|     
        2.2 உண்மை நிபந்தனைக் கோட்பாடும் பிறகோட்பாடுகளும்  
       
       ஒரு வாக்கியத்தின் பொருளை 
        விவரிப்பதற்கு அவ்வாக்கியம் உண்மையானது என்பதற்கான நிபந்தனைகனை விவரித்தாக 
        வேண்டும் என்பதுவே தார்ஸ்கி (Tarski) வகுத்த இக்கோட்பாடு எனலாம். 
      
       
       எ.கா: 
      
           
        (அ) காகம் கருப்பு 
       
      
      என்ற வாக்கியம் பொருளுடையதானால் 
        உண்மையில் காகம் கருப்பு நிறமாயிருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. 
       
           
        (ஆ) கண்ணன் புலியைக் கொன்றான் 
       
      
      இது உண்மை எனக் கருதப்படுவதற்குப் 
        புலியைக் கொல்லக் கண்ணன் எதையோ செய்தான் என்ற போதுமான நிபந்தனையும் தேவை. 
         
       இக்கோட்பாட்டின்படி உண்மை 
        என்பது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது. 
           
         (i) பகுப்பாய்வு உண்மை (Analytical truth) 
          
      
      
       எ.கா:  
           
        (அ) வேலன் படித்தவனாயிருந்தால், அவனால் புத்தகம் 
             படிக்க முடியும். 
           
        (ஆ) அவன் மணமானவன் எனில், ஒரு பெண்ணைக்      
        மணந்திருப்பான். 
           
        (இ) அவள் விதவை எனில், கணவனை இழந்தவள். 
       
      
       
      இவ்வாக்கியங்களின் இரு பகுதிகளிலும் 
        இயக்கம் காட்டும் பொருள் விதிகளால்     இவ்வாக்கியங்களின்     
        உண்மைத்     தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. 
           
         (ii) தற்செயலான உண்மை (contingent truth) 
      
       எ.கா: 
           
        வேலன் ஒரு தலைமுடி கூட இல்லாதவன், ஆனால்      
        வழுக்கையல்லன்.  
      
      இது, பகுப்பாய்வின் அடிப்படையில் 
        பொய்யானது. ஆனால், பொய்முடி (wig) வைத்திருப்பதால் வழுக்கையல்லன் என்ற சூழ்நிலை 
        கொண்டு மெய் எனலாம். தலைமுடியில்லாதவன் வழுக்கையன். தலைமுடியோடு காட்சி தருபவனைப்பற்றிய 
        உண்மையைக் கூற இவ்வாறு சொல்ல வேண்டியிருக்கிறது. 
        (iii) 
        தர்க்க உண்மை (logical truth) 
       
       எ.கா: 
           
        மனிதர் அனைவரும் மாண்டுபோவார் 
           
        சாக்ரடீஸ் ஒரு மனிதர் ; எனவே சாக்ரடீஸ் மாள்வார். 
          
      
       
      தர்க்க ரீதியிலான முதல் வாக்கியத்தின் 
        அடிப்படையில் சாக்ரடீஸ் மாள்வார்     என்ற     
        வாக்கியத்தின்     தர்க்க     உண்மை 
        உறுதிப்படுத்தப்படுகிறது. 
      உடன்பாட்டு வாக்கியங்களின் 
        பொருளை உணர்த்தவும் விளக்கவும் பயன்படும் உண்மை நிபந்தனைக் கோட்பாடானது, 
        வினா, ஆணை, கூற்று ஆகிய வாக்கியங்களின் பொருளை விளக்க இயலாது என்ற குறைபாட்டினை 
        உடையது. இக் குறைபாட்டினை நீக்கும் வகையில் பேச்சு - செயல் கோட்பாடு எழுந்தது. 
         
        
        2.2.1 பேச்சு - செயல் கோட்பாடு (Speech Act Theory) 
       
      பயன்பாட்டுக் கோட்பாட்டைத் 
        (use theory) தழுவி உருவான கோட்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். உண்மை நிபந்தனைக் 
        கோட்பாட்டின் குறைபாட்டை நீக்கவந்த இக்கோட்பாடானது ஒரு வாக்கியத்தின் பொருளைப் 
        பின்வரும் ஏழு கூறுகளுடன் தொடர்புபடுத்தவல்லது 
        
        (i) 
          வாக்கியத்தின் 
        பயன்பாடு (use) 
            
      
      
       வாக்கியத்தின் பொருளானது, 
        அதன் பயன்பாட்டில் காணப்படும் ஒன்று என்பதனை ஏற்கெனவே விவரித்துள்ளோம். சூழ்நிலை 
        அடிப்படையில் பொருள் உணர்த்தப்படுகிறது என்பது தெளிந்த உண்மை. பயன்பாட்டில் 
        குறிப்புப் பயன்பாடு (referential use), சூழ்நிலைப் பயன்பாடு (contextual 
        use) ஆகியனவும் அடங்கும். 
       
