மொழிக்கு இன்றியமையாத உறுப்பு வினைச்சொல்லே ஆகும்.
இது சொல் பாகுபாட்டில் பெயர்ச்சொல்லுக்கு அடுத்துக்
கூறப்பட்டுள்ளது. ஒரு பொருளைக் குறிப்பது பெயர்; அப்பொருளின்
தொழிலை அல்லது செயலைக் குறிப்பது
வினை ஆகும். எனவே
தமிழ் இலக்கண நூலாரும் மொழியியலாரும் பொருளைக் குறிக்கும்
பெயர்ச்சொல்லை முதலில் கூறி, அப்பொருளின் தொழிலைக்
குறிக்கும் வினைச்சொல்லை அடுத்துக் கூறினர்.
பெயர்ச்சொல்லின் தலைசிறந்த இலக்கணம் வேற்றுமை உருபு
ஏற்பது ஆகும். வினைச்சொல்லின் தலைசிறந்த இலக்கணம்
காலத்தைக் காட்டுவது ஆகும். வினைச்சொல் காலத்தைக் காட்டும்
சிறப்பால் தொல்காப்பியர், அச்சொல்லைக்
காலக்கிளவி (கிளவி-
சொல்) எனக் குறிப்பிடுகிறார். தமிழில் உள்ள வினைச்சொற்களில்
காலம் காட்டுவன பெரும்பாலும் இடைநிலைகள்
ஆகும். இவை
வினைப்பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம்
காட்டுகின்றன. எனவே, இவற்றைக் கால இடைநிலைகள்
என்று
குறிப்பிடுவர்.
தமிழில் உள்ள வினைச்சொற்களில் இறந்தகாலம், நிகழ்காலம்,
எதிர்காலம் என்னும் மூன்று காலத்தைத் தனித்தனியே
காட்டுவதற்குப் பல இடைநிலைகள் வழங்கியுள்ளன.
சங்க காலத்தில் வழங்கிய கால இடைநிலைகள் பற்றியும்
இடைக்காலத்தில் அவை வழங்கிய முறை, புதிய கால
இடைநிலைகளின் வரவு பற்றியும் தற்காலத்தில் வழங்கும் கால
இடைநிலைகள் பற்றியும் இப்பாடத்தில் விரிவாக விளக்கிக்
கூறப்படுகின்றன.
|