4.3 இடைக்காலத்தில் கால இடைநிலைகள்

    தொல்காப்பியர் வினைச்சொல் காலம் காட்டும் என்று கூறினார். இடையியலில் வினைச்சொற்களில் காலம் காட்டி வரும் உருபுகளை இடைச்சொற்களின் ஒரு வகையாகக் குறிப்பிட்டார். ஆனால் காலம் காட்டி வரும் உருபுகள் (இடைநிலைகள்) இன்னின்ன என்று கூறினாரில்லை. ஆனால் காலம் மூவகை எனக் குறிப்பிடுகிறார்.

    சான்று:

    காலம் தாமே மூன்றுஎன மொழிப (தொல்.சொல், 199)

    இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
     அம் முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும்
             (தொல். சொல், 200)

    ஆனால் இடைக்காலத்தில் தோன்றிய நன்னூலார் காலம் காட்டும் இடைநிலைகள் இன்னின்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுக் கூறுகிறார். அவர் நன்னூலில் பின்வருமாறு கால இடைநிலைகளைக் குறிப்பிடுகிறார் (நன்னூல், 142-144).

    -த்-, -ட்-, -ற்-, -இன்-     இறந்தகால இடைநிலைகள்

    -கிறு-, -கின்று-, -ஆநின்று- நிகழ்கால இடைநிலைகள்

    -ப்-, -வ்-         எதிர்கால இடைநிலைகள்

4.3.1 இறந்தகாலம்

    சங்க காலத்தில் இறந்தகால இடைநிலையாக வழங்கிய -இன்- என்பது இடைக்காலத்திலும் வழங்கியது. ஆனால் பல இடங்களில் -இன்- என்பதில் உள்ள இகரம் கெட்டு னகர மெய் மட்டும் நின்று இறந்தகாலம் காட்டுகிறது. இது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

    சான்று:

    போனார்     (மணிமேகலை, 16:100)

    போனால்     (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்,
         2270:4)

    சொன்னான்     (சீவகசிந்தாமணி)

    மற்றபடி சங்ககாலத்தில் வழங்கிய -த்-, -ட்-, -ற்-, -இன்- என்பனவே இடைக்காலத்தில் வழங்கி வந்தன.

4.3.2 நிகழ்காலம்

    இடைக்காலத்தில் எழுந்த எல்லா நூல்களிலும் -கின்று- என்னும் நிகழ்கால இடைநிலை வழங்கலாயிற்று.

    சான்று:

     நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
         (நாலாயிர திவ்வியப் பிரபந்தம், 3301:2)

    அண்ணலார் ஆடுகின்ற அலங்காரமே
        

(தேவாரம் 2ஆம் திருமுறை, 1576)

    -கின்று-என்ற நிகழ்கால இடைநிலையின் மாற்றுருபான - கிறு- என்பதும் இடைக்காலத்தில் வழக்கிற்கு வரத்தொடங்கியது.

    சான்று:

    சாதிக்கிறநீர் அவயவமாய் உள்ள
             (மணிமேகலை, 29:299)

    அதுபோன்றே -கின்று-க்கான இன்னும் ஒரு மாற்றுருபு - ஆநின்று- என்பதாகும்.

    சான்று:

    துறைவன் துறந்தனம் தூற்றா கொல்முன்கை
இறையிறவா நின்ற வளை     (திருக்குறள், 1157)

    எனவே இடைக்காலத்தில் -கின்று-, -கிறு-, -ஆநின்று- என்பன நிகழ்காலம் காட்டும் இடைநிலைகளாக வழங்கின. இவற்றுள் -ஆநின்று- என்பது காலப்போக்கில் வழக்கு ஒழிந்தது.

4.3.3 எதிர்காலம்

    சங்ககாலத்தில் இருந்ததுபோலவே, எதிர்காலம் காட்டும் இடைநிலைகள் இடைக்காலத்திலும் வழங்கி வந்தன.

    -ப்-, -வ்-, -க்- ஆகியன எதிர்கால இடைநிலைகளாக வழங்கின. இவற்றுள் ககரம் சங்ககாலத்தைக் காட்டிலும் மிகுதியாக வழங்கிவந்தது.

    சான்று:

    களைகேன் (சிலம்பு, 15:68)

    செய்கேன் (மணிமேகலை, 16:36)