3.5
தற்காலத்தில் சொல்லுருபுகள்
சங்ககாலத்திலும் இடைக்காலத்திலும் இல்லாத அளவிற்குத் தற்காலத்தில் தமிழ்மொழியில் சொல்லுருபைப் பொறுத்தவரையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது எனலாம். எவ்வாறு எனில் 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியத் தமிழ் அறிஞர்கள் தொடர்பினாலும் 20ஆம் நூற்றாண்டில் நவீன மொழியியல் கோட்பாடுகளின் வளர்ச்சியினாலும் தமிழ் இலக்கணச் சிந்தனையிலும் இலக்கண ஆராய்ச்சியிலும் பெரிய முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டன. சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொல்லுருபுகள் தற்காலத்தில் வழக்கு ஒழிந்துவிட்டன எனலாம். எடுத்துக்காட்டு : கால், வயின், சார், புடை, முதல், அளை, உழி, உளி இதற்குக் காரணம் தற்காலத்தமிழ் வளர்ந்ததே ஆகும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பழைய மரபுவழி இலக்கண ஆசிரியர்கள் தமிழ்மொழியை இரண்டு பெரும்பிரிவுகளாகப் (பெயர், வினை) பிரித்தார்கள். அதன்பின்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலானார்கள். அவையாவன : (1) பெயர்ச்சொல் இவற்றுள் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் முதல் வகை என்றும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இரண்டாம் வகை என்றும் பிரித்துப் பார்த்தனர். அக்காலத்தமிழை இந்த நான்கு பாகுபாட்டிற்குள்ளேயே அடக்கி விடலாம். ஆனால் தற்காலத்தில் அவ்வாறான பாகுபாட்டை வைத்துச் சொல்லை ஆராய்வது கடினமாக இருந்தது. ஆகையினால் ஆங்கில மொழி இலக்கணப் பாகுபாட்டைப் போலத் தமிழ்ச்சொல்லையும் எட்டு வகையாகப் பிரிக்கலானார்கள். அவையாவன : (1) பெயர்ச்சொல் (Noun) (2) வினைச்சொல் (Verb) (3) சொல்லுருபு (postposition) (4) பெயரடை (Adjective) (5) வினையடை (Adverb) (6) அளவையடை (Quantifier) (7) அடைகொளி அடை (Determiner) (8) இணைப்புக் கிளவி (Conjunction) என்பன. இவ்வாறு பிரிப்பதில் அறிஞர்களுக்கிடையே சிறு சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன. இங்கு மூன்றாவதாகக் கூறப்பட்ட சொல்லுருபு (postposition) என்பதை ஆங்கில மொழியில் முன்னுருபு (preposition) என்று பிரித்துள்ளனர். ஏனெனில் ஆங்கில மொழியின் அமைப்பு அவ்வாறு இருக்கிறது என்பதை முன்பே கண்டோம். தற்காலத்தில் நவீன மொழியியல் கோட்பாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் சொல்லுருபுகளை ஆராய்ந்து பார்க்கும்போது தமிழில் ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட சொல்லுருபுகள் பயன்பாட்டில் இருந்து வருவது தெரிகிறது. அவற்றுள் சில சொல்லுருபுகளைச் சான்றுகளுடன் காண்போம். சான்று : ‘குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான்.’ இச்சொற்றொடரில் மூலம் எனும் பெயர், சொல்லுருபாக நின்று கருவிப் பொருளை உணர்த்துகிறது. இதனை வேறொரு விதமாகக் கூறவேண்டுமென்றால், ‘குமார் சாவியால் (சாவி+ஆல்) கதவைத் திறந்தான்’ எனலாம். ‘குமார் வீடு வரை ஓடினான்.’ இச்சொற்றொடரில் வரை எனும் சொல் சொல்லுருபாகப் பயன்படுகிறது. அந்த வரை எனும் சொல்லுருபு திரிபு அடைந்து வரைக்கும், வரையில் என்றெல்லாம் பயன்பாட்டில் வருகிறது. ‘குமார் வீடு வரைக்கும் ஓடினான்.’ ‘குமார் வீடு வரையில் ஓடினான்.’ வரை என்பது எவ்வாறு அமைந்து வந்தாலும் இடவேற்றுமைப் பொருளை உணர்த்துவதைக் காணலாம். அதுபோன்றே இன்னொரு வகையில் இடவேற்றுமைப் பொருளை உணர்த்தும் முறை காணப்படுகின்றது. சான்று : ‘குமார் வீட்டுப்பக்கம் ஒரு மரம் இருக்கிறது.’ ‘குமார் வீட்டுக்கிட்ட ஒரு மரம் இருக்கிறது.’ ‘குமார் வீட்டு அருகில் ஒரு மரம் இருக்கிறது.’ என்றெல்லாம் பக்கம், கிட்ட, அருகில் என்னும் சொல்லுருபுகளைப் பயன்படுத்தி இடவேற்றுமைப்பொருளை (locative case) உணர்த்துவதைக் காணலாம். மேலே குறிப்பிட்ட சொல்லுருபுகள் பெயர்ச்சொல்லைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டவையாகும். இனி நாம் காண இருப்பவை வினைச் சொல்லிலிருந்து உருவாகும் சொல்லுருபுகள் பற்றி ஆகும். சான்று : ‘குமார் இராமனைப் பார்த்துப் பேசினான்.’ ‘குமார் இராமனை நோக்கிப் பேசினான்.’ இச்சொற்றொடர்களில் அமைந்து வரும் பார்த்து, நோக்கி என்ற சொல்லுருபுகள் பார், நோக்கு என்ற வினைச்சொற்களிலிருந்து வந்தவையாகும். அச்சொல்லுருபுகள் திசையைச் (direction) சுட்டுவனவாக அமைந்துள்ளன. அடுத்து வேறுவகையான பொருளை உணர்த்தப் பயன்படும் சொல்லுருபுகள் பற்றிப் பார்ப்போம். சான்று : ‘குமாரைத் தவிர வேறு யாரும் வரவில்லை.’ இச்சொற்றொடரில் தவிர என்ற சொல்லுருபு வந்து விதிவிலக்கு (exception) என்னும் பொருளை உணர்த்துவதைக் காணமுடிகிறது. இறுதியாக, குறிப்புப்பொருளை உணர்த்தப் பயன்படும் சொல்லுருபுகளைப் பற்றிக் காண்போம். சான்று : ‘குமார் மொழியியலைப் பற்றிப் பேசினான்.’ ‘குமார் மொழியியலைக் குறித்துப் பேசினான்.’ இச்சொற்றொடர்களில் வரும் பற்றி, குறித்து என்ற சொல்லுருபுகள் குறிப்புப் பொருளை உணர்த்தலாயின. இவை போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சொல்லுருபுகள் தற்காலத் தமிழ்மொழியில் அமைந்து வருவதைக் காணமுடிகிறது. |