       (ii) 
          வாக்கியத்தின் 
        நுட்பப் பயன்பாடு (technical use) 
       எ.கா : 
       அது ரோசாப்பூ 
        - ‘பூ’ பெயர்ச்சொல் 
       ரோசா பூத்தது 
        - ‘பூ’ வினைச்சொல் 
        
      
       
      இத்தகைய பயன்பாட்டை நுட்பப் 
        பயன்பாடாகக் கொள்வதில் இடர்ப்பாடு உண்டு. 
       
       (iii) 
          வாக்கியத்தின் 
        பேச்சு - செயல் பயன்பாடு (Speech      
        act use of a sentence) 
          
      
       
       ஒரு வாக்கியமானது பேச்சு 
        - செயல்களுக்குப் பயன்படும்போது நுட்பப் பயன்பாடு கொண்டது என்பது புலனாகிறது. 
        வெறும் உச்சரிப்புச் சொல் 
        (locutionary act), உணர்த்து உச்சரிப்புச் செயல் (illocutionary act), விளைவு 
        உச்சரிப்புச் செயல் (perlocutionary act) எனும் மூவகைப் பேச்சுச் செயல்களையும் 
        நடத்துவதற்கு வாக்கியம் மிகவும் பயன்படுகிறது. மொழி, பேசுவோர், கேட்போர் 
        என்பனவற்றின் அடிப்படையில் இம்மூன்று செயல்களும் நிகழ்கின்றன. பேசுபவரையே 
        இவை மூன்றும் சார்ந்துள்ளன என்பது சுட்டத்தக்கது. வாக்கியத்தை வாயிலிருந்து 
        வெளிப்படுத்துவது வெறும் உச்சரிப்புச் செயலாகும். தமது மனநிலையை உணர்த்துவது 
        உச்சரிப்புச் செயல். கேட்பவர் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவது விளைவு 
        உச்சரிப்புச் செயலாகும். 
       
       (iv) 
          வாக்கியத்தின் 
        உணர்த்து உச்சரிப்புப் பயன்பாடு              
        (illocutionary act use) 
       
        விளைவினை எதிர்பார்க்காமல் 
        நிகழ்த்துவது உணர்த்து உச்சரிப்புச்     செயலாகும்.     
        வாக்கியத்தின்     பொருளை உறுதிப்படுத்துவதில் இதற்கு 
        முழுப் பங்குண்டு. குறிப்பாகவோ வெளிப்படையாகவோ வாக்கியத்தின் உதவியினால் 
        இந்தச் செயலை நிகழ்த்தலாம். 
       எ.கா: 
      
       (அ) நான் 
        செய்ததை ஒத்துக்கொள்கிறேன் 
      
       (ஆ) நாம் 
        ஊருக்குப் போகலாம் என்று நான்      
        கூறுகிறேன். 
      
        
       கூறு, வெளியிடு முதலான வினைச் சொற்கள் 
        இச்செயலைப் புலப்படுத்தி நிற்கும். இச்செயலை வெளிப்படையாக நிகழ்த்தப் பயன்படும் 
        வாக்கியங்கள் கூற்று வாக்கியங்கள் ஆகும். 
       எ.கா: 
       
      
       அங்கு 
        நான் வருவேன் என உறுதியளிக்கிறேன்  
           
        (நான் கட்டாயம் வருவேன் என்பதை உறுதிப்படுத்தும்      
        வாக்கியம் இது).  
       
       (v) 
          வாக்கியத்தின் 
        உணர்த்து தன்மை (illocutionary act      
        potential) 
       
      
       ஒவ்வொரு வாக்கியத்துக்கும் 
        உணர்த்து தன்மைகள் சில உண்டு. வாக்கியத்தின் பொருள் என்பது, வாக்கியத்தின் 
        உணர்த்து தன்மை எனலாம். அதாவது, ஒரு உணர்த்து தன்மை கொண்ட இரு வாக்கியங்களை, 
        ஒரே பொருளை உணர்த்தும் வாக்கியங்களாகக் கொள்ளலாம். 
        இரு சொற்களை இடம் மாற்றி 
        அமைத்த பின்பும் அச்சொற்கள் உள்ள வாக்கியங்களின் பொருள் மாறுபடாது இருக்குமேயானால் 
        அந்தச் சொற்களிரண்டும் ஒரே பொருள் கொண்டனவாகக் கொள்ளப்படும். 
       
