6.5 பழங்காலத் தமிழ் - தற்காலப் பேச்சுவழக்கு ஆகிய
இவற்றினிடையே ஏற்பட்ட சொற்பொருள் மாற்றம்

    மொழி என்றதும் எழுத்து வடிவத்துடன் இலக்கிய, இலக்கணங்களை உடையதுதான் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். எழுத்து வடிவமில்லாது பேச்சுவழக்கில் மட்டும் பயின்று வரும் ஆயிரக்கணக்கான பழங்குடி மொழிகளும் நம் நாட்டில் உண்டு. ஒரு மொழி பரந்த பரப்பில் பேசப்படும் பொழுது அதில் வேறுபாடுகள் காணப்படுதல் இயற்கையாகும். கிளைமொழி (dialect) என்பது ஒரு குறிப்பிட்ட பேச்சுமொழியின் வகையைக் குறிப்பதாகும். பல தனி மனிதப் பேச்சு வழக்குகள் ஒரு கிளைமொழியையும், பல கிளைமொழிகள் சேர்ந்து ஒரு மொழியையும் உருவாக்குகின்றன. மொழிக்குடும்ப வரலாற்றிற்கு மொழியும், ஒரு மொழி வரலாற்றிற்குக் கிளைமொழி     ஆய்வும்     மிகவும் தேவையானவையாகக் கருதப்படுகின்றன. எனவே தான், தமிழ்மொழி வரலாற்றைப் பற்றி ஆராயும்பொழுது, தமிழ்க் கிளைமொழிகளின் வாழ்வையும் வளர்ச்சியையும் ஆராய வேண்டியுள்ளது.

    மக்கள் சிறுசிறு குழுக்களாக வாழும்போது மலை, ஆறு, கடல் போன்ற இயற்கையமைப்பில் பிரிக்கப்பட்டு அவர்களிடையே அதிகமான தொடர்பின்றி இருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்பட்டிருப்பதால், இவ்விரண்டு இடங்களிலும் பேசும் தமிழ்மொழியில் மிகுந்த வேறுபாட்டைக் காணலாம். செய்தித் தொடர்பில் குறுக்கீடுகள் (interferences) அதிகமானாலும் மொழியில் மாற்றங்கள் ஏற்படும். கிளைமொழியை வழங்கும் இடம் பற்றி வட்டாரக் கிளைமொழி என்றும், பேசுகின்ற மக்களின் சமூகநிலை பற்றிச் சமூகக் கிளைமொழி (social dialect) என்றும் கூறலாம்.

    ஒரே மொழி வட்டாரத்திற்கு வட்டாரம், சாதிகளுக்கு சாதி, தொழிலுக்குத் தொழில் வேறுபட்டாலும் கூட, அவற்றிடையே ஒரு பொதுத் தன்மையைக் காண்கிறோம். எழுத்து மொழியுடன் பெரும்பாலும் ஒத்துச்செல்லும் பேச்சு வழக்கினைப் ‘பொதுப் பேச்சுமொழி’ (standard spoken language) அல்லது ‘பொதுக்கிளை மொழி’ (standard dialect) எனலாம்.

    சங்க காலத்திலேயே கிளைமொழிகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் காண்கிறோம். சங்ககாலப் புலவர்கள் பல்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்களாதலால், அவ்வட்டார வழக்கினையும் அவர்கள் தம் பாடல்களில் காண்கிறோம். புறநானூற்றில், ‘நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை’ என்பதில் ‘ஓசை’ என்பது ‘பொரியல்’ என்ற பொருள் வழங்குகிறது. கலித்தொகையில் ‘செரு’ என்ற சொல் ‘வயல்’ என்ற பொருளிலும் திருக்குறளில் ‘பெற்றம்’ என்ற சொல் ‘பசு’ என்ற பொருளிலும்
வந்துள்ளன. தொல்காப்பியர் குறிப்பிடும் ‘திசைச்சொல்’ என்ற வழக்கு, கிளைமொழியைக் குறிப்பதாகக் கூறுவர். தொல்காப்பியர் பன்னிரண்டு வட்டாரக் கிளைமொழிகளையும், உரையாசிரியர்கள் செந்தமிழுடன் கொடுந்தமிழ், சான்றோர் வழக்கு, குழூஉக்குறி, தொழில் பற்றிய வழக்கு எனப் பல நிலைகளில் பேச்சு மொழியினையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

