5.2 சங்க காலத்தில் துணைவினைகள்

     சங்க கால இலக்கியங்களில் துணைவினைகளின் ஆதிக்கம் அவ்வளவாக இல்லை. எவ்வாறு எனில் தற்காலத் தமிழில் வழக்கிலுள்ள துணைவினைகளை விட அதிக எண்ணிக்கையில் இல்லை என்று சொல்லலாம். சங்க கால இலக்கியங்களில் காணப்படுகின்ற துணைவினைகள்,

     விடு, கொள், இரு, படு, செய், பண்ணு,

     வேண்டு, வேண்டா, ஈ, அருள்

என்பன ஆகும். இவற்றின் வரவும் சங்க கால இலக்கியங்களில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இத்துணைவினைகள் சங்க இலக்கியங்களிலும் பெரும்பாலும் செய்து மற்றும் செய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களை அடுத்தே வருவது காணலாம். இனிச் சங்ககால இலக்கியங்களில் துணைவினைகளின்     ஆட்சியைச் சான்றுகளுடன் காண்போம்.

சான்று :

விடு

விதிர்த்து
விட்டன்ன அம்நுண் சுணங்கின் (நற்றிணை, 160:5)

(விதிர்த்துவிட்டு = அள்ளித் தெளித்துவிட்டால்)

கொள்

இந்நோய் நோன்று
கொளற்கு அரிதே (குறுந்தொகை. 58:6)

(இந்நோய் = இக்காம நோய் ;நோன்று கொளற்கு = பொறுத்துக்
கொள்வதற்கு)

இரு

     இந்த இரு என்னும் சொல் துணைவினையாக ஒரே ஒரு இடத்தில் மட்டும் வரக் காண்கிறோம்.

. . . . . . . . . . . . . . யாம் பிறர்
செய்புறம் நோக்கி இருத்துமோ? (கலித்தொகை, 111 : 16:17)

(நோக்கி இருத்துமோ = பார்த்து இருப்போமோ?)

படு

நோக்கவும் படுபவ னோப்பவும் படுமே (ஐங்குறுநூறு, 290:2)

(நோக்கவும்படும் = பார்க்கவும்படும்
;ஓப்பவும் படும் = விரட்டி
ஓட்டவும் படும்)
.

செய்

கதழ்பரி நெடுந்தேர் வரவாண்டு அழுங்கச்

செய்த தன் தப்பல் அன்றியும் (நற்றிணை, 203.9)

(அழுங்கச் செய்த = வருந்தச் செய்த)

பண்ணு

தொன்னிலை முழுமுதல் துமியப் பண்ணிப் (அகநானூறு, 45:9)

(துமியப் பண்ணி = வெட்டச் செய்து)

அம்சில் ஓதியை வரக் கரைந்து மோ (ஐங்குறுநூறு, 391:6)

(அம்சில் ஓதி = அழகிய சிலவாகிய கூந்தலை உடைய தலைவியை
;
கரைந்து ஈமோ = (காக்கையே ! கரைந்து அருளவேண்டும்).

அருள்

அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி (அகநானூறு
, 98;26)

(அறிவர் = தலைவர் ;
உறுவிய = செய்வித்த ;அல்லல் = துன்பம்
;கண்டு அருளி = பார்த்து அருளுதலின்).

வேண்டா

நில்லா உலகத்து நிலையா மைநீ
சொல்ல வேண்டா . . . . .. (புறநானூறு, 361:20)

(சொல்ல வேண்டா = சொல்ல வேண்டாம்).

     சங்க இலக்கியங்களில் துணைவினைகளின் வரவு மிக அரிதாகக் காணப்பட்டது என்று பார்த்தோம். அவ்வாறு அரிதாக வரும் துணைவினைகளுள் வேண்டும், வேண்டா போன்றவை எச்சங்களுடன் வருவதைக் காட்டிலும் தொழிற்பெயருடன் வருவதே மிகுதியாக இருந்தது.

சான்று :

பொருள்வயின் பிரிதல்
வேண்டும் (கலித்தொகை, 21:4)

(பிரிதல் - தொழிற்பெயர்)

மாலை வருதல்
வேண்டும் (அகநானூறு, 142:12)

(வருதல் - தொழிற்பெயர்)

நாடினர் கொயல்
வேண்டா (கலித்தொகை, 28:2)

(கொயல் - கொய்தல் ; தொழிற்பெயர்)