5.4 தமிழ் மொழியில் சொற்பொருள் மாற்ற வகைகள் | |
தமிழ் மொழியிலும் காலத்திற்கேற்ப, சொற்கள் தரும் பொருளின் மாற்றங்கள் நிகழ்ந்து வந்ததைப் பல்வேறு சான்றுகளின் மூலம் உணரலாம். அம்மாற்றங்களைப் பல வகைகளாகப் பின்வருமாறு காணலாம். 1. ஒரு சொல் ஒருபொருள் பேச்சு மொழியில் ஒரு சொல்லானது, அதன் பொருளை உணர்த்துகின்றது. எழுத்து மொழியின் செல்வாக்கால் ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களும் வழக்கத்தில் உள்ளன. ஒருசொல் இருபொருளை உணர்த்தி வந்தால் அவற்றுள் ஒருபொருள் மட்டும் வழக்கில் வழங்க, மற்றொரு பொருள் அழிவையோ அல்லது திரிபையோ அடைகிறது. எ.கா: கவலை இச்சொல் இரண்டாகப் பிரியும் வழியிடத்தையும், மனக்கவலையையும் உணர்த்தி வந்தது. இன்று, மனக்கவலையை மட்டும் உணர்த்தி, மற்றொரு பொருள் அழிந்தது. போர் என்ற சொல் வைக்கோல் போரையும், படைவகுத்து நிகழ்த்தும் போரையும் உணர்த்துவது. பண்டைக் காலத்தில் முன்னதை உணர்த்தப் ‘போர்வு’ என்று சிறிது வேறுபட்ட சொல் வழங்கியது. இக்காலத்தில், வைக்கோல் என்ற அடையடுத்து அப்பொருள் உணர்த்தப்படுகின்றது. 2. ஒரு பொருளுக்கு ஒருசொல் ஒரு பொருளை உணர்த்த ஒரு சொல்லே வழங்கும். இருசொல் வழங்கின், ஒன்று நிற்க, மற்றொன்று அழிந்துவிடும் அல்லது வேறு பொருளுணர்த்தத் தொடங்கும். எ.கா (அ) வீடு, இல், மனை. மேற்கூறிய சொற்கள் ஒருபொருளை உணர்த்தும் சொற்களாகும். இன்று பேச்சுவழக்கில் வீடு என்ற சொல்லே அப்பொருளை உணர்த்துவதாக நிலைபெற்றுள்ளது. இல் என்பது இலக்கிய வழக்கோடு நின்றுவிட்டது. பேச்சு வழக்கில் அது அழிந்துவிட்டது. மனை என்பதோ, பேச்சுவழக்கிலும் வாழ்கின்றது. ஆனால் வீடு கட்டுவதற்குரிய நிலப்பகுதி என்று சிறிது வேறுபட்ட பொருளைக் குறிக்கின்றது. (ஆ) குணக்கு, கிழக்கு என்னும் இருசொல்லும் ஒரே பொருளை உணர்த்துவன. அவற்றுள் குணக்கு இன்று பேச்சுவழக்கில் இடமிழந்துள்ளது. அவ்வாறே, குடக்கு, மேற்கு என்பவற்றில் குடக்கு மறைந்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு சொல்லாகவே வழங்கிய வடக்கு, தெற்கு என்பன இன்றும் வாழ்கின்றன. (இ) நடை, நடத்தல், நடக்கை, நடப்பு இவை முதலில் ஒரு பொருளைத் தருவதாக வழங்கியிருக்கக் கூடும். இன்று, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் வழங்குகின்றன. எனினும் நான்கு சொற்களுமே வாழ்கின்றன. 3. சிறப்புப் பொருள்பேறு ஒரு காலத்தில் பலவற்றிற்கும் பொதுவாக இருந்த சொல், தற்காலத்தில் அவற்றுள் ஒன்றையே உணர்த்துவதைச் சிறப்புப் பொருட்பேறு என்பர். எ.கா (அ) தங்கம், வெள்ளி, செம்பு முதலியவற்றைக் குறித்த பொன் என்ற சொல், இன்று தங்கத்தை மட்டும் குறிக்கின்றது. (ஆ) எள்ளின்நெய், பாலின்நெய் முதலியவற்றைக் குறித்த நெய் என்ற சொல் இன்று, பாலின் நெய்யையே குறிக்கின்றது. (இ) பழையது பழமையானவற்றையெல்லாம் குறித்த பழையது என்ற சொல், இன்று பழைய சோற்றையே குறிக்கின்றது. (ஈ) இழவு எப்பொருளை இழந்தாலும் அதனைக் குறித்த இழவு என்ற சொல், இன்று இறப்பாகிய சாவை மட்டும் உணர்த்துகின்றது. (உ) புல் புறக்காழ் உடைய பலவற்றையும் உணர்த்திய புல் என்ற சொல், இன்று நிலத்தில் வளரும் புல்லையே குறிக்கின்றது. (ஊ) மான் விலங்குகளைப் பொதுவாகக் குறித்த மான் என்ற சொல், இன்று மான் (deer) என்ற இனத்தை மட்டும் குறிக்கின்றது. (எ) பெண்சாதி பெண்ணினத்தைக் குறித்த பெண்சாதி என்ற சொல், இன்று மனைவியை மட்டும் குறிக்கின்றது. (ஏ) அரண்மனை காவல் அமைந்த வீட்டைக்குறித்த அரண்மனை என்ற சொல், இன்று அரசன் வாழுமிடத்தை மட்டும் குறிக்கின்றது. (ஐ) கல்லறை கல்லால் கட்டப்பெற்ற அறையைக் குறித்த கல்லறை என்ற சொல், இன்று இறந்தவர் மீது கட்டப்படும் அறையையே குறிப்பதாயிற்று. 