    தற்காலப் பேச்சு மொழியிலும் தொல்காப்பியர் காலச்சொற்கள் சிலவும், சங்ககாலச் சொற்கள் பலவும் வழக்கில் இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் உணர்த்தப்பட்ட பொருளில் இருந்து, தற்காலத்தில் உணர்த்தப்படும் பொருள் வேறுபட்டிருப்பதை நன்கு உணர முடிகின்றது. அத்தகைய மாறுபாட்டை உணர்த்த, கீழ்க்காணும் பட்டியல் பெருந்துணையாக விளங்கும்.

1. அரசு 1. அரசாட்சி, அரசன் (தொல்காப்பியம்)

         2. அரசன், அரசாட்சி (சங்க இலக்கியம்)


தற்காலப்பொருள்: 1. அரசாங்கம் / அரசு     government.
         குடும்பக்கட்டுப்பாடு பற்றி அரசாங்கத்தின்
         /அரசின் பிரச்சாரம் பயன் அளித்துள்ளது.

         2. அரசனின் ஆட்சி; rule or reign (of a
         king). நீண்ட காலம் அரசு புரிந்தவர்.

         3. ஒரு துறையில் ‘இணையற்றவர்’ என்ற
         பொருளில் வழங்கும் பட்டம்; a word
         added to the branch or field in
        which one excels, used as a title.
         கவியரசு.

(2) நெய் 1. எண்ணெய் (தொல்)
         நெய்

                 2. நெய், வெண்ணெய், வெண்ணெயை உருக்கி
         உண்டாக்கும் பொருள்.


தற்காலப்பொருள்: 1. (நெய்ய,     நெய்து) (துணி,     பாய்
     முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில்) நீளவாட்டில்
     நூலை அல்லது கோரையை வைத்துக் குறுக்குவாட்டில்
     கோர்த்துப் பின்னுதல்; weave (cloth, mat, etc)

     2. உருக்கிய வெண்ணெய்; clarified butter; ghee

(3) பழுது 1. பயன்படாத நிலை (தொல்)

         2. குற்றம், தீங்கு (பழுதெண்ணும் - குறள், 639)


தற்காலப்பொருள்: 1. சீர்கெட்ட நிலை; கோளாறு: damaged
         state; பழுதான சாலைகளைச் சரிசெய்யும்
         பணி விரைவில் தொடங்கும்/ இயந்திரத்தில்
         பழுது எங்கிருக்கிறது என்று தெரிந்தால்
         அல்லவா செப்பனிட முடியும்?

         2. குற்றம் குறை; flaw; fault. செய்யும் முறை
         எப்படியிருந்தாலும் அவரது நோக்கத்தில்
         யாரும் பழுது சொல்ல முடியாது.

(4) உழக்கு 1. ஓர் அளவை (தொல்)

                 2. மிதித்தல் (கலித்தொகை, 106)

                 3. கொன்று திரிதல் (சினஞ்சிறந்து களன்
                 உழக்கவும் - மதுரைக் காஞ்சி, 48)

தற்காலப்பொருள் : 1. (முன்பு வழக்கில் இருந்த முகத்தல்
         அளவையான) படியில் நான்கில் ஒரு
                     பாகம் அல்லது இரண்டு ஆழாக்கு; one
         fourth of a measure (which is roughly
         half quarter of a litre)

                 2. மேற்சொன்ன அளவு குறிக்கப்பட்ட கலம்;
                 a container of this capacity.

(5) கிழமை 1. இயல்பு; பண்பு, உரிமை (தொல்.)

                 2. நாலு தாக்குடைய தாளவகை, உரிமை.
         (தொல்.)

தற்காலப்பொருள் : 1. வாரத்தின் ஏழு நாட்களையும் பொதுவாகக்
         குறிப்பிடும் சொல்; வார நாளின்
         பொதுப்பெயர்; day (of th e week).
         இன்று என்ன கிழமை?