       (vi) 
          வாக்கியத்தின் 
        உணர்த்து தன்மைக்குரிய தக்க  காரணங்கள் 
        (condition of illocutionary act potential) 
          
      
       
       உணர்த்து உச்சரிப்பு வாக்கியங்கள் 
        உருவாவதற்குத் தக்க காரணங்கள் இருந்தாக வேண்டும். அவை பொது, குறிப்பு என 
        இரு வகைப்படுத்தப்படும்.  
       
       எ.கா :  
      
       நான் கூட்டத்திற்கு 
        நாளை தவறாது வருவேன். 
      
       
       இவ்வாக்கியத்தின் பின்னணியை, 
        அதற்கான காரணங்களைக் கொண்டு ஆய்வோம்: 
       (அ) பேசுபவரும் கேட்பவரும் 
        ஒரு மொழி பேசுவோர்.   
        (ஆ) இது பொதுவான காரணம்.   
        (இ) பேசுபவர் கூட்டத்திற்குப் போவார்   
        (ஈ) இடையூறு இருந்தாலும் தவறாது போவார்   
        (உ) கேட்பவர் எதிர்பார்ப்பார்   
        (ஊ) பேசுபவர் கூட்டத்திற்குப் போகவில்லையெனில்      
         கேட்பவர் வருத்தப்படலாம்.  
      
      இவையனைத்தும் குறிப்பான காரணங்கள். 
      
       எனவே, வாக்கியத்தைப் பயன்படுத்தும்போது 
        பேசுபவர் கொண்டிருக்கும் உணர்த்து உச்சரிப்புச் செயலின் தக்க காரணங்களும் 
        வாக்கியத்தின் பொருள் என்றாகலாம். 
        (vii) 
           வாக்கியத்தின் 
        கொண்ட கருத்தும் (presupposition)      நிலைநாட்டல் 
        கருத்தும் (assertion) 
       உணர்த்து உச்சரிப்புச் செயலில் 
        - கொண்ட கருத்து, நிலைநாட்டல் கருத்து எனும் இரண்டு பகுதிகள் இருப்பதாகச் 
        சில மொழியியலாளரும்     தத்துவ     
        அறிஞர்களும்     கருத்துத் தெரிவிக்கின்றனர். அதாவது 
        ஒரு கருத்தை வெளியிடுதல், நிலைநாட்டல் எனும் இரண்டு செயல்களில் பேசுபவர் 
        ஈடுபடுகிறார். 
       
       எ.கா: 
       1. 
          வளவன் திருடியது 
        வானொலிப் பெட்டியை, 
       (a) கொண்ட 
        கருத்து  வளவன் 
        எதையோ திருடினான் 
       (b) நிலைநாட்டல் 
          எதை 
        வளவன் திருடினானோ அது வானொலிப் பெட்டி. 
       2. 
          வானொலிப் பெட்டியைத் 
        திருடியது வளவன். 
       (அ) கொண்ட 
        கருத்து   
        யாரோ வானொலிப்  பெட்டியைத் 
        திருடினார்கள் 
       (ஆ) நிலைநாட்டல் 
        கருத்து     
        வானொலிப் பெட்டியைத் திருடியது யாரோ அவனே வளவன். 
           
      
       
      எனவே, ஒரு வாக்கியத்தின் பொருளை 
        - கொண்ட கருத்து, நிலைநாட்டல் கருத்து எனும் இரண்டின் கூட்டாகக் கொள்ளலாம். 
        
