இடைக்காலத்தில் வழங்கிய கிளைமொழிகளைப் 
        பற்றி அறிவதற்கு இலக்கியங்களைக் காட்டிலும், அக்காலத்தில் தோன்றிய இலக்கண 
        நூல்களின் உரைகளும், கல்வெட்டுகளும் பெரிதும் துணைபுரிகின்றன. இடைக்காலத்தில் 
        தோன்றிய நன்னூலும் அதன் உரைகளும் கிளைமொழிகளைப் பற்றிக் கூறிய கருத்துகளை 
        ஏற்கனவே பார்த்தோம். ஆனால் அக்கருத்துகள் பழங்காலத்தில் வழங்கிய கிளைமொழிகளைப் 
        பற்றியனவாக இருந்தனவே     தவிர,     
        இடைக்காலத்தில்     வழங்கிய 
 கிளைமொழிகளைப் பற்றியனவாக     இல்லை. ஆனால்
 இடைக்காலத்தில் தோன்றிய மற்றோர் இலக்கண நூலாகிய
 வீரசோழியத்திற்கு அமைந்த உரை இடைக்காலத்தில் வழங்கிய
 கிளைமொழிகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும்
 இடைக்காலத்தில் தமிழ் நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் 
 
 உள்ள கோயில்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் 
 
 அக்காலக் கிளைமொழிகளின் இயல்புகளை 
 விளக்கும் வகையில்
 அமைந்துள்ளன.
 
 
 6.4.1 வீரசோழிய உரை குறிப்பிடும் கிளைமொழிகள்
 
 
     இடைக்காலத்தில் கி.பி. 11 ஆம்     நூற்றாண்டில் 
 
 தோன்றியது வீரசோழியம்.     இந்நூலை     இயற்றியவர் 
 
 புத்தமித்திரனார். இந்நூலுக்கு இவருடைய மாணவராகிய
 பெருந்தேவனார் 
 விரிவான உரை எழுதியுள்ளார். அவ்வுரையில்
 பெருந்தேவனார், இழிந்த பேச்சுவழக்குகள் என்று 
 தாம் கருதும்
 சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவை தமிழ்நாட்டில் உள்ள 
 
 மூன்று வட்டாரங்களில் பரவியிருந்தன என்று குறிப்பிடுகிறார்.
  கருமண் நிலப்பகுதி, காவிரி பாயும் பகுதி, 
 பாலாறு பாயும்
 பகுதி என்பன அவர் குறிப்பிடும் வட்டாரங்கள். 
 இவற்றில்
 வழங்கிய இழிந்த வழக்குகளாக அவர் குறிப்பிடும்
 கிளைமொழிகளைக் காண்போம்.
 
 
 
 
 
 
 
 
 
          இது கொங்குநாடு என்று அழைக்கப்படும் 
        வட்டாரம் ஆகும். தற்போதைய கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டப் பகுதிகளை 
        இடைக்காலத்தில் உள்ளடக்கிய வட்டாரம் ஆகும். இவ்வட்டாரத்தில் ழகர ளகர மெய்கள் 
        மயங்கி வருகின்றன.
 
 
 
 
     1. ழ் > ள்
 
 
 
 
     நாழி > நாளி
      உழக்கு > உளக்கு
     கோழி > கோளி
     வாழை > வாளை
 
 
 
 
     2. ள் > ழ்
 
 
 
 
     விளக்கு > விழக்கு
     பளிங்கு > பழிங்கு
     இளமை > இழமை
 
 
 
 
 
 
 
 
 
          இது     இடைக்காலத்தில் 
        சோழநாடு     ஆகும். இவ்வட்டாரத்தில் இரட்டித்து வரும் 
        இரட்டை றகரம், ‘வெற்றிலை > வெத்திலை’ என இரட்டைத் தகரமாக மாறாமல், இரட்டைச் 
        சகரமாக மாறுகிறது.
 
 
 
 
 
     வெற்றிலை > வெச்சிலை
     முற்றம் > முச்சம்
     கற்றை > கச்சை
 
 
 
 
 
 
 
 
 
          இது பல்லவ நாடு ஆகும். தற்போதைய 
        செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்னார்க்காடு மாவட்டப் பகுதிகளை இடைக்காலத்தில் 
        உள்ளடக்கிய வட்டாரம் ஆகும்.
 
          இவ்வட்டாரத்தில் ‘வீட்டின் பக்கத்தில் 
        நின்றது’, ‘நெல்லின் பக்கத்தில் நின்றது’ என்பனவற்றிற்குப் பதிலாக ‘வீட்டுக்கா 
        நின்றது’, ‘நெல்லுக்கா நின்றது’ என்னும் தொடர்கள் வழங்குகின்றன.
 
 
 
 
 -  மேலும் சில கிளைமொழி வழக்குகள்
 
 
 
 
 
 
          வீரசோழிய உரையாசிரியர் வட்டாரம் 
        எதனையும் குறிப்பிடாமல், மேலும் சில இழிந்த கிளைமொழி வழக்குகளைக் குறிப்பிடுகிறார். 
        அவை வருமாறு:
 
 
 
 
     1. ரகரம் மறைதல்
 
 
      இவனைப் பார்க்க > இவனைப் பாக்க
 
 
     2. ஆக்க அசைநிலை தோன்றுதல்
 
 
      இங்கு > இங்காக்க
     அங்கு > அங்காக்க
 
 
     3. இரட்டை றகரம் இரட்டைத் தகரமாதல்
 
 
      சேற்றுநிலம் > சேத்துநிலம்
     ஆற்றுக்கால் > ஆத்துக்கால்
 
 
     4. ழகரம் யகரமாதல்
 
 
      கோழி முட்டை > கோயி முட்டை
     வாழைப் பழம் > வாயைப் பயம்
 
 
     5. யகரம் சகரமாதல்
 
 
      உயிர் > உசிர்
     மயிர் > மசிர்
 
 
 