(6) இறுதி 1. முடிவு (தொல்.)
         2. கேடு, முடிவுகாலம் (ச.இ)

தற்காலப்பொருள் : 1. (தொடங்கப்பட்ட ஒன்று அடையும்) முடிவு;
         கடைசி; end (of something which has
         begun). தன் வாழ்க்கையின் இறுதிக்
         கட்டத்தில் இதை எழுதினார்./ கச்சேரியில்
         இறுதிவரை யாரும் எழுந்திருக்கவில்லை.

         2. மாற்ற முடியாதது; (of a decision, offer,
         etc) final. வழக்கில் உச்சநீதிமன்றம்
         வழங்கும் தீர்ப்பே இறுதித் தீர்ப்பு/ இது
         தான் உன் இறுதியான பதிலா?

         3. அதற்கு மேல் தொடராதது; கடைசி; last;
         final. பொறியியல் கல்லூரி இறுதி யாண்டு
         மாணவர்கள் / இறுதி ஆட்டம் நாளை
         தொடங்குகிறது.

(7) இறை 1. அரசன் (தொல்.)

         2. உயரம், தமையன் இறந்துபடும் செய்கை,
         இறைவன், திரட்சி, வீட்டிறப்பு, முன்கை,
         சந்து, தங்குதல், அரசன், கப்பம், தலைவன்


தற்காலப்பொருள்:
  1. (இறைந்து என்னும் எச்ச வடிவம் மட்டும்) (பொருள்கள்) சிதறுதல்; அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்; be spread in all directions; be strewn (all over) ; be scattered. மூடை பிரிந்து விட்டதால் வீடு முழுதும் அரிசி இறைந்திருத்தது. / திருடன் வந்துவிட்டுப் போன மாதிரி வீட்டில் சாமான்கள் இறைந்து கிடந்தன.

  2. (இறைக்க, இறைத்து) (தாறுமாறாக அள்ளி) வீசுதல்; சிதறச் செய்தல்; throw (in a disorderly way); scatter; strew; splash. காரில் இருந்தபடியே ஒருவர் துண்டுப் பிரசுரங்களை இறைத்துக்கொண்டு சென்றார். / வேகமாக வந்த பேருந்து நடைபாதையில் நின்றிருந்தவர்கள் மீது சேற்றை வாரி இறைத்துவிட்டுச் சென்றது./ கோபத்தில் வார்த்தைகளை இறைக்காதே, பிறகு அள்ள முடியாது.

  3. வீணாகச் செலவுசெய்தல்; விரயமாக்குதல்; squander. பணத்தை இறைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று ஆகிவிட்டது!

  4. (இறைக்க, இறைத்து) (நீரை) வெளிக்கொண்டு வருதல்; வெளியேற்றுதல்; draw (water from a well); pump out (from a pit, mine, etc.) காலையில் எழுந்ததும் கிணற்றிலிருந்து பத்துக்குடம் தண்ணீர் இறைப்பார்/. நிலக்கரிச் சுரங்கத்தில் புகுந்துவிட்ட நீரைப் பெரிய இயந்திரங்களால் இறைத்தார்கள்.

  5. (வயலுக்கு நீர்) பாய்ச்சுதல்; irrigate. இன்னும் கிராமத்தில் மலையால் வயலுக்கு நீர் இறைப்பதைப் பார்க்கலாம்.

  6. கடவுள்; God. இறை வணக்கம்/ இறை வழிபாடு. மேற்கூறப்பட்ட பல சான்றுகளின் மூலம், பழங்காலச் சொற்கள் உணர்த்தும் பொருட்கள் பல இக்காலப் பேச்சுவழக்கில் சிற்சில மாற்றங்களை அடைந்தும், முழுமையான மாற்றங்களை அடைந்தும் மொழிவரலாற்றில், மொழி வளர்ச்சியினைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளன. மொழி வரலாற்றிற்குச் சொற்பொருள் மாற்றம் எந்த அளவில் பங்கு வகிக்கிறது என்பதை இவற்றின் மூலம் உணர்ந்துகொள்ள முடிகிறது.