சொற்பொருளானது சில இடங்களில், ஒருபொருளோடு ஒருபொருள் சார்ந்து விரிந்துகொண்டே செல்லும் தன்மையுடையது. அவ்வாறே, தான் சுட்டும் பொருள், தொடர்பு பொருளோடு சார்ந்திராவிடினும் அதனோடு இனந்தழுவலால் வேறு பொருளையும் குறிக்கும் தன்மையுடையது. எனவே, பொருள்கள் சார்பு பற்றி விரிந்துகொண்டும், இனந்தழுவிப் பொருளை உணர்த்துவனவாகவும்
விளங்கும்.
3.4.1 சொற்பொருள் சார்புத் தன்மையினால் விரிவடைதல்
சிறப்பு இயல்பால் பெயரிடப்பட்ட சொற்கள் பிறகு, தாம்
குறிக்கும் பொருளோடு சார்புடைய வேறு பொருளுக்கும்
பொருந்தும் தன்மையுடையனவாக மாறும்.
எ.கா : வேலி
இச்சொல் குறிக்கும் பொருட்கள் ஒன்றை ஒன்று சார்ந்து
விரிந்துகொண்டே செல்லும். முதலில், இச்சொல்
எல்லையைக்
குறித்தது. அதன் வளர்ச்சியே அவ்வெல்லையைச் சுட்டி நிற்கும்
‘மதிலை’ உணர்த்தியது. அம்மதிலால் பெறும்
காவலைக் குறித்தது.
அடுத்து அக்காவலுக்கு அடங்கிய
ஊரைக் குறித்தது. பிறகு
அவ்வூரின் பகுப்பாகிய
நிலத்தைக் குறித்தது. இதுவே சார்பு பற்றி
ஒருபொருள் விரிந்துகொண்டே செல்லும் தன்மையை
உணர்த்துதற்குச் சான்றாகும்.
இச்சார்பினால் விரிந்த சொற்களுள், தலையாகி நிற்கும்
சொல்லை ஆராய்ந்து தெரிந்துகொள்ளவில்லை எனில்,
சொற்பிறப்பைப் பற்றி நாம் அறிய முடியாது. எனவே, ஒரு
சொற்பிறப்பு ஆராய்ச்சிக்கு, சொற்பொருள் எங்ஙனம் உற்ற
துணையாக உதவும் என்பதை நாம் இதன் மூலம் உணர முடியும்.
‘வேலி’ என்ற அச்சொல்லின் வரிசையில் இறுதியாக நின்ற
நிலப்பொருளை மட்டும் நோக்கினால், இவ்வேலி என்ற சொல்லின்
தோற்றத்தை நாம் உணர முடியாமல் போய்விடும். வேலி என்ற
சொல்லுக்கு நிலம் என்ற பொருள் எவ்வாறு உண்டாகும்?
இவ்வினாவிற்கு விடைகாண்பது மிகவும் அரிதாகிவிடும். ஆனால்,
நிலப்பொருள் ஊரிலிருந்தும், ஊர்ப்பொருள் காவலிலிருந்தும்,
காவல் பொருள் மதிலிலிருந்தும், மதில்பொருள் எல்லையில்
இருந்தும் தோன்றியதை ஆழ்ந்து ஆராயும் போது வேலி என்ற
சொல்லும், எல்லை என்ற சொல்லும் ஒன்றே என்பதை அறியலாம்.
சொல்லுக்குரிய பொருட்கள் ஒன்றோடொன்று சார்ந்து விரிந்த
முறை, அகராதிகளுள் காட்டப்பட வேண்டும். அதுவே, தலைசிறந்த
ஒழுங்காகக் கருதப்படும். தமிழ்ச்சொற்கள் பலவற்றிற்கும்
உண்மையான தோற்றங்களான அடிச்சொற்கள் வரையறுத்து
வைக்கப்பட்டால், அகராதி ஆசிரியர்கள் அந்தந்தச் சொற்களின்
பல பொருட்களையும் அவ்வவற்றின் வரன்முறை மாறாது
உணர்த்திவிடுவர். கற்பவரும் எவ்விதக் குழப்பமும் இன்றி,
சொல்லுக்கான பொருளை எளிதில் புரிந்துகொள்வர்.
3.4.2 சொற்பொருள் இனந்தழுவுதலால் விரிவடைதல்
ஒரு சொல், தான்
சுட்டுகின்ற பொருளோடு சார்புள்ள பிற
பொருட்களையும் குறிக்கும். அது மட்டுமல்லாமல், ஒரு சொல்
தான் குறிக்கும் பிற பொருளோடு
சாரவில்லை எனினும்,
அதனோடு ஏதாவதொரு சிறப்புக்கருதி இன ஒற்றுமையால் வேறு
பொருட்களையும் குறிக்கும். இவ்வாறு குறித்தல் இனந்தழுவுதல்
எனப்படும்.
எ.கா:
புல் |
 |
பூண்டு
மூங்கில்
பனை
தென்னை
(சிங்களம்)
|
மேற்கூறிய எடுத்துக்காட்டில்,
தென்னையையும், பனையையும்
புல் என்று கூறினால், புல் என்னும் சொல்லின் தோற்றம் எது?
அத்தோற்றத்தினைப் பூண்டு மற்றும் மூங்கில் ஆகியவற்றோடு
எவ்வாறு தொடர்புபடுத்த முடியும்?
புல் < புழை
< பொள்
துளை உள்ளது எதுவோ
அதுவே புல்லாகும். மூங்கிலும்
உள்துளை உடையவை என்பதால் புல் என்று அழைக்கப்பட்டன.
எனவே வெளியே வைரமும், உள்ளே மென்மையும் கொண்டு
உள்துளை உடையனவாய் இருக்கின்ற பனையும், தென்னையும் புல்
என்ற அப்பெயரை அடைந்தன. ‘புறக்காழனவே புல் என மொழிப’
(தொல்.மரபியல், 86) என்று இலக்கணம் வரையறை செய்வதைக்
காணவும்.