 
 6.4.2 கல்வெட்டுகள் குறிப்பிடும் கிளைமொழிகள்
 
 
          இடைக்காலத்தில் கி.பி. 14 ஆம் 
        நூற்றாண்டு முதல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டின் 
        பல்வேறு வட்டாரங்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள், இடைக்காலக் கிளைமொழிகளைப் 
        பற்றி அறிய உதவுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
          ஒரே பொருளை உணர்த்த ஒரு சொல் ஒரு 
        வட்டாரத்திலும், இன்னொரு சொல் மற்றொரு வட்டாரத்திலும் உள்ள கல்வெட்டுகளில் 
        பயன்படுத்தப்பட்டிருக்கக் காணலாம். இதனைச் சில சான்றுகள் கொண்டு காண்போம்.
 
 
 சான்று 1:
  சம்வத்சரம் - வருஷம்
 
 
 
 
          இங்கே கூறப்படும் ‘சம்வத்சரம்’ 
        என்றசொல் ஆண்டைக் குறிக்கும் சொல்லாகச் செங்கல்பட்டு, வட ஆர்க்காடு மாவட்டக் 
        கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்டைக் குறிக்க மற்றப் 
        பகுதிக் கல்வெட்டுகளில் ‘வருஷம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
 
 சான்று 2:
     புத்திர பவுத்திர பாரம்பரியம் - மக்க மக்கள்
 
 
          ஒருவனுடைய மகன் மற்றும், பேரன் 
        வழியில் தொடர்ந்து வரக்கூடிய பரம்பரையைப் பற்றிய சொல்லாகப் ‘புத்திர பவுத்திர 
        பாரம்பரியம்’ (புத்திர- மகன்; பவுத்திர- பேரன்; பாரம்பரியம்-பரம்பரை) என்ற 
        சொல், மதுரை, வட ஆர்க்காடு மாவட்டக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அதே பொருளைக் 
        குறிக்கக் கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகளில் ‘மக்க மக்கள்’ என்ற சொல் 
        காணப்படுகிறது. தற்காலத்திலும் சில பகுதிகளில் ‘மக்க மக்கள்’ என்ற சொல் ‘மக்க 
        மக்க’ என்று மேலே குறிப்பிட்ட பொருளில் வழங்கிவரக் காணலாம்.
 
 
 சான்று 3:
     அனுபவி - மய்யாள்
 
 
          ‘அனுபவி’ என்ற பொருளைக் குறிக்கும் 
        ‘மய்யாள்’ என்ற சொல் கி.பி. 15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த கன்னியாகுமரி,     
        திருநெல்வேலிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கி.பி. 1598 ஆம் ஆண்டு திருநெல்வேலி 
        மாவட்டக் கல்வெட்டு ஒன்றில் ‘அனுபவி’ என்ற சொல்லே காணப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
          இடைக்காலக் கல்வெட்டுகளில் உள்ள 
        கிளைமொழிகளில் குறிப்பிடத்தக்க ஒலிமாற்றங்களைக் காணமுடிகிறது. அவற்றுள் சிலவற்றைக் 
        காண்போம்.
 
 
 
 
     1. ன்ற் > ண்ண்
 
 
 
 
          புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி 
        மாவட்டக் கல்வெட்டுகளில் இந்த ஒலிமாற்றம் காணப்படுகிறது.
 
      ஒன்று > ஒண்ணு
     கொன்று > கொண்ணு
 
          தென்மாவட்டங்களில் இருந்த இந்த 
        ஒலிமாற்றம், வட மாவட்டங்களுக்கும் சென்றது. கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த 
        வடமாவட்டக் கல்வெட்டு ஒன்றில் ‘ன்ற் > ண்ண்’ மாற்றம் காணப்படுகிறது.
 
      பன்றி > பண்ணி
 
 
 
 
      2. ற்க், ட்க் > க்க்
 
 
 
 
          இந்த ஒலிமாற்றம் தமிழ்நாட்டில் 
        உள்ள எல்லாப் பகுதிகளிலும் உள்ள கி.பி. 14, 15, 16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் 
        காணப்படுகிறது.
 
     மேற்கு > மேக்கு
     தெற்கு > தெக்கு
     விற்கிற > விக்கிற
     உட்கிடை > உக்கிடை
 
 
 
 
     3. ரகர மறைவும், ரகரத் தோற்றமும்
 
 
 
 
          இடைக்காலக் கல்வடெ்டுகளில்     
        இம்மாற்றங்கள் காணப்படுகின்றன.
 
     அ) கீர்த்தியை > கீத்தியை
     கார்த்திகை > காத்திகை
     தளர்ந்து > தளந்து
     வார்த்து > வாத்து
     பார்க்க > பாக்க
 
 இச்சொற்களில் ரகரம் மறைகின்றது.
 
     ஆ) கோவை > கோர்வை
     சேவை > சேர்வை
     சீமை > சீர்மை
 
 இச்சொற்களில் ரகரம் தோன்றுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
          சமூகக் கிளைமொழி பற்றியும் கல்வெட்டுகளில் 
        காணமுடிகிறது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில்,
 
     செய்தவாள்
 
 
          என்ற சொல் ‘செய்தவர்’ என்ற பொருளிலும், 
        கி.பி. 17 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில்,
 
 
 
     வைஷ்ணவாள்
 
 
          என்ற சொல் ‘வைணவர்’ என்ற பொருளிலும் 
        வழங்கக் காணலாம். இவ்வடிவங்களை இக்காலத்திலும் பிராமணர்களின் பேச்சு வழக்கில் 
        காணலாம்.