ஒருசொல் எவ்வாறு பலபொருள்களை உடையதாக
விளங்குகின்றதோ அதுபோன்றே ஒரு பொருளைக் குறிக்கப் பல
சொற்கள் வழங்கி வருகின்றன. டாக்டர் மு. வ அவர்களின்
கூற்றுப்படி, ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் இருக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் இருப்பின் பிற பொருட்கள்
மறைந்துவிடும். பொருளை வேறுபடுத்த, சில அடைகள்
சேர்க்கப்பட்டும் சொற்கள் வழங்கப்படும்.
எ.கா : ‘நீர்’
‘நீர்’ என்ற சொல் தண்ணீரையும், ‘நீர்’ என்ற முன்னிலைப்
பெயரையும் குறிக்கின்றது. இவ்விரண்டும் பெயர்ச்சொற்களாகவே
இருக்கின்றன. எனவே, ‘நீர்’ என்பதை முன்னிலைப் பெயருக்கு
உரியதாக்கியும், பருகும் நீரைத் தண்ணீர் எனவும் குறிப்பிடத்
தொடங்கினர்.
தமிழ்மொழி சொல்வளம் கொண்டது என்பதால், ஒரு
பொருளைக் குறிக்கவே பல சொற்களை வழங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்பட்ட சொல்லாக்கத்தால், பல
புதிய சொற்கள் தமிழ்மொழியில் வந்து பயன்படத் தொடங்கின.
பழைய சொற்களுடன் புதிய புதிய சொற்களும் சேர்ந்து வழங்கி
வருகின்றன. இச்சொற்கள் ஒரே பொருளை உணர்த்தினும்,
இவற்றிடையே சிறுசிறு வேறுபாடு இருப்பினும், அச்சொற்கள்
வேறுபாட்டை எல்லாம் கடந்து ஒரே பொருளைக் குறிப்பதாக
வழக்கத்தில் இடம் பெற்றுள்ளன.
எ.கா: யானை, களிறு, பிடி, ஒருத்தல்
இச்சொற்கள் எல்லாம் சிறுசிறு பொருள் வேறுபாடு உடையன.
(i) யானை - ஆனை எனும் விலங்கு
(ii) களிறு - ஆண் யானை
(iii) பிடி - பெண் யானை
(iv) ஒருத்தல் - ஆண் யானை
இருப்பினும் மேற்கூறிய நான்கு சொற்களும் ‘யானை’யையே
குறிக்கின்றன.
இதுபோன்றே கடலைக் குறிக்கின்ற சொற்களையும்,
மலையைக் குறிக்கின்ற சொற்களையும் கீழ் வருமாறு காணலாம்.
வ.எண் |
பொருள் |
சொல் |
பொருள் வேறுபாடு
|
1. |
கடல் |
புணரி
முந்நீர்
ஆழி
பரவை
பௌவம்
கடல்
|
அலைகடல்
கடற்கரை
நீர்ப்பரப்பு
நுரை
சமுத்திரம்
|
2. |
மலை |
வெற்பு
சிலம்பு
ஓங்கல்
அடுக்கம்
மலை
குன்று
|
மலை
பக்கமலை
மேடு
ஒன்றின் மேல் ஒன்று ஏற்றல்
பருப்பதம்
சிறுமலை
|
மக்கள், குறிப்பிட்ட அப்பொருளின் மீது காட்டிய ஆர்வமே
ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் தோன்றுவதற்குக்
காரணமாகக் கொள்ளலாம் என டாக்டர் மு. வரதராசனார்
குறிப்பிடுகின்றார் (மொழி வரலாறு ப.98, 1973). யானைப்படையின்
மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் தமிழ்மக்கள் யானையைக்
குறிக்கப் பல சொற்களை வழங்கினர். அவ்வாறே ஈகைத் திறன்
மீதும் (ஈ, தா, கொடு, ஈகை, கொடை, ஒப்புரவு, வழங்கல்,
அளித்தல்), புகழ் மீதும் (புகழ், இசை, ஒளி) கொண்ட ஆர்வத்தால்
ஒருபொருட் பன்மொழிகள் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில்
மிகுதியாகி வந்துள்ளன.
4.3.1 சூழ்நிலைக்கேற்ற ஒருபொருள் பலசொல்
ஒரு மொழியைப் பொறுத்தவரை பயன்பாடு என்பதுதான்
மிக உயரிய சான்றாகும்.
எ.கா : கயல் போன்ற விழி
மேற்கூறிய உவமைத் தொடர், கயல்விழி எனத்
தொகையாக்கப்பட்டு, பின்னர் கயல்விழி வந்தாள் என
அன்மொழித் தொகையாக, கவிஞர்களின் கைவண்ணத்தால்
மாறியது. சொல்லுக்கும் பொருளுக்கும் இடையே நிலவும்
தொடர்பில் மாற்றங்கள் உருப்பெறலாயின.
இரு சொற்களால் உணர்த்தும் ஒரு பொருளை ஒரே
சொல்லாலும் உணர்த்த முடியும்.
எ.கா: களிறு நடந்தது
இந்த வாக்கியம் உணர்த்தும் பொருளைத்தான்,
‘ஆண்யானை நடந்தது’ எனும் வாக்கியமும் தருகிறது. எனவே,
களிறு எனும் சொல்லுக்குப் பதிலாக ‘ஆண்யானை’ எனும்
தொடரைப் பயன்படுத்த முடிகின்ற காரணத்தால், இவ்விரு
வடிவங்களும் ஒருபொருள் தன்மை வாய்ந்தவை என்பது
தெரிகிறது.
சூழ்நிலைக்கேற்ப, சில சொற்கள் ஒருபொருள் தன்மை
படைத்தன வாகின்றன என்பது உணரத் தக்கது.