        2.2.2 கிரைஸ் கோட்பாடு (Grice’s theory) 
       
       பேச்சு-செயல் கொள்கையில் 
        ஆஸ்டின் குறிப்பிடும் சிறப்பு நிலைமை, ஆயத்த நிலைமை, உத்தம நிலைமை என்ற மூன்று 
        நிலைமைகளின் விரிவான விளக்கமாகக் கிரைஸ் (Grice) கோட்பாடு உருப்பெற்றது. 
        பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றம்     
        நிகழும்     போது எவ்வாறெல்லாம் மொழி பயன்படுத்தப்படுகிறது 
        என்பதை விளக்குவது  பயன்வழியியல் (pragmatics). 
        இவ்வடிப்படைக் கருத்தினைப் பின்பற்றி  உரையாடல் 
        கோட்பாட்டினை  (theory of conversation) கிரைஸ் உருவாக்கினார். 
       இக்கொள்கை இரு பிரிவுகளை 
        உள்ளடக்கியது. 
      
       (i) பேசுவோர் பொருள் பற்றிய 
        விளக்கம்      (definition of speaker’s meaning) 
       (ii)  பேசுவோருக்கும் 
        கேட்போருக்கும் இடையே நிலவும்      ஒத்துழைப்பை விளக்க 
        உதவும் உரையாடல் நியதிகள்      (maxims) 
        
      ஒத்துழைப்புக் 
        கோட்பாடு (The Cooperative Principle) 
        எனவும் இது அழைக்கப்படுகிறது. 
      
       வெளிப்படுத்தும்     
        கூற்றில்     பேசுபவர்     நம்பிக்கை 
        கொண்டிருப்பதாகவும் அதன் காரணமாக, கேட்பவரும் மிகுதியான நம்பிக்கை கொள்ள 
        வேண்டும் என்கிறார் கிரைஸ். சூழலில் ஒரு கூற்றின் உண்மையும் அதைப் பயன்படுத்துவோர் 
        உணர்த்த விரும்பும் பொருண்மையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. 
        உண்மையின் அடிப்படையிலான சொற்பொருளியலின் விளக்கத்திற்கு ஏற்புடையதாக இல்லாமல் 
        முரண்பட்டதாக கிரைஸின் கோட்பாடு அமைந்திருப்பதாக ரூத் கெம்ப்சன் (Ruth M. 
        Kempson) சாடுகிறார். 
        
       எ.கா: 
       
      
       பேசுபவர் 
        : செழியன் நேற்று அலுவலகம் வந்தாரா? 
      
       கேட்பவர் 
        : மலர்விழி நேற்று அலுவலகம் வரவில்லை 
          
      
      
       இதில், பின்னது குறிப்பாக 
        உள்ளுறையாக, செழியன் வரவில்லை என்பதை உணர்த்துகிறது. இத்தகைய குறிப்பு உள்ளுறை 
        பற்றி கிரைஸ் பேசுகிறார். 
       ஒத்துழைப்புக் கொள்கையில் 
        அவர் வகுக்கும் உரையாடல் நியதிகள் பின்வருமாறு: 
       (1)  அளவு (quality) 
         
             (அ) உரையாடலில் தேவையான தகவலை மட்டும் தருக.  
             (ஆ) தேவைக்கு அதிகமாகத் தகவல் தருவதைத் தவிர்த்திடுக. 
       (2) பண்பு (quality) 
              (அ) பொய் என்று உணர்ந்தால் அதைப் பேச வேண்டாம். 
              (ஆ) தேவையான ஆதாரம் ஏதுமின்றிப் பேச வேண்டாம். 
       (3) உறவு (relation)      
         ஏற்புடையதை மட்டும் பேச வேண்டும். 
       (4) தன்மை (Manner)      
        தெளிவாகக் கூற வேண்டும். 
         
      
      
       மறைமுகமாகவோ     
        இருபொருள்படும்படியோ     இல்லாமல் சுருக்கமாக, முறையாகப் 
        பேச வேண்டும். 
       சுருங்கக் கூறின், கூற்றிலிருந்து 
        உள்ளுறைப் பொருண்மையைக் கண்டறிவதற்கு முன்பு கூற்றின் செம்பொருண்மை, உரையாடற் 
        சூழல், பேசுவோருக்கும் கேட்போருக்குமிடையே நிலவும் புரிதல்தன்மை, நம்பிக்கை, 
        உரையாடல் நியதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கிரைஸ் கருதுகிறார். 
       2.2.3 
        புறப்பொருட் கோட்பாடு (Object Theory)  
       மொழியின் கூறுகள், வெளியுலகப் 
        பொருள்களைக் குறிப்பதன் மூலம் தன் பொருளைப் பெறுகின்றன எனக்     
        கிரேக்க தத்துவவியலாளர் வெளிப்படுத்தியுள்ளனர். வெளியுலகக் கூறுகளைக் குறிக்கப் 
        பயன்படும் ஒரு கருவியே மொழி என்று அவர்கள் கருதினர். இவர்கள்  அண்டப் 
        படைப்புக் கோட்பாட்டாளர்  (cosmologists) என்றழைக்கப்பட்டனர். 
       இதன்படி, சொற்பொருளை உணர 
        வேண்டுமானால் அது சுட்டும் வெளியுலகப் பொருளை அறிய வேண்டும். 
        