4. பருப்பொருள் பேறு (concretion) முதலில் நுண்மையான பொருளை உணர்த்தி வந்த சொல், பின்னர் பருப்பொருளை உணர்த்தத் தொடங்கியது. எ.கா விருந்து இச்சொல் புதுமை என்னும் பண்பை உணர்த்தி வந்தது. இப்போது வீட்டிற்குப் புதியதாக வந்தவரையும், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் இடம்பெறும் சிறப்பு உணவையும் உணர்த்துதலைக் காணமுடிகிறது. 4. மென்பொருள் பேறு (Hyperbole) முன்பு வன்மையான பொருளுடையதாக வழங்கிய சொல்லை, தற்போது சிறிது வன்மை குறைந்த ஒன்றுக்கு உரியதாக மென்மைப்படுத்தி வழங்குகின்றனர். எ.கா: அமர்க்களம் அமர்க்களம் என்ற சொல் பழங்காலத்தில் நால்வகைப் படையுடன் போரிட்ட யானையும், குதிரையும், மனிதரும் அழியும் இடத்தைக் குறித்தது. இப்போது வீட்டின் ஒரு பகுதியில் சிறுவர்கள் ஆரவாரம் செய்து விளையாடிக் குழப்பம் உண்டாக்குவதையும், இது போன்றவற்றையும் உணர்த்துகின்றது. 5. வன்பொருள்பேறு (Litotes) முன்னர் மென்மையான பொருளுடன் வழங்கிய சொல்லை, இப்போது வன்மையான பொருள் உணர்த்த வழங்குகின்றனர். எ.கா அவர் அங்கே ஒழிந்தார் என்றால் பழங்காலத்தில் மற்றவர்களோடு வெளியே புறப்படாமல் அவ்விடத்திலேயே நின்றுவிட்டார் என்பது பொருளாகும். இக்காலத்தில் அழிந்துவிட்டார் என்ற பொருள் தருகிறது. 6. மங்கல வழக்கு (Meliorative tendency) மங்கலம் அல்லாதவற்றைக் கூறும்போது, மங்கலமான வேறு சொற்களால் மறைத்துக் கூறுவோம். அதனால் அச்சொற்களின் பொருள் வேறுபடுகின்றது. எ.கா துஞ்சினார், மறைந்தார் என்ற சொற்கள் இவ்வாறே செத்தார் என்ற பொருள் உணர்த்துவனவாயின. 7. இடக்கரடக்கல் (Pejorative tendency) நாகரிகமல்லாத சொற்களை மறைத்து அவற்றின் பொருளை நாகரிகமான பிற சொற்களால் புலப்படுத்துவோம். அதனால் அச்சொற்களும் பொருள் வேறுபடுவதைக் காணமுடியும். எ.கா வாய்பூசல் (உணவுக்குப் பிறகு கை, வாய் தூய்மையாக்குதல்), கால்கழுவல் மேற்கூறிய சான்றுகளைப் போன்று பல சொற்கள் இவ்வாறு வழங்குகின்றன. 8. ஆகுபெயர் (Metonomy, Synecdoche) ஒரு பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளைக் குறிக்க வழங்குவதே ஆகுபெயர். எ.கா அ) வெற்றிலை என்பது சினைக்குப் பெயர்; வெற்றிலை நட்டான் என்பதில் முதலுக்கு (செடிக்கு)ப் பெயராகி நின்றது. ஆ) உலகம் என்பது இடத்தின் பெயர்; உலகம் பொல்லாதது என்பதில் உலகமக்களை உணர்த்துகின்றது. இவ்வாறே காலம், பண்பு, தொழில் முதலிய பலவற்றின் பெயர்கள் அவற்றோடு தொடர்புடையனவற்றை உணர்த்துதல் உண்டு. 9. உருவகம் (Metaphor) ஒரு பொருளை அதற்கு உரிய சொல்லால் உணர்த்தாமல், தெளிவாக்க விரும்பி, உருவகப்படுத்தி அந்த உருவகச் சொல்லால் உணர்த்துதல். எ.கா அ) பழுத்த கிழவர் என்பதில் பழுத்தல் என்பது உருவகமாகிப் பொருள் உணர்த்தலைக் காணமுடிகிறது. பழுத்தல் பழத்தின் தன்மை ஆதலின், இங்குக் கிழவர் பழம்போல் ஆனார் என்ற பொருள் பயக்கின்றது. ஆ) பந்தலின் கால், மனையின் அடி, புட்டியின் கழுத்து, நாற்காலியின் கை, மரத்தின் இலை, கட்டுரையின் தலைப்புச் சொற்கள் முதலியவை உருவகப்பொருள் உணர்த்துதலைக் காணலாம். |