6.3 பெயரடை, வினையடைகள் பற்றி இலக்கண நூலார் கருத்து

    பழைய இலக்கண ஆசிரியர்கள் பெயரடை, வினையடை ஆகியவற்றைத் தனித்தனி வகையாகக் கருதவில்லை. இருப்பினும் அவர்கள் பெயரடை வினையடை பற்றிக் கூறாமல் இல்லை. பெயரடை, வினையடை என்னும் பெயர்களால் குறிப்பிடவில்லை என்றாலும் இவற்றை முறையே குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற பெயர்களால் பழங்காலந் தொட்டே குறிப்பிட்டு வந்துள்ளனர்.

    நன்னூலார் வினைச்சொற்களைத் தெரிநிலை வினைச்சொல், குறிப்பு வினைச்சொல் என இரண்டாகப் பிரித்து, அவை இரண்டும் வினைமுற்றாகவும் பெயரெச்சமாகவும், வினையெச்சமாகவும் வரும் என்கிறார்.

    அவைதாம்
     முற்றும் பெயர்வினை எச்சமும் ஆகி
     ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும்
             (நன்னூல். 322)

    எனவே நன்னூலார் கருத்துப்படி பெயரெச்சம் என்பது தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும். அதேபோல வினையெச்சம் என்பது தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். இவற்றைச் சான்றுகளுடன் விளக்கிக் காண்போம்.

    தெரிநிலைப் பெயரெச்சம்

    ஒரு செயல் அல்லது தொழிலை உணர்த்தும் ஒரு வினை அடிச் சொல்லிலிருந்து தோன்றி, முக்காலம் காட்டும் இடைநிலைகளுள் ஒன்றனைப் பெற்று, பெயரெச்ச விகுதியாகிய என்பதோடு சேர்ந்து வருவது தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

    வினை அடிச்சொல்     - செய்

    இறந்தகால இடைநிலை -     த்

    பெயரெச்ச விகுதி     -

    தெரிநிலைப் பெயரெச்சம் - செய் + த் + அ = செய்த

    இத்தெரிநிலைப் பெயரெச்சம் ஒரு பெயரைக் கொண்டு முடியும்.

    செய்த பையன்

  • குறிப்புப் பெயரெச்சம்

    ஒரு பண்பை உணர்த்தும் அடிச்சொல்லோடு பெயரெச்ச விகுதியாகிய என்பது சேர்ந்து வருவது குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

    பண்பு அடிச்சொல் - நல்

    பெயரெச்ச விகுதி     -

    குறிப்புப் பெயரெச்சம் - நல் + அ = நல்ல

    இக்குறிப்புப் பெயரெச்சம் காலம் காட்டாது ; தன்னை ஏற்கும் பெயரைச் சிறப்பிக்கும் அடையாக வரும்.

    நல்ல பையன்

    இவ்வாறு பெயரைச் சிறப்பிக்கும் அடையாக (நல்ல) வருவதால், குறிப்புப் பெயரெச்சம் என்று தமிழிலக்கண நூலார் கூறிய அதனை, இக்கால மொழியியலார் பெயரடை (Adjective) என்று குறிப்பிடுவது மிகப் பொருத்தமே எனலாம்.

  • தெரிநிலை வினையெச்சம்

    ஒரு செயல் அல்லது தொழிலை உணர்த்தும் ஒரு வினை அடிச் சொல்லிலிருந்து தோன்றி, முக்காலம் காட்டும் இடைநிலைகளுள் ஒன்றனைப் பெற்று, வினையெச்ச விகுதிகளாகிய அ, உ என்பனவற்றோடு சேர்ந்து வருவது தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

    வினை அடிச்சொல்     - செய்

    இறந்தகால இடைநிலை -     த்

    வினையெச்ச விகுதி     -

    தெரிநிலை வினையெச்சம் - செய் + த் + உ = செய்து

    இத்தெரிநிலை வினையெச்சம் ஒரு வினையைக் கொண்டு முடியும்.

     செய்து வந்தான்

  • குறிப்பு வினையெச்சம்

    ஒரு பண்பை உணர்த்தும் அடிச்சொல்லோடு, வினையெச்ச விகுதிகளாகிய அ, உ என்பன சேர்ந்து வருவது குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

    பண்பு அடிச்சொல்     - மெல்

    வினையெச்ச விகுதி -

    குறிப்பு வினையெச்சம் - மெல் + அ = மெல்ல

    இக்குறிப்பு வினையெச்சம் காலம் காட்டாது, தன்னை ஏற்கும் வினைச்சொல்லைச் சிறப்பிக்கும் அடையாக வரும்.

    மெல்ல வந்தான்

    இவ்வாறு வினைச்சொல்லைச் சிறப்பிக்க வரும் அடையாக (மெல்ல) வருவதால், குறிப்புப் பெயரெச்சம் என்று தமிழ் இலக்கண நூலார் கூறிய அதனை, இக்கால மொழியியலார் வினையடை (Adverb) என்ற பெயரால் குறிப்பிடுவது மிகப் பொருத்தமே எனலாம்.

    தமிழிலக்கண நூலார் பெயரடை, வினையடை ஆகியவற்றை முறையே குறிப்புப் பெயரெச்சம், குறிப்பு வினையெச்சம் என்ற பெயர்கள் இட்டுக் கூறினாலும், அவை இரண்டையும் இக்கால மொழியியலார் பலவாறு வகைப்படுத்தி விளக்குவது போல விளக்கினார்கள் இல்லை. இக்கால மொழியியலார் பெயரடை, வினையடை இரண்டையும் பலவாறு வகைப்படுத்தி விளக்கிக் காட்டியுள்ளனர்.

    இனி முதற்கண் பெயரடைகளின் வளர்ச்சி வரலாற்றினைப் பற்றிக் காண்போம்.