறது.
3.1.1 வேற்றுமை உருபும் சொல்லுருபும்
வேற்றுமை உருபும் சொல்லுருபும்
ஒரே வேலையைச் செய்கின்றன. இரண்டுமே பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும்
உள்ள பொருள் தொடர்பினை விளக்குமுகமாக அமைந்து வருகின்றன.
3.1.2 வேற்றுமை உருபிற்கும் சொல்லுருபிற்கும் உள்ள வேறுபாடு
1. வேற்றுமை உருபு பெயர்ச்சொல்லுக்கு
இறுதியில் வரும். சொல்லுருபோ
அவ்வாறு வருவது கிடையாது;
பெயர்ச்சொல்லை அடுத்து ஒரு தனிச்சொல்லாக வரும்.
சான்று:
குமார் இராமனைப்
பார்த்தான் (ஐ - வேற்றுமை உருபு)
குமார் வீடு வரை
ஓடினான் (வரை - சொல்லுருபு)
2. வேற்றுமை உருபு ஒரு உருபாக
இருப்பதால் அதனுடன் இன்னொரு வேற்றுமை உருபு சேருவதில்லை. ஆனால் சொல்லுருபு
தனித்த ஒரு சொல்லாக நின்று வருகிறது. எனவே அது இன்னொரு வேற்றுமை உருபினை
ஏற்கிறது.
சான்று
:
வரை
- வரையில்
அகம் - அகத்தொடு, அகத்தில்
வரை, அகம் என்பன சொல்லுருபுகள்.
இச்சொல்லுருபுகள் இல், ஒடு என்னும் மற்ற வேற்றுமை உருபுகளை ஏற்கின்றன.
3. வேற்றுமை உருபு சாரியையை
அடுத்து வருகிறது.
சான்று:
மரம் + ஐ = மரத்தை (மரம் + அத்து + ஐ)
இங்கு ‘அத்து’ என்னும் சாரியையை
அடுத்து ஐ என்னும் வேற்றுமை உருபு
வந்துள்ளது. ஆனால் சொல்லுருபு தனித்து வருவதால் சாரியையை அடுத்து வருவது
கிடையாது.
3.1.3 சொல்லுருபின் சிறப்பு
சொல்லுருபின்
சிறப்பு என்னவென்றால் மூன்றாம்
வேற்றுமைக்கும் நான்காம்
வேற்றுமைக்கும், ஆறாம் வேற்றுமைக்கும் ஏழாம்
வேற்றுமைக்கும் உரிய வேற்றுமைப்பொருள்களை உணர்த்தி வருவதாகும். தற்காலத்
தமிழில் சொல்லுருபு குறிப்புப்பொருள் உணர்த்தி வருவதையும் காணமுடிகிறது.
சான்று
:
‘இராமன் அவனைப் பற்றிப்
பேசினான்.’
இங்கு பற்றி
என்பது குறிப்புப் பொருள் உணர்த்துகிறது. |