2.5 பீல்டு கோட்பாடும் பிற கோட்பாடுகளும்.

டிரையர் (Dreyer) உருவாக்கிய பீல்டு கோட்பாடு (Field Theory) ஜெர்மனியிலும் பிற இடங்களிலும் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இன்றுவரையிலும் அது தொடர்வதாகக் கூட எண்ண இடமுண்டு.

சொற்பொருளியல் வளர்ச்சிக்கு இக்கோட்பாட்டின் பங்களிப்பு பின்வரும் மூன்று நிலைகளில் அமைகிறது.

1. மொழியியலின் ஒரு பகுதியாகிய / பிரிவாகிய      சொற்பொருளியல் அமைப்பியலை அறிமுகப்படுத்தியதில்      இக்கோட்பாடு வெற்றி கண்டுள்ளது. அதுவரை இத்தகைய      அணுகுமுறையை ஏற்றுக்கொள்வதில் பெரிதும் தாமதம்      காணப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. இத்தகு      நிலையில் சேர்க்கைத் தொடர்புக் களம் (associative fields)      என்ற கருத்தும், அதைத் தொடர்ந்து டிரையரின்      பொருண்மைக்களம் (semantic fields) என்ற கருத்தும்      சொற்பொருளியலுக்கு முக்கிய அடி எடுத்து வைப்பதற்குத்      துணை நின்றன.

2. கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கப்படவிருந்த சில      பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு இக்கோட்பாடு துணை      நின்றது. ஜெர்மன் மொழியிலான அறிவுசார் பண்புக்      கூறுகளை (intellectual terms) வெளிப்படுத்தும் சொற்களை      டிரையர் ஆராய எடுத்துக்கொண்டதைக் குறிப்பிடலாம்.

3. எண்ணத்தின் மீதான மொழியின் செல்வாக்கு (Influence of      language on thought) எனும் முக்கிய பிரச்சினையை      அணுகுவதற்கு இக்கோட்பாடு மதிப்புமிக்க சிறந்த      வழிமுறையை நல்கியது. இன்றைய சமூகத்தின் கருத்து,      மதிப்பு, பார்வை ஆகியவற்றை மட்டுமே பொருண்மைக்      களங்கள் பிரதிபலிக்கவில்லை, மாறாக, அவற்றை உருப்பெறச்      செய்து நிலைபேறுடையனவாக மாற்றுகின்றன.     

2.5.1 சபீர் -ஒர்ஃப் கருதுகோள் (Sabir - Whorf      Hypothesis)

பீல்டு கோட்பாட்டுடன் தொடர்புடைய இக்கருதுகோளை இவ்விடத்தில்     குறிப்பிடுவது     பொருத்தமான ஒன்றாகும். எண்ணத்தின் மீதான மொழியின் செல்வாக்கு (தாக்கம்) பற்றிய கோட்பாடு இது.

எண்ணத்தின் மீது மொழி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது புதிய கருத்து அல்ல. இதைத்தான் ‘tyranny of words’ என்று டிக்கன்ஸ் (Dickens) குறிப்பிடுகிறார். அவருக்கு முன்னரே பேகனும் (Bacon)

“மொழியின் மீது மனம் ஆதிக்கம் செலுத்துவதாக மனிதர் நினைக்கின்றனர். ஆனால், நடப்பது என்ன? மனித மனங்களின் (எண்ணங் களின்) மீது மொழி ஆதிக்கம் செலுத்துகிறது” என்கிறார்.

சபீர் - ஒர்ஃப் கருதுகோள் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. விரிவாக விவாதிக்கப்பட்டது. பீல்டு கோட்பாட்டுடனான இதன் தொடர்பு குறிப்பிடத்தக்க அளவு சிறப்புப் பெறும் என்பதில் ஐயமில்லை.

2.5.2 தூண்டல் - விளைவுக் கோட்பாடு (Stimulus -      Response theory)     

உளவியல் அணுகுமுறையில் அமைந்த தூண்டல் விளைவுக் (துலங்கல்) கோட்பாடு (Stimulus-response theory) குறித்து இனி ஆய்வோம்.

பொருள் (meaning) என்றால் என்ன? எனும் கேள்விக்கு நேரிடையாக விடை கூற முயன்ற மூன்று கோட்பாடுகளில் தூண்டல் விளைவுக் கோட்பாடும ஒன்று. இதைத் தூண்டல் துலங்கல் கோட்பாடு என்றும் கூறலாம்.

இக்கோட்பாடானது இக்கால உளவியலில் பெரிதும் செல்வாக்குப் பெற்று விளங்கியது. தத்துவம், மொழியியல் ஆகிய துறைகளிலும் இது பின்பற்றப்பட்டது. புளூம்பீல்டு என்பார் இக்கோட்பாட்டின் ஆசிரியர் ஆவார். Language எனும் தமது நூலில் இக்கோட்பாட்டினை அவர் விவரித்துள்ளார்.

பேசுபவர் எந்தச் சூழலில் பேசுகிறார், அப்பேச்சு கேட்பவரிடம் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால்தான் பொருள் என்பதற்கு விளக்கம் கிடைக்கும். பொதுவாக, பேசுபவரின் தூண்டலை மையமாக வைத்தே பொருள் என்பதற்கு விளக்கம் காண முடியும் என்கிறார் புளூம்பீல்டு. இதை behaviourist view of meaning என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒருவரைப் பேசுமாறு (r-response) செய்த தூண்டல் (s- stimulus) இந்தப்பேச்சின் விளைவு (R-response) இதை ஆராய்ந்தால் பொருள் விளக்கிவிடும் - இதை,

S r ........ S ----R என்று வரைந்து காட்டுகிறார்                  புளூம்பீல்டு.

(S = Stimulus, r = response, s = speech, R = Result)

இக்கோட்பாட்டின்படி வெவ்வேறு விளைவுகளைக் காட்டும் ஒரு கூறைப் பலபொருள் குறிக்கும் ஒரு கூறு எனல் வேண்டும். இப்போது என்னுடன் வா என்ற வாக்கியம். ஒருவரிடம் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். அல்லது பலவித விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விளைவுகளை (அவ்வாக்கியத்தைக் கேட்டுவிட்டு சும்மா நிற்பது ஏன் என்று கேள்வி கேட்பது போன்றவை) ஏற்படுத்தும் தன்மையால் இவ்வாக்கியம் பலபொருள் குறிக்கும் ஒரு வாக்கியம் எனக் கருதப்பட வேண்டும். ஆனால், உண்மையில் அவ்வாறில்லை அல்லவா? எனவே, தூண்டல். விளைவு இரண்டினையும் பொருளின் பண்பாகக் கருத இயலாது.