       எ.கா: 
        (அ) 
        மரம் - இச்சொல்லின் பொருள்    
            
        அச்சொல் 
             சுட்டுகின்ற வெளியுலகப் 
        பொருளான மரம். 
       (ஆ) கருப்பு 
        - இச்சொல்லின் பொருள்    
          
        அச்சொல்      சுட்டுகின்ற 
        வெளியுலகப் பொருளின் குணமாகிய          
        கருப்பு (தன்மை). 
            
      
      
       (இ) நட 
        - இச்சொல்லின் பொருள்   - நடப்பதாகிய 
             செயல். 
      
       (ஈ) பின்னல் 
        - இச்சொல்லின் பொருள் - 
         வெளியுலகப்      
        பொருள் இரண்டு நிற்கும் இடங்களைக் காட்டும்      
        தொடர்பு. 
       
       இவ்வாறு ஒரு மொழிக்கூறின் 
        பொருளை வெளியுலகக் (புற) கூறுகளுடன் ஒப்புமைப்படுத்தும் கோட்பாடு  
        புறப்பொருட் கோட்பாடு என்று வழங்கப்படும். இக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள 
        இயலாது என்பதற்குப் பின்வரும் இடையூறுகள் / தடங்கல்கள் காரணமாகின்றன: 
       (அ) உடைய, ஐ போன்ற வேற்றுமை 
        உருபுகள் எந்த வெளியுலகப் பொருளையும் சுட்டவில்லை என்ற போதிலும் அவை பொருள் 
        கொண்டவை. 
       (ஆ) மரம் என்ற சொல்லின் பொருள் 
        என்ன? என்று ஒருவர் கேட்பாரே தவிர இராவணன் என்ற சொல்லின் பொருள் என்ன? என்று 
        கேட்க இயலாது. 
       (இ) ‘எங்கள் நாய்’ ‘பப்பீ’ 
        எனும் இரண்டு கூறுகளும் ஒருவர் வீட்டில் வளரும் நாயைக் குறிக்கலாம். ஆனால், 
        அவையிரண்டும் ஒரே பொருள் கொண்டவை என்று கருத முடியாது. 
       (ஈ) நான் எனும் சொல் அ, ஆ, 
        எனும் இருவரால் பயன்படுத்தப்படும் போது பேசுபவர்களான அ, ஆ என்பவர்களைக் குறிக்கும். 
        இவ்வாறு இரண்டு வெளியுலகப் பொருள்களைக் குறிப்பதால் நான் எனும் சொல்லைப் 
        பலபொருள் ஒருமொழி என ஏற்றுக்கொள்ள இயலாது.  
       (உ) வீடு எனும் சொல் குறிப்பிட்ட 
        வெளியுலகப் பொருளைக் குறிப்பதாகக் கொண்டால் உலகில் உள்ள தனித்தனி வீடுகளையும் 
        குறிப்பதற்குத் தனித்தனிச் சொற்களைப் பயன்படுத்த நேரிடும். அவ்வாறில்லாமல் 
        வீடுகளின் தொகுதி (set) என்பதை வீடு எனும் சொல் குறிப்பதாகக் கொண்டால், ‘இந்த 
        வீடு மஞ்சள் நிறம்’ ‘இந்த வீட்டுத் தொகுதி மஞ்சள் நிறம்’ எனும் வாக்கியங்களை 
        ஒரே பொருள்தரும் இருகூறுகள் எனக்கருதி விடுவோமே! 
       மேற்கூறிய குறைபாடுகளைக் 
        களையும் வகையில், கண்ணுக்குப் புலனாகும் வெளியுலகப் பொருள்கள் மற்றும் அனைத்தையும் 
        சுட்டும் பொதுப் பொருள் எனும் இரண்டு வகையினை, சொற்கள் சுட்டுவதாகச் சிலர் 
        கருத்துத் தெரிவித்தனர். இப்பாகுபாடானது எண்ணக் கோட்பாட்டின் தோற்றத்திற்கு 
        வித்திட்டது.     |