வேற்றுமைப் பொருள்களை உணர்த்த உலக மொழிகளில் பல முறைகள் கையாளப்படுகின்றன.
அவை வருமாறு.
(1) வேற்றுமை உருபால் உணர்த்துதல் ( Case Suffix)
(2) சொல்லுருபால் உணர்த்துதல் (Postposition)
(3) முன்னுருபால் உணர்த்துதல் (Preposition)
3.2.1 வேற்றுமை உருபால் உணர்த்துதல்
வேற்றுமைப் பொருளை உணர்த்த
வேற்றுமை உருபினைப் பெயரோடு இணைக்கும் வழக்கமே தமிழின்கண் மிகுதியாக உள்ளது.
சான்று
:
‘குமார் இராமனைப் பார்த்தான்.’
இங்கு இராமன் என்னும் பெயருடன்
ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு (Accusative
case marker) இணைந்து யார் யாரைப் பார்த்தார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது.
3.2.2
சொல்லுருபால் உணர்த்துதல்
சில சமயங்களில் வேற்றுமை
உருபின் பணியை ஒரு தனிச்சொல் நின்று செய்வதையும் தமிழில் காணமுடிகிறது. அவ்வாறு
அமைந்து வேற்றுமைப்பொருளை அச்சொல் உணர்த்துவதால் அதனைச் சொல்லுருபு
என்று மொழியியலார் குறிப்பிட்டனர். சொல்லுருபு என்பதற்கு ‘உருபின் பணியைச்
செய்யும் சொல்’ என்றோ, ‘சொல்லாக நின்று உருபாகப் பயன்படும் ஒன்று’ என்றோ
பொருள் கொள்ளலாம்.
சான்று
:
‘குமார் கத்தியால் வெட்டினான்.’
இங்கு ஆல்
என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு தனக்குரிய கருவிப் பொருளை உணர்த்தி
நிற்கிறது. அதுபோலவே,
‘குமார் கத்தி கொண்டு வெட்டினான்.’
இச்சொற்றொடரில் கொண்டு
என்னும் சொல் மூன்றாம் வேற்றுமை உருபாகிய (Instrumental case marker)
ஆல் உணர்த்திய அதே கருவிப்பொருளை உணர்த்துகிறது.
ஒரு காலத்தில் கொண்டு என்ற வினைச்சொல்
தன் இயல்புப்பொருள் உணர்த்தும் தன்மை கெட்டு இன்றையளவில் சொல்லுருபாக நின்று
பொருள் உணர்த்துகிறது.
3.2.3 முன்னுருபால் உணர்த்துதல்
ஆங்கிலம் போன்ற மொழிகளில்
முன்னுருபுகளின் ஆட்சியைக் காண முடிகிறது. தமிழில் ‘அவன் கத்தியால் (கத்தி
+ ஆல்) குத்தினான்’ என வரும் சொற்றொடரில் கத்தி
என்ற பெயருக்குப் பின் ஆல் என்னும்
வேற்றுமை உருபு வந்து பொருள் உணர்த்துவதை ஆங்கிலத்தில் ‘He stabbed with
knife’ எனக் கூறுகின்றனர். இங்கு knife
என்ற பெயருக்கு முன் with எனும்
முன்னுருபு (preposition) வந்து பொருள் தருகிறது.
தமிழில் முன்னுருபுகள் இல்லை.
எனவே முன்னுருபால் வேற்றுமைப் பொருள் உணர்த்தும் முறை தமிழில் இல்லை.
|